பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாச்சியேந்தல்

ஜனநாயகம் உலகெங்கும் ஒடுக்கப்படுகின்ற மக்களின் விடுதலைக்கு நம்பிக்கையூட்டும் மய்ய நீரோட்டமாகச் செயல்படுகிறது. மக்களின் உறவுப் பரிமாற்றங்களை, வாழ்வுக் காப்பீடுகளை எல்லை கடந்தும், நாடு கடந்தும் எந்தவித சேதாரமுமின்றி ஓர் ஒழுங்கின் கீழ் நெறிப்படுத்த முடிகிறதென்றால் ஜனநாயக இறையாண்மையின் நீரோட்டத்தால்தான் அவை சாத்தியமாகின்றன. மிகப்பெரிய இழப்புகள் எதுவுமின்றி, ஒடுக்கப்படுகின்ற மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய அரண் இது ஒன்றுதான். எனவேதான், புரட்சியாளர் அம்பேத்கர் தன்னுடைய எழுத்துகளில், செயல்பாடுகளில் ஜனநாயகத் தீர்வுக்கான கேள்வியை உரத்து எழுப்புகிறார்.

ஒடுக்கப்படுகின்ற மக்கள் பாதுகாப்பை இழந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த காரணத்தினால்தான், இந்திய அரசமைப்புச் சட்டத்தை வரையறுக்கும்போது சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள், ஆங்கிலோ இந்தியர் ஆகியோரின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் நெறிகளை உள்ளடக்கி வரையறை செய்தார் அம்பேத்கர். எனவே, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும், மனித நேயப் பாதையில் நெறிப்படுத்துவதும் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்புமாக இருக்கிறது.

ஆனால், ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்கக்கூடிய அரசும், அரசமைப்புச் சட்டமும் சாதி இந்துக்களின் வழிகாட்டுதலால் குறிவைத்துத் தகர்க்கப்பட்டு வருகின்றன. இதற்கு மதம், சாதி, குடும்பம், அரசு போன்ற அமைப்புகளை கருவிகளாகப் பயன்படுத்தி வருகின்றன. இதனால், இச்சமூகத்தில் ஜனநாயகச் செழுமையின் அடையாளங்கள் துளிர்விடாமல், ஜனநாயகப் பேரழிவைச் செய்த உயிர்க் கொல்லி பிம்பங்கள் நிலை நாட்டப்பட்டு வருகின்ற அவலம் இம்மண்ணில் தொடர்கின்றன.

ஆம், கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசு எந்திரங்களுக்கும், ஒரு சில அரசியல் கட்சிகளுக்கும், குடிமைச் சமூகங்களுக்கும், தலித் இயக்கங்களுக்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகின்ற பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாச்சியேந்தல் ஊராட்சிகள் இச்சமூகத்தில் மிகப் பெரிய ஜனநாயகப் பேரழிவின் சின்னங்களாக எழுந்து நிற்கின்றன. தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி ஊராட்சித் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை என்பது மட்டும் பிரச்சனை அல்ல; பல நூறு ஆண்டுகளாக ஜனநாயகக் காற்றை சுவாசிக்க முடியாமல் தலித்துகள் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள் என்கிற வாக்குமூலங்கள், கரையான்பட்டி நரசிங்கம் படுகொலை வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த உண்மை, இப்போது மக்கள் மன்றங்களில் வெட்ட வெளிச்சமாகியுள்ளன.

தனி ஊராட்சிகளில் தலித்துகளுக்கு எதிராக நடைபெறும் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து, 14.6.2005 அன்று மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள், தலித் விடுதலைக்கான மனித உரிமை அமைப்பு, தலித் மனித உரிமைக்கான தேசியப் பிரச்சாரம், மக்கள் கண்காணிப்பகம் - தமிழ் நாடு ஆகியவை இணைந்து, ஒரு பொது விசாரணையை நடத்தியது. இவ்விசாரணையில் அரசும், குடிமைச் சமூகங்களும், அரசியல் கட்சிகளும், நீதிமன்றங்களும், இந்து மநுதர்மமும் குற்றவாளிகளாக மக்கள் முன் நிறுத்தப்பட்டனர். ஜனநாயக நீரோட்டமானது, ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் சார்பில் நின்று நம்பிக்கையூட்டும் பணிகளை செய்துகொண்டிருந்ததை இவ்விசாரணையில் உணர முடிந்தது.

