மன மகிழ்ச்சிக்காகத்தான் பல நேரங்களில் நாம் திரைப்படங்களுக்கும், நாடகங்களுக்கும் செல்கிறோம்! ஆனால் அழுதபடியே ஒரு மேடை நாடகத்தைச் சென்ற வாரம் நான் கோவையில் பார்த்தேன் !
நான் மட்டுமில்லை, என்னோடு அந்த அரங்கில் அமர்ந்து நாடகம் பார்த்த பலர், அழுத கண்களோடுதான் அந்த நாடகத்தின் இறுதிக் காட்சிகளைப் பார்த்தனர் என்பது மிகை அன்று, உண்மை!
எழுத்தாளர் இமையத்தின் பெத்தவன் என்னும் குறுநாவலை கோவையில் உள்ள சங்கமம் குழுவினர், ஓவியர் ஏ.ஜே.செல்வின் இயக்கத்தில், "மீசைத் திமிர்" என்னும் பெயரில் நாடகமாக நடத்தினர் ! என்னையும், வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் அவர்களையும், நாடகம் பற்றிக் கருத்துரைக்க அழைத்திருந்தார்கள்!
ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, அந்தப் பெத்தவன் நூலை நான் படித்திருக்கிறேன். ஆனாலும் அந்த நாடகம் பார்க்கும்போது, என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை!
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு பெண்ணையும், ஆணையும் ஆணவக் கொலை செய்ய முயற்சி செய்யும் கதைதான் அது! பெற்றவர்களே தங்கள் மகளை விஷம் கொடுத்துக் கொன்று விட வேண்டும் என்று சாதிச்சங்கம் ஆணையிடுகிறது! பிள்ளையைக் கொல்லவும் மனம் இல்லாமல், சாதிக் கட்டமைப்பை மீறவும் துணி வில்லாமல், அந்தப் பெற்றோர், அந்தக் குடும்பம் ஆற்றாது அழும் கண்ணீர்தான் அந்த நாடகம் !
நம் நாட்டில் ஒவ்வொரு சாதியும், ஒரு குடியரசைப் போல இருக்கிறது! அதற்கு ஒரு குடியரசுத் தலைவரும், எழுதப்படாத சட்டங்களும் இருக்கின்றன! இங்கு ஒருவரின் பெயரில் தொடங்கி, அவருடைய நடை, உடை, பாவனை என ஒவ்வொரு அசைவையும் சாதிதான் தீர்மானிக்கிறது! அந்த சாதித் திமிர்தான், இங்கே மீசைத் திமிராய்க் காட்டப்பட்டிருக்கிறது!
தோழர் இமையத்தின் கதைக்கு, இயக்குனர் செல்வின் மிகப்பெரிய நியாயத்தைச் செய்திருக்கிறார்! அந்த மேடையில் நடித்த ஒரு சிறுவன் உள்ளிட்ட, நடிகர்கள் அனைவரும் தங்கள் நடிப்பால் நம் நெஞ்சத்தைப் பிழிகின்றனர்!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும், இந்த நாடகம் நடத்தப்பட வேண்டும்! சாதி எதிர்ப்பு உணர்வை, ஒரு பெரும் நெருப்பாய் ஒவ்வொருவரும் ஏந்திப் பிடிக்க வேண்டும்!
இது வெறும் நாடகமன்று, சாதிக்கு எதிரான பெரும் ஆயுதம்!
- சுப.வீரபாண்டியன்