periyar karunadhini 450இந்திய நாட்டின் சுயராஜ்யத்திற்கு கதரும், ஹிந்தியுமே முக்கியமான மந்திரங்களாகப் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன. சென்ற ஒத்துழையாமையின் போது கதர் கட்டாதவர்களுக்கு ஓட்டு இல்லாமல் இருந்தது. இப்போது மில் முதலாளிகளின் தாக்ஷண்யத்திற்குக் கட்டுப்பட்டு அந் நிபந்தனை கைவிடப்பட்டு விட்டாலும், இப்போது வேறு ஒன்று அதாவது ஹிந்தி படிக்காதவர்களுக்கு பிரதிநிதித்துவமே இல்லை என்கின்ற கட்டளை ஏற்பட்டு அதனால் தென்னாட்டாருக்குப் பிரதிநிதித்துவம் கூட இல்லாமல் செய்தாய் விட்டதாக சொல்லப்பட்டாய் விட்டது. கதரைப் போன்ற ஒரு மோசடியான வியாபாரம் வேறு எதுவுமே இல்லை என்றே சொல்ல வேண்டும்.

சாதாரணமாக வியாபாரத்தில் அதிக மோசடி செய்கின்றவர்கள் மருந்து வியாபாரிகளேயாவர்கள். கதரைப் பார்த்த பின்பு (பேடண்ட் மெடிஷன் என்று) உரிமை செய்து கொண்ட மருந்து வியாபாரிகள் மோசடி எத்தனையோ பங்கு நல்லதென்பதோடு அவைகளில் அநேகம் சில சமயங்களில் நல்ல பலனையும் கொடுத்து வருகின்றது.

ஆனால் இந்தக் கதர் ஆரம்பம் முதல் அந்தம் வரை ஏமாற்றமானதாகவே முடிவு பெறுகின்றது. திரு.காந்தியவர்கள் மில்லுகளை ஒப்புக் கொண்டாய் விட்டது. மில் துணிகளை கட்ட வேண்டியது அவசியம் என்றும் தீர்மானித்தாய் விட்டது. இப்படி இருக்க இனி கதர் எதற்கு என்பது நமக்கு விளங்கவில்லை. அதுவும் மனதார மோசடியாக ஏன் நடைபெற வேண்டும் என்பதும் நமக்கு விளங்கவில்லை.

சாதாரணமாக, பஞ்சு பாரம் ஒன்றுக்கு 360 ரூபாய் விலையிருக்கும் போது கதர் விற்று வந்த விலையையே இன்றும் அதாவது பஞ்சு பாரம் ஒன்றுக்கு 125 ரூபாய் விலையிருக்கும்படியான காலத்திலும் விற்க அனுமதி கொடுத்திருப்பதானது எவ்வளவு அக்கிரமமானது என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும். பாரத்துக்கு 100 ரூபாய் இறங்கினால் கதருக்கு ஒரு கெஜத்திற்கு ஒரு அணா குறைத்ததாக பெயர் செய்கின்றார்கள்.

சாதாரணமாக இன்றைய விலைக்கு பஞ்சு ராத்தல் 1க்கு 0-4-0 அணா வே ஆகின்றது. மில்லில் நூற்றால் ராத்தலுக்கு இரண்டணாக் கூலியானால் கையில் நூற்பதால் ராத்தலுக்கு ஐந்தணா கூலி ஆகின்றதானாலும் அதையும் சேர்த்தே ஒரு ராத்தல் நூலுக்கு சேதாரம் உள்பட 0-9-6 அணா விலையே யாகின்றது. 10 அணா வென்றே வைத்துக் கொள்ளுவோம். 54 இஞ்சு அகல முள்ள 10 கெஜம் துணிக்கு 4 ராத்தல் இடை நூல் செல்லும் இதற்கு நெசவு கூலி 10 கெஜத்திற்கு இப்போதும் ரூ 1-14-0 கொடுப்பதாகவே வைத்துக் கொண்டு பார்த்தாலும் பீசு ஒன்றுக்கு ரூ4-6-0 ஆகின்றது. அதாவது, கெஜம் 1க்கு 7அணா ஆகும். இந்த விலைப்படி பார்த்தாலும் மில் துணிக்கும் கதருக்கும் 100க்கு 100 பங்கு அதாவது ஒன்றுக்கு இரண்டாகவே கெஜம் 0-3-6 அணாவுக்கு 7 அணா கொடுக்க வேண்டியதாகின்றது.