பெரும்பாலான அரசியல் கட்சிகள் உசிலம்பட்டி பகுதிக்குச் சென்று எதையும் சாதிக்கவில்லை என்றாலும், தலித் இயக்கங்களின் தலைமையை ஏற்று, இவ்விசாரணையில் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்கிற அளவுக்குப் பக்குவம் பெற்றிருந்ததைக் காண முடிந்தது. தனி ஊராட்சித் தொகுதிகளில் பங்கேற்கும் உரிமை மீறப்படுவதைக் கண்டித்தும், தலித் மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை மறுப்பவர்களுக்கு எதிராகவும், சாதி இந்துக்களின் தீண்டாமைப் பாகுபாடுகளால் பாதிக்கப்படுகின்ற உசிலம்பட்டி தலித்துகளின் உள்ளிருப்பு அவல நிலையை அம்பலப்படுத்தவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த தலித்துகள், தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

ஊராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் முதன் முதலாக கீரிப்பட்டியில் வேட்பாளராகப் போட்டியிட்ட பூங்கொடியான், தன்னுடைய முதல் தேர்தல் அனுபவங்களையும், கடந்த ஏப்ரலில் நடந்த தேர்தல் அனுபவங்களையும் பதிவு செய்தார். "தேர்தலில் போட்டியிடும்போது இருந்த அச்சுறுத்தல் இன்னும் தொடர்கின்றது. அதனால்தான் 29 வாக்குகள் பெற்று நான் தோற்றுப் போனாலும், என்னை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அழகுமலை, கள்ளர்களின் கட்டாயத்தினால்தான் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்'' என்றார். இதை பூங்கொடியான் சொன்னபோது, விசாரணைக் குழுவிலிருந்த மோகினிகிரி குறுக்கிட்டு, "மேலவளவு முருகேசன் கொலை வழக்கின் தீர்ப்பு அவர்களுக்கு ஒரு பாடமாக அமையவில்லையா?'' என்றார். அதற்கு பதிலளித்த பூங்கொடியான், "அந்தக் கொலையை அவர்கள் ஒரு மதிப்பாக, உயர்வாகப் பார்க்கிறார்கள். அதே நிலைதான் உங்களுக்கும் என்று மிரட்டுகிறார்கள்'' என்றார்.

பாப்பாபட்டி ஊராட்சியில் தேர்தலில் போட்டியிடச் சென்று 12.4.2005 அன்று கொலை செய்யப்பட்ட நரசிங்கம் என்பவரின் மனைவி முனியம்மாளும், மகன் வெள்ளிரதமும் நரசிங்கத்தின் கடந்த 9 ஆண்டுகால தலைமறைவுப் போராட்டங்களைப் பதிவு செய்தனர். ஊராட்சி மன்றத் தலைவராக வர முடியவில்லை என்றாலும் பரவாயில்லை; இவ்வளவு சட்டங்கள், காவல்துறை, அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகள் எல்லாம் இருந்தும் அவரின் உயிரைக்கூட காப்பாற்ற முடியவில்லையே என்று அறிக்கையிடும்போது, இன்னொரு மேலவளவு முருகேசனின் மரண வாக்குமூலம் அனைவர் மனதிலும் வேரோடியதை உணர முடிந்தது.

