முஸ்லிம்கள் தவிர்த்த பிறருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரசை ஒரு பிடி பிடிக்கிறார் அம்பேத்கர். “சாஸ்திரங்களின் வழியாகத் தீண்டத்தகாதவர்களைத் தீண்டத்தக்கவர்களின் ஆதரவாளர்களாகவும், தீண்டத்தக்கவர்களைத் தீண்டத்தகாதவர்களுக்கு எதிரானவர்களாகவும் இருக்கக் கற்பித்து விட்டு, பிறகு இருவரும் பொதுப் போட்டியில் போட்டியிட வேண்டும் என்பது, ஒன்று மனப்பிறழ்வின் அறிகுறியாக இருக்க வேண்டும்; அல்லது சூழ்ச்சிக்குப் பழகிப் போன மனப்பான்மையின் தடயமாக இருக்க வேண்டும். காங்கிரஸ் என்பது அரசியலில் புதுமையும், சமூக ரீதியில் பழமை வாதமும் என்பதைத் தங்கள் நோக்கமாகக் கொண்டவர்கள் பெரும்பான்மையினராகச் சேர்ந்து உருவாக்கிய ஓர் அமைப்பு என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அரசியலும் சமூகமும் ஒன்றின் மீது மற்றது பிடிப்பு வைத்திருக்காத இரு வேறு அமைப்புகள் என்பது தான் அவர்களது ஓயாத உச்சாடனமாக இருக்கிறது. அவர்களுக்கு அரசியலும், சமூகமும் என்பவை காலநிலைத் தேவைக்கேற்ப ஒரு நேரத்தில் ஒன்று மட்டும் என அணிந்து கொள்ள முடிகிற இரு உடைகளாகவே இருக்கின்றன. இவ்வாறான எண்ணம் நகைப்பிற்கு உரியது. ஏற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா என்ற பரிசீலனைக்குக் கூட உகந்தது அன்று அது. இத்தகைய எண்ணத்தின் மீது நம்பிக்கை வைப்பது லாபமீட்டக் கூடியதாக இருப்பதால், அதை அழிப்பது கடினமானது. இயற்கைக்கு மாறான சூழலில் பிறந்த காங்கிரசின் நடவடிக்கைகள் இந்த விதமாய் இருப்பது இயல்புதான்.... காங்கிரஸ் என்பது தேசியத் தன்மையற்ற அல்லது தேச விரோத அமைப்பாக இருப்பதால், வகுப்புவாரி தொகுதிகளின் மீதான அதன் கருத்துகள் பரிசீலனைக்கு உகந்தவை அல்ல.''
இப்படி அம்பேத்கர் எழுதி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், தான் கொண்டு வந்த வகுப்புவாரித் தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட கசப்போடு, இனி காங்கிரசை ஒழிப்பதே என் வேலை எனப் பெரியார் வெளியேறியது நடந்தேறியது. அதன் பின்னரும்கூட தனது லட்சியங்களில் ஒன்றாக காந்தி ஒழிய வேண்டும், பார்ப்பான் ஒழிய வேண்டும், கடவுள் ஒழிய வேண்டும் என்பவற்றோடு காங்கிரஸ் ஒழிய வேண்டும் என்னும் முழக்கத்தை முன்வைத்து தொடர்ந்து செயலாற்றி வந்தவர் பெரியார். பெரியாரின் மொழியில் சொல்வதானால் – பார்ப்பனியம், பணக்காரனியம் ஆகிய இரண்டின் மாற்றுப் பெயராகவே காங்கிரஸ் இருந்தது. அதன் ஏகபோகத்தை கேள்விக்குள்ளாக்கி அம்பலப்படுத்தியது, இவ்விரு தலைவர்களின் வாழ்நாள் பணிகளுள் ஒன்றாகவே இருந்தது.
காங்கிரஸ்காரர்களைத் தவிர, மிதவாதிகள் என்போரின் கருத்துக்களை அடுத்ததாக எடுத்துக் கொள்கிறார் அம்பேத்கர். இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்குப் பன்மைத் தொகுதிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என முன்மொழிந்தார்கள். தீண்டத்தகாதோர் மீது ஓரளவு கரிசனம் காட்டியவர்களாகவும் இவர்கள் இருந்தனர். ஆனால் இவர்களது கரிசனம் தீண்டத்தகாதவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதிகள் வழங்கினால் போதுமானது என்கிற அளவுக்கே இருந்தது. “தீண்டத்தகாதவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதிகள் வழங்குவதென்பது ஒன்றுமே வழங்காமலிருப்பதற்குச் சமமானது தான்'' என்று அவர்களை எதிர்கொண்டார் அம்பேத்கர்.