ஆனால் இப்போது காங்கிரசால் நற்சாட்சிப் பத்திரமும் அனுமதிச் சீட்டும் பெற்ற கதர் கடைகளில் 10 கெஜம் பீசு 1க்கு ரூ6-4-0க்கு விற்கப் படுகின்றது. அதாவது கெஜம் ஒன்றுக்கு 10 அணா வீதம் விற்பதில் அதில் 100க்கு 30 வீதம் அதிகமாக விலை கொடுக்க வேண்டியதா யிருக்கின்றது. காங்கிரஸ் சின்னத்திற்காக, அர்த்தமில்லாத சுயராஜ்யத்திற்காக ஒன்றுக்கு மூன்றாக பணம் அதிக செலவு செய்வதின் மூலம் இன்று கதர் வியாபாரிகள் கொள்ளை அடிக்கின்றார்கள் என்பதைத் தவிர நாட்டிற்கு விளைந்த நன்மை என்ன என்பது விளங்கவில்லை.

இது ஒருபுறமிருக்க திருப்பூரிலுள்ள கதர் வியாபாரிகள் எல்லாம் இந்த பத்து வருஷ­ காலத்தில் தங்களின் செல்வ நிலைமை எவ்வளவோ பெருக்கிக் கொண்டு வெறும் ஆட்கள் எல்லாம் இப்போது கையில் 10ஆயிரம் முதல் 40, 50 ஆயிரம் ரூபாய் வரையில் தங்கள் செலவு போக மீத்து இருக்கின்றார்கள். கோயில் அர்ச்சகர், சாமி பக்திக்காரர் ஆவதுபோல் கதர் வியாபாரிகள் காந்தி பக்தர்கள் ஆகியிருக்கின்றார்கள்.

அல்லாமலும் குறிப்பாக இந்த வருஷத்தில் மாத்திரம் அதாவது உற்சவ காலங்களிலும் அர்ச்சர்களுக்கு வரும்படி வருவதுபோல், சத்தியாக் கிரக காலங்களில் கதர் வியாபாரிகள் ஆளுக்கு 5 ஆயிரம் 10 ஆயிரம் சம்பாதித்து இருக்கின்றார்கள் என்றாலும் இவர்கள் எல்லாம் அநேகமாக சாதாரணமான வியாபாரிகள் என்றே சொல்லலாம். இப்படியிருக்க இவர்கள் இத்தனை பேர்களுடையவும் வியாபாரத்திற்கும் எத்தனையோ பங்கு மேலாகவே உற்பத்தி செய்து வட்டியில்லாத முதலை வைத்து வியாபாரம் செய்து வந்த காங்கிரஸ் கதர் போர்டுக்குச் சென்ற வருஷத்தில் இந்தப்படி நூற்றுக்கு 30 வீதம் லாபம் வைத்து விற்று வந்தும் கூட மொத்தத்தில் 15 ஆயிரம் ரூபாய் நஷ்டம் என்று கணக்குக் காட்டியிருப்பதாக ஒரு நண்பர் தெரிவித்திருக்கின்றதைப் பார்க்கும்போது காங்கிரஸில் கதர் என்பது எவ்வளவு மோசமான துறையாயிருந்து வருகின்றது என்பதை வாசகர்களே யோசித்துப் பார்த்து உண்மை உணர வேண்டுகின்றோம்.