சி. மகேந்திரன் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தியாகு - தமிழ்த் தேசிய முன்னணி, சுந்தரம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாண்டியன் - மார்க்சிய லெனினிஸ்ட் கட்சி, மகேந்திரன் - திராவிடர் கழகம், கோ.க. மணி - பாட்டாளி மக்கள் கட்சி, மருத்துவர் சேதுராமன் - மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, ற்றலரசு - விடுதலைச் சிறுத்தைகள், அன்புசெல்வம் - தீண்டாமைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு, ரவிக்குமார் - எழுத்தாளர் கியோர் கடந்த 9 ஆண்டுகால தேர்தல் வன்கொடுமைகளில் தாங்கள் பங்கேற்ற, பாதிக்கப்பட்ட அனுபவங்களையும், மாற்றுத் தீர்வுகளையும் முன்மொழிந்தனர்.

இதில் ‘அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி'யின் சார்பில் பங்கேற்ற சுரேந்திரன், பிரமலைக் கள்ளர்களின் நலன் சார்ந்து முழுக்க உணர்ச்சி வசப்பட்டு தன் கருத்துகளை எடுத்துரைத்தார்: "பாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்சனை என்பது ஒரு மனித உரிமைப் பிரச்சனை அல்ல. எனவே, இதனை மனித உரிமை அமைப்புகள் எடுத்திருக்கக் கூடாது'' என்று அரைவேக்காட்டுத் தனமான அரசியல் அனுபவங்களைக் கூறிவிட்டு, நொடியில் ஓடிவிட்டார். நமக்கு எதிராக இங்கே என்னதான் கருத்து கூறுகிறார்கள் என்பதை ஏற்கப் பக்குவமற்ற, துணிச்சலற்ற நிலையை பார்வர்டு பிளாக் கட்சி கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

அரசுத் தரப்பில் 18 உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ஒருவர்கூட பங்கேற்கவில்லை. மக்கள் மன்றங்களுக்கு நாம் பதில் சொல்லத் தேவை இல்லை என்கிற இறுமாப்புத் தனத்தை அரசு அதிகாரிகள் பெற்றிருக்கிறார்கள் என்பது தான் எதார்த்தமான உண்மை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்தும், அரசியல் கட்சிகளில் இருந்தும், தலித் இயக்கங்களில் இருந்தும் முப்பதுக்கும் மேற்பட்டோர் வாக்குமூலங்கள் அளித்தனர். கீரிப்பட்டியில் 2003 இல் வேட்பாளராக நின்று வெற்றிபெற்று, ராஜினாமா செய்த கருத்தக்கண்ணனின் வாக்கு மூலம், சாதி இந்துக்களின் உளவியலைக் கொண்டிருந்தது. ஒரு தலித்தை சாதி இந்துக்கள் எப்படி தங்களின் ளோட்டியாக, கருவியாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அவருடைய வாக்குமூலம் உணர்த்தியது.

தலித் மக்கள் தங்களின் விடுதலைக்காகத் திட்டமிடும் முன் முயற்சிகளில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையும் ஒன்று. அதுமட்டுமே தீர்வு அல்ல என்றாலும், அந்த அரசியல் உரிமைகளே முற்றிலும் மறுக்கப்பட்டு நேரிடையாகவும், மறைமுகமாகவும் இப்போது வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. பதினெட்டுப்பட்டி பஜனை பாடும் உசிலம்பட்டியும், நாடு முறையில் அம்பலத்தாண்டவம் போடும் தேவகோட்டைப் பகுதிகளும் ஒரு புதிய போராட்டப் பாதையை தலித் இயக்கங்களுக்கு வகுத்துக் கொடுத்துள்ளன. இந்த இரண்டு பகுதிகளில் நடக்கும் சாதிய வன்கொடுமைகளின் வடிவங்களையும், வீரியங்களையும் அளவுகோலாகக் கொண்டே இனி தலித் செயல்திட்டங்களைத் தீட்ட வேண்டியுள்ளது என்பது, இவ்விசாரணையின் மூலம் கண்டறிய முடிந்தது.

