விசில் சத்தம்

tamilaruvi manian 300சில ஆண்டுகளுக்கு முன்பு, ஈழம் தொடர்பான ஒரு கூட்டம் கோவையில் நடைபெற்றது. தொல்..திருமாவளவன், புலவர் புலமைப்பித்தன், தமிழருவி மணியன், திருச்சி வேலுச்சாமி ஆகியோருடன் நானும் கலந்து கொண்டு உரையாற்றினேன். அது ஒரு வித்தியாசமான இணைவுதான். எங்கள் எல்லோரையும் ஈழம் இணைத்தது என்று சொல்லலாம்.

கூட்டம் தொடங்கிச் சிறிது நேரத்தில் திருமாவளவன் மேடைக்கு வந்து சேர்ந்தார். அவருடைய கட்சித் தோழர்கள் கைதட்டி ஆரவாரமாக அவரை வரவேற்றனர். அதற்குப் பிறகு, அவரின் பெயர் சொல்லும் போதெல்லாம் தொடர்ந்து கைதட்டல்கள். இடையிடையே விசில் சத்தங்களும் வந்து கொண்டிருந்தன. தமிழருவி மணியனுக்கு அது பிடிக்கவில்லை. ‘இது என்ன கலாசாரம், ஏன் இப்படி விசில் அடிக்கிறார்கள்’ என்று சற்றுக் கோபப்பட்டார். திருமாவளவன் அவர் கட்சியினரை ஒழுங்குபடுத்த முயன்றார்.

நான் என் அருகிலிருந்த மணியனிடம் வேடிக்கையாக, “இன்னும் நீங்கள் தில்லானா மோகனாம்பாள் சண்முகசுந்தரமாகவே இருக்கிறீர்களே” என்றேன். “அவர்கள் காலகாலமாக ஒடுக்குமுறைக்கு ஆளான பிள்ளைகள். இப்போதுதான் வெளியில், பொது அரங்கிற்கு வந்துள்ளனர். கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும்“ என்றும் என் கருத்தைச் சொன்னேன். அவரும் ஏற்றுக் கொண்டார். ஆனாலும், “சுபவீ, ஊசிமுனை விழும் ஓசை கூடக் கேட்காமல் இருக்கும் அரங்குகளில் பேசியே பழக்கப்பட்டவன் நான். எனக்கு ஒழுங்கும், கட்டுப்பாடும்தான் முக்கியம்“ என்றார். பிறகு தான் பேசத் தொடங்கும்போதும் என்னிடம் சொன்ன அதே கருத்தை மேடையில் எடுத்து வைத்தார். அதன்பிறகு அந்தத் தோழர்களும் அமைதி காத்தனர். கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

இப்போது அந்தப் பழைய செய்தியை மீண்டும் இங்கே முன்வைப்பதற்கு என்ன காரணம்? வேறொன்றுமில்லை. விசில் சத்தமே பிடிக்காத நண்பர் தமிழருவி மணியனின், காந்திய மக்கள் இயக்கத்திற்கு வரும் தேர்தலில் ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் என்ன தெரியுமா -”விசில்.”

விட்டது தொல்லை வெற்றியே நாளை!

ஒருவழியாக விஜயகாந்த் முடிவெடுத்து விட்டார். அவர் ஆசைப்படி, ‘கிங்’ பதவி வந்ததோ இல்லையோ, ‘கிங் வேட்பாளர்’ பதவி வந்துவிட்டது. தா.மா.கா போன்ற கட்சிகளும் இன்னும் ஓரிரு நாள்களில் இறுதி முடிவெடுக்க வேண்டிய கட்டம்.  தமிழ்நாட்டின் தேர்தல் களக் கூட்டணிகள் பற்றி இனிமேல் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

ஆனால் ஊடகங்கள் சில தி.மு.க.வுக்குப் பின்னடைவு என்று ஒரு செய்தியைப் பரப்பத் தொடங்கியுள்ளன. நாம் எதிரியின் வலிமையைக் குறைத்து மதிப்பிடவோ, நம் இழப்பை மறைக்க முயற்சிக்கவோ வேண்டியதில்லை. அதே போல, எதிரியைக் கூடுதலாக மதிப்பிட்டு அஞ்ச வேண்டியதுமில்லை.

