அரசியலில் தலைவரைத் தொண்டர்களும், தொண்டரகளைத் தலைவர்களும் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.

என் தலைவன் இப்படித்தான் என்று அடித்துச் சொல்லும் தொண்டர்களை உலக அரசியல் மட்டுமல்ல நம் தமிழக அரசியலும் கூட கண்டு வந்துள்ளது.

periyar 283ஆனால் தொண்டர்களால் மட்டுமல்ல, கூடவே பயணிக்கும் தலைவர்கள் கூடப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்குத் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் இவர்களிடம் மறைந்து கிடந்த சிந்தனைகளை, மனதளவில் நீண்ட நாட்களாகத் தேக்கி வைத்திருந்த நம் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 06-09-2021 அன்று சட்டப்பேரவையில், விதி எண் 110-இன் கீழ் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

“இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ தந்தை பெரியார் அமைத்த அடித்தளமே காரணம். பெரியாரின் செயல்கள் குறித்துப் பேச வேண்டும் என்றால் பத்து நாட்கள் அவையை ஒத்தி வைத்து விட்டுப் பேச வேண்டும். செப்டம்பர் 17 சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களில் உறுதி மொழி எடுக்கப்படும். யாரும் எழுதத் தயங்கியதை எழுதியவர். யாரும் பேசத் தயங்கியதைப் பேசியவர் பெரியார். இதனால் பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி 'சமூக நீதி நாளாக'க் கொண்டாடப்படும் “ - என்ற முதல்வரின் இந்த அறிவிப்பு, உண்மையில் தமிழ்நாடு வரலாற்றில், பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு திருப்புமுனை அறிவிப்பாகவே அமைந்து விட்டது.

வழக்கமாக அரசியலுக்காகப் பாராட்டுவோர் என்பதைத் தாண்டி மக்களே பாராட்டித் தள்ளும் அளவுக்கு முதல்வரின் இந்த அறிவுப்பும், அவரின் அணுகுமுறையும் வேற லெவலாக இருக்கிறது.

 தமிழை, தமிழ்நாட்டை, தமிழ்இனத்தை, தமிழ்மொழியை நேசித்தவர் தந்தை பெரியார். அவர் ஒரு பகுத்தறிவாளர். அதையும் தாண்டி அவர் கையில் எடுத்த சமூக நீதி தமிழ் நாட்டை மட்டுமல்ல, இந்திய ஒன்றியத்தின் பல மாநிலங்களையே அதிர வைத்து விட்டது.

தந்தை பெரியார் முழுமையான கடவுள் மறுப்பாளர். கோயில்களுக்குள் இதுநாள் வரைப் புகுந்து கொண்ட பார்ப்பனர்கள், சூத்திரர்களுக்குப் புரியாத மொழியில் சொல்லி வந்த மந்திரங்களையும், அதைப் புரியாமலேயே கேட்டு வந்த மக்களையும், கோயிலுக்குள் நுழையத் தடை விதித்து அதற்குத் 'தீட்டு' என்று ஒரு உதவாக்கரைக் காரணத்தையும் சொன்னார்கள். சொல்லப் போனால் கேரள மாநிலம் வைக்கம் கோயில் தெருக்களில் கூட நடக்கக் கூடாது என்று சொன்னார்கள்.

நாத்திகரான பெரியார் அதை எதிர்த்தார். பேச்சளவில் இல்லாமல் களம் இறங்கிப் பேராடி மக்களின் உரிமையைப் பெற்றுத் தந்த சமூக நீதிப் போராளி, தந்தை பெரியார்.

சாதி ஒழியவும், பெண்கள் மீதான ஆணாதிக்கத்திற்கு எதிராவும், சாதி ஒழிந்த சமநீதிக்காகவும் தன் வாழ்நாளெல்லாம் பாடுபட்டவர், தந்தை பெரியார்.

அத்தகைய நம் தந்தை பெரியாரை, அவர் பிறந்த நாளை ‘சமூக நீதி நாளாக’ அறிவித்ததோடு, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சமூகப் புரட்சிக்காரராக மக்கள் கொண்டாடும் ஒரு மாமனிதனை, அவரின் சிந்தனைகளை அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டார் தளபதி, முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள்.

அதிகாரம் வந்துவிட்டது என்பதற்காகத் தலைகால் புரியாமல் ஆடியோரைப் பார்த்த தமிழ்நாடு, முதன்முறையாக அதே அதிகாரத்தை வைத்துத் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்கே மிகச் சிறந்த பொருளாதார அறிஞர்களை ஆலோசகர்களாக நியமித்து, மக்கள் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், தந்தை பெரியாரின் சமூக நீதியைப் புகழின் உச்சாணிக் கொம்பிற்கே உயர்த்தியிருக்கிறார் முதல்வர் அவர்கள்.

தமிழ் நாட்டு அரசியல் என்பது ஒன்றிய அரசை மையப்படுத்தி கிட்டத்தட்ட அடிமைச் சேவகம் செய்யும் அளவுக்கு செயல்பட்டால்தான் இயங்க முடியும் என்பதை மாற்றினார்.

“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" என்பது திருவள்ளுவரின் வாக்கு.

இது வேறு எவருக்கு ஒத்துப் போகிறதோ, இல்லையோ நம் முதல்வருக்கு முழுமையாக ஒத்துப் போகிறது.

ஆம்! தமிழர்களுக்கும் ஓர் குணமுண்டு.

தான் பெற்றதை, கற்றதைத் தனக்காக மட்டும் வைத்துக் கொள்ளாமல், பிறருக்காகவும், சமுதாயத்திற்காகவும் திருப்பிக் கொடுப்பது என்பதில் பெயர் வாங்கியவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள்.

தலைவரும், முதல்வருமான நம் தளபதி தாம் பெற்ற அனுபவத்தை, கற்ற அறிவை இந்தச் சமூதாயத்துக்கே திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் “பெரியார் பித்தனாக" - அதற்கு ஒரு சான்று செப்டம்பர் 17, “ சமூக நீதி நாள்“ !

- ஆ.சிங்கராயர்

Pin It