தவிர அந்த இலாகாதான் இன்று தமிழ் நாட்டின் சத்தியாக்கிரகத்திற்கு பெரிதும் உதவி செய்து இருப்பதைப்பார்க்கும்போது வியாபார முறையிலேயே சத்தியாக்கிரகம் நடத்த கதர் இலாகா ஆயுதமாய் இருந்து வருவதும் பார்ப்பனர்கள் காங்கிரஸ்வாதிகளாகவும், தேச பக்தர்களாகவும், தியாகிகளாகவும் இருப்பதற்காக கதர் இலாகா இருந்து இம்மாதிரி மக்களை கொள்ளை அடித்தும் நஷ்டம் காட்டி வரவேண்டி வருவதும் உண்மை என்பதை இப்பொழுதாவது பொது ஜனங்கள் உணர்வார்கள் என்று நம்புகின்றோம்.

அன்றியும் அரசாங்க உத்தியோகத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வந்ததன் மூலமாக ஏதோ ஒரு சில பார்ப்பனருக்கு உத்தியோகம் கிடைக்கவில்லையானாலும் கூட காங்கிரசு, கதர், ஹிந்தி ஆகிய திட்டங்கள் அக் குறையை பூர்த்தி செய்வதோடு பங்கு கிடைக்கும்படி செய்யவே இவைகள் காப்பாற்றப்பட்டு பார்ப்பனருக்கு பயனளித்து வருவதை யார் மறுக்கக் கூடும் என்றும் கேட்கின்றோம் .

நிற்க கதரின் புனிதத்தன்மை இங்ஙனமிருக்க இனி ஹிந்தியின் புனிதத் தன்மையை சற்று கவனிப்போம்.

ஹிந்தியென்பது பார்ப்பன ஆதீக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட புரட்டு என்பதைத் தவிர அதில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்பதை அறிவுள்ள எவரும் ஆnக்ஷபிக்க மாட்டார்கள் என்றே கருதுகின்றோம். இந்தியா நாட்டில் முப்பத்தைந்தரை கோடி மக்கள் இருந்தாலும் பல பாஷை, பல மதம், பல நாகரீகம், பலநடை உடை பாவனைகளாக இருந்து வருவதை யாவரும் மறுக்க முடியாது. அப்படி இருந்தாலும் மக்களுக்குள் மதத்தின் பேராலும் ஜாதியின் பேராலும் பாஷையின் பேராலும், போட்டிகள் நடந்து வருவதும் மறுக்கக் கூடியவை அல்லவென்றே சொல்லுவோம்.

இந்த நிலைமையுலுள்ள சமூகங்களை பிரிவினைக்கு ஆதாரமாய் இருப்பதை கண்டுபிடித்து அவைகளை ஒழிக்க முயற்சிக்காமல் கண்மூடித்தனமாய் யெல்லோரையும் ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டுமென்று அரசியலின் பேரால் நிர்ப்பந்திப்பது எப்படி ஒழுங்காகும் என்று கேட்கின்றோம். ஹிந்தி என்பது அனேகமாக வடமொழியின் சார்போ, அல்லது திரிபோ ஆகும். இந்த நாட்டில் ஆரியர்கள் தங்கள் ஆதீக்கத்தை நிலை நாட்ட வடமொழிக்கு உயர்வு கொடுக்க பல வழிகளிலும் சூக்ஷி செய்து உலக வாழ்க்கையில் ஒரு ஒடிந்துபோன குண்டூசிக்கும் பயன்படாத பாஷையாகிய அவ்வடமொழிக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டு வருகின்றது என்பது வெகுநாளாக தமிழ்மக்கள் கவனித்து வரும் சங்கதியாகும்.