தி.மு.க.வின் வாக்கு சதவீதம் என்று ஊடகங்கள் சொல்வதெல்லாம், குறைவான தொகுதிகளில் போட்டியிட்டு நாம் பெற்ற வாக்குகளை அடிப்படையாகக் கொண்டுதான். சென்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டதே 119 தொகுதிகளில் மட்டும்தான். அ.தி.மு.க. 150 இடங்களில் போட்டியிட்டது. அதனால் அக்கட்சி பெற்ற வாக்குகள் கூடுதல் சதவீதம் கொண்டதாகத்தான் இருக்கும். எனவே சதவீதக் கணக்கில் நாம் மயங்கி விடக் கூடாது. இரண்டு கட்சிகளும் ஏறத்தாழ சம வலிமை உடையனவே. தளபதியின் பயணமும், தலைநகரின் வெள்ளமும் இன்று அ.தி.மு.க. வாக்குகளை உறுதியாகக் குறைத்துள்ளன.

இப்போது தே.மு.தி.க. நம்முடன் இணையாததால், மிகுதியான இடங்களில் நாம் போட்டியிட வாய்ப்புள்ளது. கோவில்பட்டி போன்ற சில தொகுதிகளில் தி.மு.க போட்டியிட்டே ஆண்டுகள் பலவாகிவிட்டன. அவை போன்ற தொகுதிகளில் மீண்டும் தி.மு.க. இம்முறை போட்டியிடும் வேளையில் கட்சித் தொண்டர்களுக்குப் புதிய ஊக்கம் கிடைக்கும்.

தே.மு.தி.க. நம்முடன் வந்திருந்தாள் சிறிய அளவில் வாக்குகள் நமக்குக் கூடுதலாகக் கிடைத்திருக்கும் என்பது உண்மையே. ஆனால், விஜயகாந்துடனும், அவரது மனைவியுடனும் தேர்தல் வரையில் சேர்ந்து பயணம் செய்வது என்பதே மிக மிகக் கடினமானது. அதிலும் திரு பிரேமலதா இரண்டு ஜெயலலிதா போலப் பேசுகின்றார். அந்தக் குழுவிடம் போய்ச் சிக்கி கொண்டு, நாளை நாம் பெறக்கூடிய அனைத்து வெற்றிக்கும் அவர்கள் சொந்தம் கொண்டாடுவதை நாம் வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கும். எனவே நமக்கு நட்டம் ஒன்றுமில்லை.நல்லதுதான் நடந்துள்ளது.

அப்படியானால் யாருக்கு நட்டம்? மக்கள் நலக் கூட்டணிக்குத்தான். அதிலும் குறிப்பாகத் திரு வைகோவிற்குத்தான். இனி அந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்னும் தொலை தூரக் கனவு கூட அக்கட்சி தொண்டனுக்கு இருக்க முடியாது. கலைஞரை, ஜெயலலிதாவைப் ‘போற்றி, போற்றி’ பாடிய வாயால், இனி விஜயகாந்த் போற்றி பாடுவது மட்டுமே அவருடைய் வேலையாக இருக்கும். அதனை இன்றே அவர் தொடங்கி விட்டார்.

ஆனாலும் ஒரு செய்திக்காக அவரை நாம் பாராட்டியே தீர வேண்டும். இத்தனை பெரிய பள்ளத்தில் சரிந்து கொண்டிருப்பதை உணராமல், இவ்வளவு சந்தோஷப் படும் மனிதரை இனிமேல்தான் உலகம் பார்க்க வேண்டும். தருமரை (விஜயகாந்த்) இனிமேல் யாரும் நெருங்க முடியாதாம். எல்லாக் கேள்விகளுக்கும் அர்ஜுனனும், பீமனும் (வைகோ, திருமாவளவன்)தான் விடை சொல்வார்களாம். (ஏனென்றால் தருமர் உளறி விடுவார்).

