ஆத்திச்சூடியின் 59ஆம் வரி இப்படிச் சொல்கிறது, “தூக்கி வினைசெய்”

எந்த ஒன்றையும் சீர்தூக்கி ஆய்ந்து செய்ய வேண்டும், சொல்ல வேண்டும் என்பது இதன் பொருள்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்த வழக்கு ஒன்றில், சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் மத்திய அரசுக்கு ஒரு பரிந்துரையைச் செய்திருக்கிறது.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கூடுதல் தண்டனையாக, ஆண்மைத் தன்மையை நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்பது அந்தப் பரிந்துரை.

நீதிமன்றங்களின் தீர்ப்பு மதிக்கத் தக்கவை, ஆனால் இந்தப் பரிந்துரை அந்த எல்லைக்குள் வருவதாக அமையவில்லை.

குற்றங்களை நியாயப் படுத்த முடியாது. அதிலும் பெண்கள் மீதான, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள், வன்கொடுமைக் கொடுங்குற்றங்கள் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.

குழந்தைகள் மீதான இத்தகைய குற்றங்கள் 2008&ஆம் ஆண்டில் 22,500 ஆக இருந்தன. 2013 ஆம் ஆண்டு அது 30,000 ஆகப் பெருகி, 2013&இல் 57,000 என்றும், 2014ஆம் ஆண்டில் 89,423 என்று குற்றங்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போகின்றன.

நல்லவை தேய, அல்லவை பெருகுவது எப்படிக் கவலைக்கு உரியதாக இருக்கிறதோ, அப்படியே உயர்நீதிமன்றத்தின் இப்பரிந்துரையும் இருக்கிறது.

ஆண்மைத் தன்மையை நீக்குவது என்றால் எப்படி நீக்குவது என்ற கேள்வி எழுகிறது. உயிர் அணுக்களின் உற்பத்தியை நீக்குவதா, அன்றி உறுப்பை நீக்கிவிடுவதா?

உயிர் அணுக்களின் உற்பத்தியை நீக்குவது என்றால், அது குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கு ஒப்பாக அமையும்.

அதாவது குழந்தை பெற முடியாதே ஒழிய மீண்டும் மீண்டும் உடலுறவு கொள்ள முடியும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு வேளை உறுப்பை அகற்றுவது என்ற முடிவுக்கு வருவதாக இருந்தால், மனித உலகம் அதை ஏற்றுக் கொள்ளாது.

இதுவே நாளை பல்லுக்குப் பல், கைக்குக் கை, கண்ணுக்குக் கண் என்ற இடத்திற்குக் கூடச் சென்றுவிடும் ஆபத்து இருக்கிறது.

இவை இரண்டையும் தவிர்த்து, ஒரு வேளை ஆண்மையை நீக்குவது என்ற பெயரால், அவனை உணர்ச்சியற்ற சடப்பொருளாக ஆக்குவதாக வைத்துக் கொண்டால், அது மனித நேயத்திற்கு எதிரானதாக அமைந்து விடும்.

இப்படிச் சொல்வதால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடும் குற்றங்களைக் குறைத்து மதிப்பிடுவதாகக் கருத வேண்டியதில்லை. இக்குற்றங்கள் கடுமையான கண்டனத்திற்குரியன, தண்டனைக் குரியன.

குற்றவாளிகள் தாம் செய்த தவறுகளை உணர்ந்து திருந்த வேண்டும். அதற்கு வழிகாட்டும் தண்டனையே சரியான தண்டனையாக இருக்க முடியும்.

நோய் நாடி, நோய் முதல் நாடி, அதுதணிக்கும் வாய்நாடி, வாய்ப்பச் செயல் என்ற ஓர் அருமையான தீர்ப்பு வள்ளுவரிடம் இருந்து நமக்குக் கிடைக்கிறது.

அதன்படி குற்றத்தைப் பார்க்க வேண்டும். குற்றத்தின் மூலத்தைப் பார்க்க வேண்டும். அக்குற்றம் நடைபெறாமல் இருக்க வழிகளைச் செய்ய முனைய வேண்டும். இதுதான் குற்றங்கள் குறைய வாய்ப்பை ஏற்படுத்தும்.

இதில் நீதிமன்றத்தைவிட அரசுக்கு முக்கியப் பொறுப்பு இருக்கிறது.

முன்னர் சுட்டிக் காட்டிய புள்ளி விபரங்களின் படி, குழந்தைகள் மீதான வன் கொடுங்குற்றங்கள், ஆண்டு தோறும் பெருகிக் கொண்டு இருக்கின்றன என்றால் அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது என்ற கேள்வி எழத்தானே செய்யும்.

பள்ளிகளில், உயர்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குக், கட்டாயமாகப் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும், என்ற நீதியரசர் கிருபாகரன் அவர்களின் உத்தரவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

ஆனால், இந்திய கலாச்சாரம், இந்து கலாச்சாரம் என்று சொல்லிக் கொண்டு, சிறுவயது முதலே ஆண் & பெண் குழந்தைகளை தனிமைப் படுத்தி வளர்ப்பதில்தான் அரசும், ஆதிக்கச் சிந்தனைகளும் முன்னிலையில் இருக்கின்றன.

ஒருவகையில் சொல்லப் போனால் குழந்தைகளுக்குப் பாலியல் தொடர்பான அணுகுமுறைப்பாடங்களைச் சொல்லித்தருவது அவசியம். பாலியல் கல்வியில் இது அடங்கும்.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஒழுங்குபடுத்தப் பட்ட காமம் வாழ்க்கை என்பதையும், ஒழுங்குபடுத்தப்படாத காமம் வாழ்க்கையை அழிக்கும் என்பதையும் பாலியல் கல்வி மூலமும், பிற வழிகளிலும் ஆடவர்கள், உணரச் செய்ய வேண்டியது என்பது இன்றைய சமூகத்தேவை.

இவைபோன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்க முன்வர வேண்டும்.

சமூக மாற்றம் என்பது மக்களிடம் ஏற்படும் மனமாற்றங்களை அடிப்படையாகக் கொண்டது. சட்டத்தின் இரும்புப்பிடி என்றும் மனமாற்றத்தை ஏற்படுத்தாது.

மரண தண்டனையே வேண்டாம் எனப் பல்வேறு நாடுகள், அதை ஒழித்துக் கொண்டிருக்கும் இன்றைய நாகரிக மனித சரித்திரத்தில், மனிதனின் ஆண்மையை அகற்றுவது என்ற பரிந்துரை இதயத்தைக் கனக்கச் செய்கிறது.

நீதிபதியின் கோபம் நியாயமானது. ஆனால் தண்டனை திருத்துவதாக அமைய வேண்டும், வாழ்க்கையைத் தீர்ப்பதாக அமையக் கூடாது.

Pin It