கடந்த 9 ஆண்டுகளில் தேர்தல் என்கிற பெயரில் நிகழ்த்தப்பட்ட 19 வன்கொடுமைகளை காவல் துறையும், அதிகார வர்க்கமும், நீதிமன்றமும், தேர்தல் ணையமும் முன்னின்று நடத்தியுள்ளன. இதுவரை ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. இன்னும் 2 ஆண்டுகள் முடிவடைந்தால், தனித் தொகுதி சுழற்சி மாறி பொதுத் தொகுதி வந்துவிடும். அப்போது எல்லாம் சரியாகிவிடும் என்று சாதி இந்துக்கள் நினைக்கின்றனர். ஒரு தலித் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் முழுமையாக ஆட்சிப் பொறுப்பில் இருந்தால்தான் அதை தனித் தொகுதியாக ஏற்க முடியும். அதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதை பொது விசாரணைக் குழு கோரியுள்ளது.

"தமிழகத்தில் உள்ள 12,000 ஊராட்சிகளில், 2,800 ஊராட்சிகள் தனித் தொகுதிகளாக உள்ளன. இந்த 4 ஊராட்சிகளைத் தவிர, வேறு எங்கும் இப்படியொரு சமூகக் கேவலம் நிகழ்ந்ததில்லை'' என்பதை விசாரணைக் குழு கூட்டத்தில் தொல். திருமாவளவன் முன்வைத்தார்.

மேலும், "தனி ஊராட்சித் தொகுதிகளில் தேர்தலில் நின்று வெற்றி பெறும் வேட்பாளர்களை, காவல்துறையே முன் நின்று ராஜினாமா செய்ய வைக்கின்றது. இதுவரை 9 ஆண்டுகள் நிகழ்ந்த ஜனநாயகப் படுகொலைக்கான பாதுகாப்பை காவல் துறையே வழங்கியுள்ளது. ஒவ்வொரு முறையும் தேர்தலை நடத்தி, எந்த மாதிரியான அறிக்கையை மாவட்ட ஆட்சியர் அனுப்புகிறார் என்பது மர்மமாகவே உள்ளது. தலித் மக்கள் தேர்தல் அரசியலில் பங்கேற்றதிலிருந்து அவர்கள் மீது வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. அது மட்டுமல்ல, அவர்கள் சமூக விலக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கடைகளில் உணவுப் பொருள்கள் வழங்குவதில்லை, வேலை கொடுப்பதில்லை, கிராமப் பொதுவளங்களைப் பயன்படுத்துவதில் தடைகள் போடப்பட்டுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொறுப்பாளர்களையும், வேட்பாளர்களையும் தொடர்ந்து கொலை மிரட்டல் செய்து வருகிறார்கள். இத்தனை பிரச்சனைகளையும், வன்முறைகளையும், ஜனநாயகச் சீர்குலைவையும் ஆளும் கும்பல் கண்டுகொள்ளாமல், நேர்முக மறைமுக தரவை வழங்கிக் கொண்டிருக்கிறது. இதில் உள்ள அரசியல் பின்னணியை வெளிக்கொண்டுவர வேண்டும்'' என்றார்.