தனிப்பட்ட முறையில், என்னைப் பொறுத்தளவு, விட்டது தொல்லை, வெற்றியே நாளை என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. விஜயகாந்தை விடத் தி.மு.க. தொண்டனின் வியர்வையிலும், விடா முயற்சியிலும் எனக்கு மிகப் பெரும் நம்பிக்கை உள்ளது. அவர்களின் வியர்வையில் விளையும் நம் வெற்றி!

‘வாழும் கலை’

ஒரு பெரிய விழா நடத்துவதற்கு அரசிடம் னுமதி பெறுவதே கடினம். நெரிசல் ஏற்படுமா, சுற்றுச் சூழலுக்குக் கேடு வருமா என்பன போன்ற ஆயிரம் வினாக்கள் எழுப்பப்படும். ஆனால் சாமியார் ரவிசங்கர் ‘உலகக் கலாசார விழா’ நடத்தினால், இராணுவமே அவருக்கு வாடகைக்கு விடப்படுகிறது.

ஆனால் பசுமைத் தீர்ப்பாயம், சுற்றுச் சூழலுக்கு மாசு உண்டாக்கினார் என்று கூறி 5 கோடி ரூபாய் தண்டம் விதிக்கிறது. ஒரு காசு கூடக் கட்டமாட்டேன் என்கிறார் சாமியார். சரி என்று சொல்லி அவருக்குக் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. (பாவம் ஒரத்தநாடு விவசாயி).

குற்றம் சாற்றப்பெற்றுள்ள ஒருவர் நடத்தும் விழாவில், இந்தியாவின் பிரதமரே நேரில் வந்து கலந்து கொள்கிறார். அந்தச் சாமியாருக்குப் பக்கத்திலேயே அமர்ந்து சிரித்துப் பேசி மகிழ்கிறார். அடடா மோடி எவ்வளவு நல்லவர் என்று நம்மவர்கள் பலர் வியந்து பாராட்டுகின்றனர்.

ஆனால் இவர்களை எல்லாம் ஈர்க்கும் மோடியோ சாமியார்களோடு காட்சி தந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே பாபா ராம்தேவ் என்று ஒரு சாமியாருடன் மத்திய அரசுக்கு மிக நெருக்கம். பணம், பொருள் இவற்றிலெல்லாம் ஆசையே இல்லாத அந்தச் சாமியார், பெரிய பெரிய வணிக நிறுவனங்களை நடத்தி வருகின்றார்..

ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி அனைத்து வணிக நிறுவனகளையும் மிஞ்சி விட்டது. 2014ஆம் ஆண்டில் 1200 கோடி ரூபாய்க்கு வணிகம் செய்துள்ளது. இந்தியா முழுவதிலுமாக பதஞ்சலிக்கு 4000 கடைகள் உள்ளன. ‘பிக் பஜார்’ போன்ற நிறுவனகளை நடத்தும் கிஷோர் பியானி போன்றவர்கள் சாமியாருடன் பங்குதாரர்களாக உள்ளனர்.

சாமியார் ரவிசங்கரும் முழு மூச்சாக இப்போது வணிகம் தொடங்கி விட்டார். ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத என்பது இவருடைய நிறுவனம். பியானியைத் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் இப்பொது ரவிசங்கர் உள்ளார்.

இவர்கள் பேசுவதெல்லாம் ஆன்மிகம். செய்வதெல்லாம் நேர்மையற்ற வணிகம்.

“வாழும் கலை” என்றால் என்னவென்று நம் மர மண்டைக்கு இப்போதுதான் புரிகிறது.

==========

‘கிங்’ நலக் கூட்டணி!

“தே.மு.தி.க. யாரோடும் பேரம் பேசவே இல்லை. பேரம் என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது” (அய்யோ பாவம்) என்றார் திரு பிரேமலதா.

“ மக்கள் நலக் கூட்டணியைத் தி.மு.க. உடைக்கப் பார்க்கிறது “ என்று அக்கூட்டணியின் தலைவர்கள் குற்றம் சாற்றிக் கொண்டே இருந்தனர்.