“சட்டப் பேரவை என்பது அரிதான பழம் பொருள் அங்காடி அன்று. அது எதிர்காலத்தை ஆக்கவும் அழிக்கவும் அதிகாரமுடைய ஓர் அவையாகும். தங்களது சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்கான ஒரு சட்டத் தீர்மானத்தை முன்னெடுக்கவோ அல்லது தங்களது நிலையை மோசமாக்கும் சட்டத் தீர்மானத்தைத் தடுக்கவோ ஒன்று அல்லது இரண்டு தீண்டத்தகாத உறுப்பினர்களால் எப்படி முடியும்?...
“தான் விரும்பும் எதையும் செய்வதற்கான தன்னுரிமை கொண்டதாக சட்டப் பேரவை இருக்கலாம்; அது என்ன செய்ய விரும்புகிறது என்பது அதன் சொந்தப் பண்பை அடிப்படையாகக் கொண்டது. எதையும் செய்வதற்கான தன்னுரிமை கொண்டதாக ஆங்கிலேய நாடாளுமன்றம் இருந்தபோதும் நீலக் கண்களுடன் பிறக்கும் வெள்ளை (ஆங்கிலேய) குழந்தைகளைப் பராமரிப்பது சட்டவிரோதமானது என்று ஒருக்காலும் அது சட்டம் இயற்றாது. ஒரு சுல்தானால் முடியுமென்றாலும் முகமது நபியின் மதத்தை மாற்ற மாட்டார். அதே போலவே ஒரு போப்பாண்டவரால் முடியுமென்றாலும் கிறிஸ்துவின் மதத்தை கவிழ்த்து விட மாட்டார்.
“அது போலவே, ஆதிக்க சாதியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட சட்டமன்றம் தீண்டாமையை நீக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்றாது. சாதி மறுப்புத் திருமணங்கள் சட்டப்பூர்வமானவை என அங்கீகரிக்காது. பொதுத் தெருக்களை, பொது கோயில்களை, பொதுப் பள்ளிகளைப் பயன்படுத்தத் தீண்டத்தகாதவர்களுக்கு இருக்கும் தடையை நீக்கியோ, சுருக்கமாகச் சொல்வதென்றால் தீண்டத்தகாதவர்களின் மனிதத்தைத் தூய்மைப் படுத்தியோ சட்டமியற்றாது. அது அவர்களால் முடியாது என்பதால் அல்ல; அவர்கள் செய்ய மாட்டார்கள் என்பதுதான் முதன்மையானது.
“ஒரு சட்டமன்றம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழ்நிலையின் விளை பொருளேயாகும். அச்சமூகத்தை எதுவெல்லாம் நிர்ணயிக்கிறதோ அதைப் பொறுத்தே அச்சட்டமன்றத்தின் அதிகாரமும் நிர்ணயிக்கப்படும். இது மறுக்க முடியாத அளவுக்கு வெளிப்படையான உண்மை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை வைத்து ஊகித்து விடலாம்.'' மேலே கண்டவாறு மிதவாதிகளின் கருத்தை எதிர்கொண்ட அம்பேத்கர், இதற்கு எடுத்துக்காட்டையும் கூறுகிறார்.
1916 இல் பம்பாய் சட்டமன்றத்தின் தாதாபாய் என்பவரால் தீண்டத்தகாதவர்களுக்கு ஆதரவான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அத்தீர்மானம் அனைவராலும் எதிர்க்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டது. அதோடு அத்தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் தனது இடத்தை அடுத்த தேர்தலில் மோசமான சாதியவாதியாகிய ஒருவருக்கு விட்டுத் தர வேண்டி இருந்தது. இச்சம்பவத்தை நினைவு கூறும் அம்பேத்கர், “தீண்டத்தகாதவர் மீது ஆதிக்கச் சாதியினர் காட்டும் இக்கரிசனம் பழிவாங்கும் வன்மத்துடன் கூடிய கரிசனம் அல்லவா?'' என்று கேட்கிறார்.