பொது விசாரணையின் தலைவர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ராமசாமி, "இது மனித உரிமைப் பிரச்சனை அல்ல' என்று பார்வார்டு பிளாக் கட்சியின் செயலர் சுரேந்திரன் பேசியதை கடுமையாக எதிர்த்தார். "இது, அகில உலக மனித உரிமைப் பிரகடனம், அகில உலகக் குடியுரிமை மற்றும் அரசியல் உரிமை மீதான ஓர் உடன்படிக்கை. இந்த உடன்படிக்கையையும், இடஒதுக்கீட்டு உரிமையையும் நடைமுறைப் படுத்துவதும், கடைப்பிடிப்பதும் மாநில அரசின் கடமை. இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசியல் கட்சிகளுக்கும், அரசுக்கும் கூடுதல் பொறுப்பு உள்ளது'' என்பதை சுட்டிக்காட்டினார்.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஜனார்த்தனம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் விடுதலைப் பண்புகளை உணர்த்திப் பேசினார்: "நம்முடைய சட்டம் விடுதலைக்கான நோக்கங்களை உள்ளடக்கியது. அமெரிக்காவைப் போன்று வெறும் உரிமைகளை உள்ளடக்கியது அல்ல. சட்டம் மக்களுக்காகத்தான். மக்கள் சட்டத்திற்காக அல்ல. இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை காவல் துறையும், அரசும் உறுதி செய்ய வேண்டும். அய்ந்தில் ஒரு பங்கு தலித் மக்கள் இருக்கிறார்கள். அவர்களை புறக்கணித்துவிட்டு, உரிமைகளை மறந்துவிட்டு, நாடு வளர்ச்சி அடைகிறது என்று சொன்னால் அது முழுமையான வளர்ச்சி ஆகாது. பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள தலித்துகளை காவல் துறை தாக்கியுள்ளது என புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

பேராசிரியர் கோபால் குருவின் கேள்விகளும், விவாதங்களும், ஒரு தலித் தன்னம்பிக்கை பெறுவதற்கான ஊக்கத்தை அளித்தது. அவர் முன்வைத்த மிகமுக்கிய கேள்வி: "ஒரு தலித் அமைதியாக வாழ வேண்டுமா? அல்லது சுயமரியாதையுடன் வாழ வேண்டுமா? தமிழ் நாடு சுயமரியாதை இயக்கம் கண்ட நாடு. நமக்கு அமைதியும் வேண்டாம், சுமூகமும் வேண்டாம். சுயமரியாதை போதும். அதற்கு இந்த உரிமைகள், சட்டங்கள், அரசு எந்திரங்கள் உறுதுணை செய்ய வேண்டும்.''

"பொதுவாக, ஒரு கிராமத்துக்கான, பஞ்சாயத்துக்கான தேவைகளை உணரும்போது நம்முடைய கவனம் அனைத்தும் மாவட்ட ஆட்சியரை நோக்கியதாகவே இருக்கிறது. "எதற்கெடுத்தாலும் கலெக்டரை பார்த்து மனு கொடுப்போம்' என்கிற நிலையை மாற்ற வேண்டும். அதிகாரம் அவருக்கு உரியது மட்டுமல்ல. ஒரு ஊராட்சி மன்றத் தலைவருக்கும் அதிகாரம் இருக்கிறது. அதனால்தான் சமத்துவம் பேசுகின்ற நிலையைப் பெறவேண்டிய கிராமங்கள், பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு செல்லுகின்ற நடைமுறையை மாற்ற வேண்டும்'' என பேராசிரியர் பழனி துரையும், ஜார்ஜ் மாத்யூவும் முன் வைத்தனர்.

இறுதியாக பேராசிரியர் தங்கராஜ் பேசும்போது, "யார் ஆட்சி அதிகாரத்துக்கு உரியவர்கள் இல்லை எனப் புறக்கணிக்கின்றீர்களோ, அவர்களிடம் தான் நீங்கள் எதிர்பார்க்கின்ற நூறு சதவிகித வாக்குகள் இருக்கின்றன. வாக்களிக்கும்போது கொடுக்கப்படுகின்ற மரியாதையில் துளிகூட, இப்போது அவர்களுக்கு கொடுப்பதில்லை. இதுதான் அரசியல் ஜனநாயகமா?'' என்றமிக அழுத்தமான ஒரு கேள்வியை முன்வைத்தார். இதையும் கடந்து இந்தப் பிரச்சனை, தமிழ் நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு மட்டும் ஏன் இருக்கிறது என்பதைப் பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டியுள்ளது: அறிவியல் வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி அடைந்து, பொருளாதாரத்தில் வளர்ந்தபோதும்கூட, கள்ளர்கள் யுதத்தை கீழேபோட துணிவற்றவர்களாக, யுதங்களில் முடங்கிக் கிடக்கிறார்கள்.

