கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அமெரிக்க நட்பு நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தவுடன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு "ஜோர்டான் நதிக்கு மேற்கே பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது" என்று ஆணவத்தோடு பேசியிருக்கிறார்.

சொந்த நாடே இல்லாத யூதர்கள் மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகள் என உலகின் பல நாடுகளில் குடியேறினார்கள்.அப்படி எகிப்தில் குடியேறிய யூதர்களால் ஏற்பட்ட உள்நாட்டுப் பிரச்சனையால் அன்றைய எகிப்திய மன்னன் பார்வோன் எகிப்தின் அடிமைகளாய் நடத்தினான் யூதர்களை. கடவுளின் வழிகாட்டுதலில் அங்கிருந்து யூதர்களை மீட்டு செங்கடலைக் கடந்து, பாலைவனங்களைக் கடந்து 'கானான்' நாட்டில் அவர்களைத் தங்கவைத்தான் மோசே என்று பைபிள் பழைய ஏற்பாடு சொல்கிறது. கானோன் நாடு என்றால் எது? இன்றைய பாலஸ்தீனம், இஸ்ரேல், லெபனான், சிரியா ஆகிய நிலப் பகுதிகள்தான் அன்றைய கானோன் நாடு. ஆக, பாலஸ்தீனம் - இஸ்ரேலின் தொடக்கப் புள்ளியை பைபிள் சொல்லி விட்டது.palastine woman with kidஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 'வெர்சாய்ஸ் உடன்படிக்கை' யின் மூலம் 1920 ஆம் ஆண்டு நிறுவப் பட்ட, ஐக்கிய நாடுகள் அவைக்கு முன்னோடியாக இருந்த 'லீக் ஆஃ நேஷன்ஸ்' ஆணையின் மூலம் 1922 முதல் 1948 ஆம் ஆண்டு வரை பிரிட்டனின் பொறுப்பில் பாலஸ்தீனம் வந்தது.

பாலஸ்தீனத்திற்குள் (இன்றைய இஸ்ரேல்) அகதிகளாக, ஒண்டவந்தவர்களான யூதர்கள் 'சியோனிஸ்ட் ஃபண்ட்' என்ற ஒரு நிதியத்தை 1901 ஆம் ஆண்டு நிறுவினார்கள். அதன் உண்மையான பெயர் "யூத தேசிய நிதியம்" (Jewish National Fund). சியோனிசம் என்றால் யூதர்களுக்கான நாடு, அந்நாட்டின் நிலங்கள் யூதர் வசமாக்குதல், அனைத்தும் யூத மயம், யூதநலத்தைக் கட்டமைப்பதற்கான நிறுவனம். அதன் ஒரு பிரிவுதான் சியோனிஸ்ட் ஃபண்ட் என்று அழைக்கப்பட்ட யூத தேசிய நிதியம். இந்நிதியத்தின் மூலம் உலக யூத மக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதிகளினால் பாலஸ்தீனத்தின் நிலங்கள் பெரும்பகுதிகளை யூதர்கள் கைபற்றினார்கள். அதாவது "ஒண்டவந்த பிடாரி, ஊர்ப் பிடாரியை விரட்டியது போல" என்பார்களே, அப்படி யூதர்களால் பாலஸ்தீனிய மண்ணில் இருந்து பாலஸ்தீன்யர்கள் விரட்டப்பட்டார்கள். அங்கிருந்து யூத - பாலஸ்தீன மோதல்கள் தொடர்ந்தன. இந்த நிலையில்தான் பிரிட்டனின் பொறுப்பில் பாலஸ்தீனம் வந்தது.

ஆனாலும் பாலஸ்தீன - யூதர்களின் கடும் மோதல்களைச் சரி செய்ய முடியாமல் பிரிட்டன் 1948 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறியது. உடனே யூதர்கள் அமெரிக்காவின் உதவியுடன் அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதியை 'இஸ்ரேல்' என்று அறிவித்து, ஐ.நா. வின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து யாசர் அராஃபாத்தின் 'பாலஸ்தீன விடுதலை இயக்கம்' தொடங்கி இன்றைய 'ஹமாஸ்' போராளிகள் வரையிலான பாலஸ்தீன விடுதலைப் போர் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

இப்போது சில ஆண்டுகளாக, பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிப்போம் என்று சொல்லிக் கொண்டு உண்மையில் பாலஸ்தீனத்தின் காசா நகர வீடுகள், மருத்துவமனைகள், மக்கள், குழந்தைகள், பெண்கள், வயதான பெரியவர்கள் மீது நேரடியாகக் குண்டுகளை வீசி ஒரு பெரும் இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருக்கிறார் இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு. இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரை நிறுத்த முயல்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்வது நாடகமாகும். இஸ்ரேலுக்கு எதிரான அல்லது பாலஸ்தீனத்திற்கு ஆதரவான தீர்மானம் வரும்போது அதை அமெரிக்கா தன் 'வீட்டோ' அதிகாரத்தால் ரத்து செய்து விடுகிறது.

காசா இனப்படுகொலைக்கு, அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கும் பல பில்லியன் டாலர் ஆயுதங்களைப் பயன்படுத்துவதாலும், என்றும் இஸ்ரேலுக்கே துணையிருப்பேன் என்று சொல்லும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், இனப்படுகொலையைக் கூச்சமின்றி செய்து கொண்டிருக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருவருமே குற்றவாளிகள். இஸ்ரேலுக்கே துணை செய்வோம் என்று சொல்லும் ட்ரம்ப்பின், இஸ்ரேல்- ஹமாஸ் சமரசம் எப்படி முடியும் என்று தெரியவில்லை.

காசாவைக் காப்பாற்ற, காசா மக்களைக் காப்பாற்ற, பாலஸ்தீனம் தனிநாடாக உருவாக - உலக நாடுகளே ஒன்று சேருங்கள்!

- எழில்.இளங்கோவன்