udayanidhi and subhavee 720சுயமரியாதை இயக்க முதல் மாநில மாநாடு 1929 ஆம் ஆண்டில் செங்கல்பட்டிலும், இரண்டாவது மாநாடு ஈரோட்டில் 1930 ஆம் ஆண்டிலும், மூன்றாம் மாநாடு விருதுநகரில் 1931ஆம் ஆண்டிலும் நடைபெற்று இருக்கின்றன. நீண்ட இடைவெளியின் பின்னர் சுயமரியாதை இயக்க நான்காம் மாநில மாநாட்டை 'நூற்றாண்டு விழா மாநாடாக' திராவிட இயக்கத் தமிழர் பேரவை 2025 ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் மிகச் சிறப்பாகக் கோவையில் நடத்தி இருக்கிறது என்பது திராவிட இயக்க வரலாற்றில் பதிவாகி விட்டது.

 மாநாட்டுக் கொடியேற்றம், கவிஞர் கனிமொழியாரின் தொடக்கவுரை, கருஞ்சட்டை அரங்கம், மாணவர் அரங்கம், இளைஞர் அரங்கம், அரசியல் அரங்கம், கவியரங்கம், ஊடகவியலாளர் அரங்கம், சமூகநீதி அரங்கம், உரிமை முழக்கப் பேரணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைப் பேருரை என்று அமைக்கப் பட்டிருந்த நிகழ்ச்சி நிரலும், அவைகள் பிசுறுதட்டாமல் நடத்தப்பட்டப் பாங்கும் திராவிட இயக்கத்தின் மரபு என்பதைப் பேரவை உறுதி செய்து விட்டது.

"செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்" என்பார் பெரும் புலவர் வள்ளுவர். இம்மாநாட்டில் இரண்டுமே நிறைவாக இருந்தது.

பேரவையின் தலைமை திட்டமிட்டு வடிவமைத்த மாநாட்டை, வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதை உழைப்பின் மூலம் நிரூபித்து விட்டார்கள் துணைப் பொதுச் செயலாளர் காசு. நாகராசன் தலைமையில் இயங்கிய கோவையின் பேரவைப் பொறுப்பாளர்கள் என்றால் மிகையில்லை.

மாநாடு முதல்நாள் போர்ப்படைப் பறையிசையுடன் தொடங்கி, மறுநாள் கொடிகளைக் கையேந்திப் புறப்பட்ட பேரணிப்படை தளபதி உதயநிதி ஸ்டாலினிடம் 'உரிமை முழக்க'த்தை ஒப்படைத்தது. ஏற்றுக்கொண்ட அவர் நிறைவு செய்தார் மாநாட்டை!

- கருஞ்சட்டைத் தமிழர்