“தீண்டத்தகாதவர்களின் நலன்களின் அளவை வைத்துப் பார்க்கும்போது, அவர்களது மக்கள் தொகைக்கு உரிய அளவில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். ஒன்று அல்லது இரண்டு என்பது கருணையால் தரப்படுவதாக இருக்கலாம்; ஆனால் நியாயமானதாக இருக்காது'' என அம்பேத்கர் மிதவாதிகளின் ஒன்றிரண்டு கரிசனம் குறித்த விமர்சனத்தையும் முன்வைக்கிறார்.
அடுத்ததாக, ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான சேவைக் குழு (Mission) என்கிற அமைப்பு முன் வைத்த கோ-ஆப்சன் (Co-option) என்கிற திட்டத்தை அலசுகிறார். இத்திட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு தீண்டத்தகாத பிரதிநிதிகள் சிலரை நியமிப்பதுதான் உகந்தது என சேவைக் குழு முன்மொழிந்தது. “சேவைக் குழுவின் இந்த தயாளத்துக்காக அழுவதா, சிரிப்பதா என தீர்மானிக்க மிகவும் கடினமாக இருக்கிறது. அழுவதென்பது இந்த முட்டாள்தனமான திட்டம் எப்போதாவது ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும் என நம்புவதாகி விடும். எனவே, அதை எள்ளி நகையாடுவதுதான் சிறந்த வழியாக இருக்கும்'' என அத்திட்டம் குறித்து மதிப்பிடுகிறார் அம்பேத்கர். ஆதிக்கச் சாதி எஜமான்களிடமிருந்து மீட்டு தீண்டத்தகாதவர்களின் நிலமையை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது சேவைக் குழு. இப்போது ஆதிக்கச் சாதி எஜமானர்களுக்குக் கட்டுப்பட்ட அடிமைகளாய்த் தீண்டத்தகாதவர்களின் பிரதிநிதிகளையும், தீண்டத்தகாதவரையும் வைத்திருக்கும் உத்தேசத்துடன் இத்திட்டத்தை அது முன் வைத்திருக்கிறது என அம்பேத்கர் விமர்சித்தார். தனது ஆட்சி மன்றக் குழுவில் ஒரு தீண்டத்தகாதவரைக்கூட அனுமதிக்காத அக்குழுவின் திட்டம் – சுயநலன் கொண்டதாகவும், அதிகாரத்துவம் கொண்டதாகவும் இருப்பதால் அது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று அம்பேத்கர் கூறினார்.
மேற்கண்ட வாதங்களின் தொடர்ச்சியாக, அம்பேத்கர் தீண்டத்தகாதவர்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு உரிய அளவைவிட சற்றுக் கூடுதலாக ஒன்பது பிரதிநிதிகள் வழங்கப்பட வேண்டும். இப்பிரதிநிதிகள் வகுப்புவாரித் தேர்தலின் மூலம் தீண்டத்தகாதவர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை தனது திட்டமாக அம்பேத்கர் முன்வைத்தார்.
தனது இத்திட்டத்தை முன்வைத்த அதே வேளையில் வாக்குரிமை சீர்திருத்தக் குழுவின் மதிப்பீட்டையும் அவர் வைக்கத் தவறவில்லை. தீண்டத்தகாதவர்களை முன்னேற்றுவதற்கான அனைத்துச் சீர்திருத்தங்களையும் அறிவு வர்க்கம் நடைமுறைப்படுத்தும் என்ற அதன் நம்பிக்கை குறித்த கண்டனத்தையும் அம்பேத்கர் முன்வைத்தார்.
“அறிவுஜீவி வர்க்கத்தின் மனப்பான்மை என்பது, ஒரு பார்ப்பன மனப்பான்மைதான். அதன் கண்ணோட்டம் என்பது, பார்ப்பனக் கண்ணோட்டம்தான்... பார்ப்பனத் தலைவர் எவ்விதத்திலும் மக்கள் தலைவராக இருக்கவில்லை. அதிகபட்சமாக அவரது சாதியின் தலைவர் என்றுதான் அவரைச் சொல்ல முடியும். ஏனெனில், மக்களில் பிற பகுதியினரை அல்லாமல் தனது சாதி மக்களைத்தான் தன்னைப் போன்றவர்கள் என அவர்கள் உணர்கிறார்கள்.'' பார்ப்பனத் தலைவர்கள் மற்றும் அறிவுஜீவிகள் குறித்த துல்லியமான மதிப்பீட்டை அம்பேத்கர் வைக்கிறார்.
