subavee 700திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மாநிலப் பொதுக்குழு கடந்த 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சியில் சரியாக 10 மணிக்குத் தொடங்கியது.

பேரவையின் அவைத்துணைத் தலைவர் தோழர் பொள்ளாச்சி மா.உமாபதி தலைமை ஏற்றார்.

துணைப் பொதுச்செயலாளர் தோழர் சிற்பி.செல்வராசு வரவேற்பு உரையாற்றினார்.

பேரவைத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் சிங்கராயர் முன்னிலையில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் தோழர் சுப.வீரபாண்டியன் தொடக்கவுரையாற்றினார்.

“கருஞ்சட்டைத்தமிழர்” மின்னிதழ் குறித்துத் தோழர் உதயகுமார், “திராவிடம் 100’’ குறித்துத் தோழர் மணிகண்டன்,”திராவிடப்பள்ளி “ குறித்துத் தோழர் மா.உமாபதி “கருஞ்சட்டைப் பதிப்பகம்’’ குறித்துத் தோழர் ‘பெல்’.ராஜன், “கல்விக்குழு’’ குறித்துத் தோழர் லாரன்ஸ் “நிதிக்குழு’’ குறித்துத் தோழர் செல்வின் உள்ளிடப் பேரவையின் அணி பெறுப்பாளர்கள், எதிர்காலத் திட்டம் குறித்து அறிக்கைகள் வெளியிட்டனர். அதுபோல சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலளர்கள் தமது அறிக்கைகளை வாசித்தார்கள்.

 பேரவையின் அமைப்புச்செயலாளர் தோழர் புலேந்திரன் புதிதாகப் பேரவையில் இணைந்த தோழர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

பேரவையின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் தோழர்கள் வேடச்சந்தூர் ரவி, இரா.உமா ஆகியோர் உரையாற்றினர்.

 தலைமை நிலையச் செயலாளர் தோழர் எட்வின் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

பேரவையில் இணைந்த தோழர் தேன்மொழி, பேரவையின் மறுபதிப்பான கொள்கை அறிக்கையை வெளியிட, அதனைத் தோழர் அகிலா பெற்றுக் கொண்டார்.

 மதிய உணவுக்குப் பின் தோழர்களின் உரையையடுத்துப் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் நிறைவுரையுடன் பொதுக்குழு நிறைவு பெற்றது, தோழர் எட்வின் நன்றி கூறியதையடுத்து, சரியாக 4 மணிக்கு.

நிகழ்ச்சியைத் தோழர் கார்த்திக் திருச்சி மாவட்டப் பேரவைத் தோழர்களுடன் இணைந்து சிறப்பாகச் செய்திருந்தார்.

தீர்மானங்கள்

தீர்மானம் 1: மதுரை மாவட்டத்தின் பேரவைத் தென்மணடலச் செயலாளராகப் பணியாற்றிய தோழர் ஜெயம்பெருமாள், திருப்பூர் மாவட்ட அவைத் தலைவர் தோழர் உடுமலைத் தண்டபானி ஆகியோர் மறைவுக்குப் இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.

தீர்மானம் 2: கொரோனாக் கொடுந்தொற்று உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுச் செயற்கரிய செயல்களை நாட்டு மக்களுக்குச் செய்து கொண்டு இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இப்பொதுக்குழு மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறது.

தீர்மானம் 3: பேரவையின் வலையொலி, பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் மக்கள் மத்தியில் வேகமாகக் கொண்டு சேர்ப்பது என தீர்மானிக்கிறது, இப்பொதுக்குழு.

தீர்மானம் 4: திராவிடப் பள்ளியின் மாணவர் சேர்க்கைக்குத் தனது சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டு, மாணவர்களைச் சேர ஒத்துழைப்பு நல்கிய தி.மு.கழக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்குப் பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது.

தீர்மானம் 5: தொடர்ந்து மக்கள் விரோதப்பணிகளில் செயல்பட்டு வரும் மதவாத ஒன்றிய அரசு, நாட்டின் அரசுச் சொத்துகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசை இப்பொதுக்குழு மிகவன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 6: சமூக நீதிக் கொள்கையில் தொடந்து இயங்கும் திராவிட இயக்கத் தமிழர் பேரவைக்குச் சொந்தமாக ஒரு கட்டடம் கட்ட, உரிய நிதியைத் திரட்ட இப்பொதுக்குழுத் தீர்மானிக்கிறது

- சிற்பி.செல்வராசு

Pin It