மேலே உள்ள இரண்டு கருத்துகளுக்கும் மாறாக இப்போது அவர்களே சில செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

vijayakanth vaiko sudhish

80 இடங்களும், 500 கோடி ரூபாயும் தருவதாகத் தி.மு.க., விஜயகாந்த் கட்சியிடம் பேரம் பேசியது உண்மை என்று கூறியுள்ளார் திரு வைகோ! பேரம் நடக்கும்போது அவரே அருகில் இருந்திருப்பார் போலிருக்கிறது. பேரம், பேச்சுவார்த்தை என்பதெல்லாம் இருவர் தொடர்புடையதுதானே! விஜயகாந்துக்குத் தொடர்பே இல்லை என்றால், தி.மு.க. யாருடன் பேரம் பேசியது? யாருமே இல்லாத அறையில் ஒருவர் தனியாக எப்படிப் பேரம் பேச முடியும்? எனவே தி.மு.க.வை இழிவு படுத்துவதாக நினைத்துக் கொண்டு, வைகோ தன் ‘புதிய தலைவரை’க் கொச்சைப் படுத்தி உள்ளார்.

அடுத்ததாக, 25.03.2016 காலை புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் உரையாடிய, விடுதலைச் சிறுத்தைகளின் கட்சிப் பொதுச்செயலாளர் திரு ரவிகுமார் இன்னொரு உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். யாருடனுமே நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்று விஜயகாந்த் கூறியிருக்க, அவரோடு நடந்த பேச்சுவார்த்தை பற்றி ரவிகுமார் கூறியுள்ளார்.

பா.ஜ.க.வையும் சேர்த்துக் கொண்டு ஒரு பெரிய கூட்டணியை அமைக்கலாம் என்றுதான் விஜயகாந்த் எங்களிடம் கூறினார். அதற்கு இடதுசாரிகள் இசைந்து வர மாட்டார்கள் என்றால், அவர்களை விட்டுவிட்டு நீங்களும், ம.தி.மு.க.வும் வாருங்கள் என்று கூறினார். ஆனால் நாங்களும் பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு வர இயலாது என்று கூறிவிட்டோம். பிறகு அவரை வென்றெடுத்து எங்கள் கூட்டணிக்கு அழைத்து வந்துவிட்டோம் என்றார் ரவிகுமார்.

ஆக மொத்தம் இடதுசாரிகளைக் கழற்றிவிடச் சொன்னதன் மூலம், மக்கள் நலக் கூட்டணியை உடைக்க முயன்றவர் விஜயகாந்த்தான் என்பது தெளிவாகிறது. அவரோடுதான் அவர்கள் இப்போது இணைந்துள்ளனர். எல்லாவற்றையும் அறிந்தும், நம் பொதுவுடமைக் கட்சித் “தோழர்கள்” சுயமரியாதையைக் கைவிடாமல் ‘கேப்டன்’ தலைமையை ஏற்றுக் கொண்டு புன்னகை புரிகின்றனர்.

இன்னொன்றும் நமக்குப் புரிகிறது. இடதுசாரிகளைக் கைவிட வேண்டும் என்பது விஜயகாந்த் கருத்தாக இருந்திருக்கும் என்று நினைப்பதை விட, பின்னால் இருந்து இயக்க முயன்ற பா.ஜ.க.வின் கருத்தாகத்தான் இருந்திருக்க முடியும். ‘கேப்டனை’ வரும் தேர்தலில் ‘கிங்’ ஆக்குவதற்கு பா.ஜ.க ஒப்புக் கொண்டிருந்தால், அவர் அந்தப் பக்கம் சாய்ந்திருப்பார். அவர்கள் அதற்கு இசையாத காரணத்தால், மக்கள் நலக் கூட்டணிக்கு வந்துள்ளார் என்பதும் புரிகிறது.

எப்படியோ, “கிங் நலக் கூட்டணி” உருவாகி விட்டது!

Pin It