திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பாக கோவையில் ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்களில் "சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநில மாநாடு " சிறப்பாக நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளைப் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் அவர்கள்

தலைமையின்கீழ், அவைத்தலைவர் பொள்ளாச்சி மா.உமாபதி, பொதுச்செயலாளர் சிற்பி செல்வராஜ், துணைப் பொதுச்செயலாளர் காசு. நாகராசன் உள்ளிட்ட தோழர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.

சுயமரியாதை என்றால் என்ன என்ற ஒரு கேள்வியை எழுப்பும்போது அதற்குத் "தன்மானம்தான் சுயமரியாதை! சமத்துவம் பேணுவது, புதிய உலகைப் படைக்க முயலுவது, பழைய அமைப்பை அறிவாயுதம் கொண்டு பரப்புரை செய்து அழிப்பது என்பதே சுயமரியாதையாகும்! இந்தச் சுய மரியாதை வாழ்வே சுகவாழ்வு தருவது. மானத்தோடு வாழ்வதை தமிழர்களிடையே படைக்க முயன்று தோன்றிய இயக்கம் தான் – சுயமரியாதை இயக்கம்!" என்று க.திருநாவுக்கரசு அவர்கள் இவ்வாறு விளக்கம் தருகிறார்

இந்த அடிப்படையில், பகுத்தறிவு பெற்று மூடநம்பிக்கைளை மறுப்பது, சாதி ஒழிப்பது, பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராக, ஆண்- பெண் சமத்துவம் பேணி, வளர்ந்துவரும் அறிவியலோடு இணைந்த சமத்தும் பேணும் சமுதாயத்திற்கான வித்துதான், சுயமரியாதையும், அதன் செயல்பாடுகளும் அமையும்.

சுயமரியாதையைச் சொன்னதோடு, அதற்கான களத்தை அமைத்தவர் தந்தை பெரியார் அவர்கள்.சுயமரியாதை இயக்க முதல் மாநில மாநாட்டைச் செங்கல்பட்டில் 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களில் நடத்திய ஐயா பெரியார், சவுந்திரபாண்டியனார் அவர்களை மாநாட்டின் தலைமையை ஏற்கச் செய்தார். சுயமரியாதை இயக்க இரண்டா வது மாநில மாநாடு ஈரோட்டில் 1930 ஆம் ஆண்டு மே மாதம் 10 முதல் 13 வரை எம். ஆர். ஜெயகர் தலைமையில் நடந்தது.

விருதுநகரில் சுயமரியாதை இயக்க மூன்றாவது மாநில மாநாடு 1931ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் ஆர். கே. சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இதற்கடுத்து திருநெல்வேலியில் ஒரு சுயமரியாதை இயக்க மாநாடு நடைபெற்றது. ஆனால் அது மாவட்ட மாநாடு, மாநில மாநாடு அல்ல.

1931 ஆம் ஆண்டு விருதுநகர் மாநில மாநாட்டிற்குப் பிறகு, 2025 ஏப்ரல் 26/27 இல் கோவையில் நடக்க இருக்கும் சுயமரியாதை இயக்க மாநில மாநாடு 'நூற்றாண்டு' மாநாடாக அமைகிறது. இது ஒரு நூற்றாண்டின் திராவிட இயக்க வளர்ச்சியின் என்பதன் அடையாளம்.

என்றாலும் திராவிட இயக்கத்தின் பணி இனியும் தொடர வேண்டிய அவசியம் என்ன என்பதையும், ஆர்.எஸ்.எஸ் முகமூடி பா.ஜ.கவின் பாசிச மதவெறி ஆட்சியை எதிர்கொண்டு வீழ்த்த வேண்டியதன் அவசியத்தையும், அதற்காக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் பின்னால் போர்ப்படை வீரர்களாய் அணிதிரள வேண்டியதன் அவசியத்தையும் அரசியல் நெடியோடு பேச இருக்கிறார்கள் தோழர்கள், கவிஞர்கள், தலைவர்கள், தமிழ்நாடு அமைச்சர்கள்.

பெரியாரின் திராவிடம் அரசியலை விட்டு வெளியே இருக்கம், ஆனால் அரசியலின் நெடியோடு என்பதைக் கோவை மாநாட்டில் காணப் போகிறோம்.

அதேசமயம் திராவிட அரசியலில் திராவிட முன்னேற் கழகம் ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் என்பதையும் கோவை மாநாட்டில் பார்க்கப் போகிறோம்.

பகுத்தறிவு என்பதற்கு மற்றொரு பெயர் சுயமரியாதை. வாருங்கள் தோழர்களே! கோவை சுயமரியாதை மாநாட்டில், சந்திப்போம்!

- எழில்.இளங்கோவன்