மேலும், இவர்களிடம் நிறுவன அதிகாரமும், அரசியல் அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளதால், இதனை ஜனநாயகக் கருவியாகப் பார்க்காமல், யுதங்களாகவே பார்க்கப் பழக்கப்பட்டு வருகிறார்கள். அதனால்தான் இச்சமூகத்தில் பலர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த போதும்கூட, இதனை ஜனநாயக அடையாளமாகப் பார்க்காமல் கண்மூடித்தனமாக தங்கள் சமூகத்தினரின் தவறுகளைப் பாதுகாப்பதில் முன்னணி வகிக்கின்றனர்.

பிரமலைக் கள்ளர்களுக்கு கல்வியைப் புகட்டவும், விழிப்பு நிலையை உருவாக்கவும் கொண்டு வரப்பட்ட (கள்ளர்) சீர்மரபினர் நலத்துறை, இதில் தன் முனைப்பு காட்டவில்லை. சமூகப் பண்பாட்டில் அவர்களை வளர்த்தெடுப்பதற்கான வேலையை அது செய்யவில்லை. பொதுவாக, காவல்துறை, வருவாய்த்துறை மற்ற பிற அரசுத் துறைகளில் பிரமலைக் கள்ளர்களே பெருமளவில் பணியமர்த்தப்படுகின்றனர். இத்துறைகளில் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கான பிரதிநிதித்துவம் முற்றாக மறுக்கப்படுகிறது. 2000 கள்ளர்களுக்கு 20 தலித் வீதம் அடிமைகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்; இதிலிருந்து புவியியல் ரீதியாகப் பிரிந்து நிரந்தரமாக தனி வாழிடத்தில் குடியமருவதற்கான திட்டம் எதுவும் இல்லை. இப்படி பல பிரச்சனைகள் பிரமலைக் கள்ளர்கள் வசிக்கும் பகுதிகளில் நிரம்பிக் கிடக்கின்றன.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவேதான் தலித்துகள் தங்களின் விடுதலைக்கான அரசியலைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சனைகளை எல்லாம் அரசு எந்திரமும், ஆதிக்க சாதியினரும், அரசியல் கட்சிகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலும், தலித்துகள் அப்படி பார்க்க மாட்டார்கள் என்பதை நிகழ்த்திக் காட்டி, மாற்றுத் தீர்வுகளையும் முன்மொழிய வேண்டியுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தவிடாமல் செய்தவர்கள் மீது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (1989) பிரிவு 3(1) (VII) களின் கீழ் வழக்குப் பதிவு செய்து 5 ண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும். உசிலம்பட்டி பகுதியில் பணியாற்றுகின்ற அமைப்புகள் அப்பகுதியில் வாழும் ஆதிக்க சாதியினருக்கு, சட்டக் கல்வி மற்றும் மனித உரிமைக் கல்வியைப் புகட்ட வேண்டும்.

குறைந்தபட்சம் எட்டாம் வகுப்புவரை படிக்க வைப்பதற்கான குறைந்தபட்சக் கல்வித் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும். தரிசு நில மேம்பாடு, பழமரத் தோட்டம், பசுமை வளையம் என்கிற பெயரில் நிலங்கள் தலித்துகளிடம் இருந்து அபகரிக்கப்படுகிறதே தவிர, நிலப் பங்கீடு செய்வதற்கான திட்டம் ஏதும் அரசிடம் இல்லை. நில உச்சவரம்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அரசு, நிலப்பங்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வன்கொடுமைகள் நிகழும் பகுதிகளில் நேர்மையான அதிகாரிகள் பணியமர்த்தப்பட வேண்டும். குறிப்பாக, தலித்துகள், சிறுபான்மையினர் பணியமர்த்தப்பட வேண்டும். சாதிக் கொடுமைகளை ஒழிக்க, தலித் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

Pin It