இப்போது மறைமுகமாய் வடமொழியை ஆதரிக்கவும் ஆரிய நாகரீகம் சமயக் கொள்கை ஆகியவைகளை நிலை நிறுத்தவும் ஹிந்தியை அரசியல் விஷயமாக ஆக்கி அதைக் கதரைப் போல் ஏன் கதரைவிட அதிகமாக ஒவ்வொருவருக்குள்ளும் புகுத்தப்பார்ப்பது எவ்வளவு வஞ்சமான காரியம் என்பதை நமது சோணகிரிகள் அனேகர் இன்னும் உணரவே இல்லை. தமிழ்ப் பண்டிதர்கள் சாம்பலையும் மண்ணையும் குழைத்து சூடு போட்டதுபோல் மேலெல்லாம் தீட்டிக்கொண்டு சிவ,சிவ,சிவ என்பதற்கும் ராம,ராம,ராம என்பதற்கும் உதவுவார்களே தவிர மற்றபடி நமது மக்கள் மீது அனாவசி யமான ஒரு பாஷை சூக்ஷித்திறத்தில் சுமத்தப்படுகின்றதே என்கின்றஅறிவும், கவலையும் சிறிதும் கிடையாது என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது. இன்றைய தினம் இந்திய மக்களுக்கு அவரவர்கள் சொந்த பாஷை தவிர வேறு பாஷை தெரிய வேண்டுமானால் அது இங்லீஷ் பாஷை என்றே நாம் தைரியமாய்ச் சொல்லுவோம்.

உலகமே தங்கள் கிராமம்தான் என்று எண்ணிக்கொண்டிருந்த காலம் மலையேறி இப்போது நிலப்பரப்பு, நீர்பரப்பு முழுதும் தெரிந்து 200 கோடி மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்போது உலக செலாவணி பாஷை ஏதோ அதை மனிதன் அறியாமல் கபீர்தாஸ் இராமாயணத்தை படிக்க வேண்டிய ஹிந்தி பாஷை எதற்குப் படிக்க வேண்டும் என்று கேட்கின்றோம்.

தமிழ் மக்களுக்கு சுயமரியாதை என்பது பல துறைகளிலும் வர வேண்டியிருப்பதை ஹிந்தியின் ஆதிக்கம் இனியும் அதிகமாய் வலியுறுத்துகின்றது என்றே சொல்லுவோம்.

தமிழ் பாஷையின் பாண்டித்தியம் என்பது இப்போதே அனேகமாய் பார்ப்பனர்களிடமே யிருக்கின்றது. தமிழ் பாஷையின் சங்கத் தலைவர்கள் பார்ப்பனர்களாய் இருக்கின்றார்கள் என்பதோடு இந்தப் பார்ப்பனர்கள் தமிழர்களை ஹிந்தி படிக்கக் கட்டாயப் படுத்துகின்றார்கள் என்றால் தமிழ் பாஷைக்காரர்களின் சுயமரியாதை எவ்வளவு என்பதை தமிழர்களே உணர்வார்களாக.

அரசியல் தத்துவத்தின் பயனாய் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பணத்தில் ஹிந்தி கற்று இந்தியத் தலைவர்களாகிய வடநாட்டுத் தலைவர்கள் இடமெல்லாமல் பார்ப்பனர்களே போய் காரிய தரிசிகளாய் அமர்ந்து அவர்களே தென்னாட்டுப் பிரதிநிதிகளாகி அவர்களது ஆதிக்கத்திற்கே இந்திய அரசியலைத் திருப்பி பயன்படுத்திக் கொண்டு வருகின்றார்கள்.

ஆகவே அரசியல் துறையில் இருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் அறிவு இருந்தாலும் அதை பார்ப்பனர்களுக்கு தக்க விலைக்கு விற்று விட்டார்கள் என்றாலும் அரசியலில் இல்லாத பார்ப்பனரல்லாதார்கள் அறிவையாவது தக்க வழியில் உபயோகித்து தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டாமா என்று கேட்கின்றோம்.

(குடி அரசு - துணைத்தலையங்கம் - 10.05.1931)

Pin It