எதிர்பார்த்த இடைத்தேர்தல்களின் முடிவுகள் எதிர்பாராத விதமாக அமைந்து விட்டன!
கழுத்தில் அணிவித்த வெற்றி மாலையைத் தூக்கி எறிந்து விட்டு, மறுபடியும் கழுத்தை நீட்டிய வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று நம்பினோம். அந்த நம்பிக்கை பொய்த்திருக்கிறது!
இருப்பினும், இத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக, இரண்டு மூன்று செய்திகளில் நாம் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது!
சென்ற பொதுத் தேர்தலில், ஒரு தொகுதியில் இரண்டாம் இடத்திலும், இன்னொரு தொகுதியில் மூன்றாம் இடத்திலும் இருந்த த.வெ.க. இப்போது இரண்டு தொகுதிகளிலும் முதல் இடத்திற்கு வந்திருக்கிறது! சென்ற பொதுத் தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் முதல் இடத்தில் இருந்த அதிமுக, இப்போது இரண்டிலுமே மூன்றாவது இடத்திற்குப் போய் இருக்கிறது!
திமுகவைப் பொறுத்தவரையில், ஒரு தொகுதியில் இரண்டாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது! இன்னொரு தொகுதியில், மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது!
பொதுத் தேர்தலை விட இப்போது பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சற்றுக் குறைந்திருக்கிற நிலையில், த.வெ.க. கொஞ்சம் கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது! அதிமுகவோ பெரும் இழப்பைச் சந்தித்து இருக்கிறது!
பதிவான வாக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதை வைத்துக் கணக்கிட்டால், திமுக அதே பழைய வாக்குகளை மீண்டும் பெற்று இருக்கிறது! திமுகவின் வாக்காளர்கள் மாறவே இல்லை என்பதற்கு இது சான்றாக இருக்கிறது!
இந்த இடத்தில் நாம் இன்னொன்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். பொதுத் தேர்தலின் போது, திமுகவுடன் இருந்த காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இரண்டு பொதுவுடைமைக் கட்சிகள் அனைத்தும் இப்போது திமுகவை விட்டு விலகி விட்டன! பொதுவுடமைக் கட்சிகளைத் தவிர மற்றவை அனைத்தும் தவெக விற்கு ஆதரவாக நின்றன!
இந்த நிலையிலும் திமுகவின் வாக்குகள் குறையவில்லை என்பது, திமுகழகத் தலைவர் சொல்லி இருப்பது போல், தோல்வியில் வெற்றி என்றே கருதப்பட வேண்டும்!
எனவே பல புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்ததால், சிறிய அளவில் தவெகவிற்கு வாக்குகள் கூடியிருக்கின்றன!
இன்னொரு செய்தியும் இன்று ஊடகங்களில் பேசப்படுகிறது. வெளியில் அறிவிக்காமல், பாமக, ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளது என்பதே அந்தச் செய்தி! அதன் விளைவாகவே, குறிப்பாக, மதுராந்தகம் தொகுதியில் கூடுதல் வாக்குகள் விஜய்க்கு கிடைத்திருக்கிறது!
இவை அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும் போது, இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி பெற்றிருப்பது வெற்றியில் தோல்வி என்றே கூற வேண்டும்!
- சுப.வீரபாண்டியன்