பார்ப்பனர்களுள் சொற்பமான சிலர் நடுநிலையும், நியாய உணர்வும் கொண்டவர்களாக இருக்கின்றனர்; என்றாலும் பெரும்பான்மையான பார்ப்பனர்கள் – மற்றவர்களை ஒடுக்குகிறவர்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும், கருணையற்றவர்களாகவும், கொடுமைக்காரர்களாகவுமே இருக்கிறார்கள் என்கிற விதமான எதார்த்தத்தை முன்வைக்கிறார் அம்பேத்கர்.
“தீண்டத்தகாதவர்களின் அவல நிலையை இதற்கு மேல் ஒரு சிறிதும் சகித்துக் கொள்ள முடியாது. சில இளகிய மனசுகளால் வேண்டுமானால் பரிவு காட்ட முடியலாம். உண்மையின் கடுங்கோபத்தின் ஆவேச அலைகளால் சும்மா இருக்க முடியாது. தன் போக்கில் அது பாவத்தைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் இடையே உள்ள அப்பாவிகள் சிலரையும் அது சேர்த்து அடித்துக் கொண்டு போய்விடும்'' என்ற எச்சரிக்கையை தீண்டத்தகாதவர்களின் சார்பில் நின்று அம்பேத்கர் விடுக்கிறார்.
முதலாம் உலகப் போரின் கசப்பான விளைவுகள் பலவாக இருந்த போதிலும், அதனால் ஏற்பட்ட நல்ல விளைவுகளில் ஒன்றாக சுயநிர்ணய உரிமை என்கிற கருத்தாக்கம் வெளிப்பட்டது என்கிறார் அம்பேத்கர். “அந்த சுயநிர்ணய உரிமையை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னேறிய வகுப்பினர் கூப்பாடு போடுவார்கள் எனில், தீண்டத்தகாதவர்கள் தங்களுடைய நலனுக்காக அவற்றின் பலன் தமக்கும் வேண்டும் என நியாயமாகவே உரிமை கோர மாட்டார்களா? தீண்டத்தகாதவர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டால், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அவர்களுக்கு மறுக்க முடியாது. ஏனெனில், வகுப்புவாரி பிரதிநிதித்துவம், சுயநிர்ணய உரிமை ஆகியவை ஒரே கருத்தைக் குறிப்பிடுகிற இரு வேறு சொற்றொடர்களே ஆகும்'' என தனது சாட்சியத்தை அம்பேத்கர் நிறைவு செய்கிறார்.
***
அடிமைகளின் நிலை
"தனது நடத்தையைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒருவனிடமிருந்து ஒன்றைப் பெறுபவன்' என்று அடிமையைக் குறித்து விளக்கமளிக்கிறார் பிளாட்டோ. இவ்விளக்கத்தை நாம் ஏற்றுக் கொள்வோம் எனில், தீண்டத்தகாதவர்கள் உண்மையில் அடிமைகளாகவே இருக்கிறார்கள். தங்களது நிலை கீழானதாக இருப்பதைக் குறித்து ஒருபோதும் புகார் கூறாத அளவுக்குத் தாழ்த்தப்பட்டவர்கள் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் காட்டுவதற்குக் கடமைப்பட்ட சாதாரண மரியாதையுடன் தங்களை நடத்த வேண்டும் என மற்ற வகுப்பினரிடம் வலியுறுத்துவதன் மூலம், தங்களது "தலைவிதி'யை மேம்படுத்த முயல்வது குறித்து கனவு காணக் கூட முடியாதவர்களாகவே அவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். தங்களது "தலைவிதி'ப்படி வாழவே தாங்கள் பிறந்திருக்கிறோம் என்ற கருத்து, அவர்களுடைய மனதில் ஆழமாகப் பதிக்கப்பட்டிருக்கிறது. தங்களது "தலையெழுத்து' மாற்றக்கூடியது என்று எண்ணக் கூட அவர்களால் ஒருபோதும் முடிவதில்லை. மனிதர்கள் எல்லாரும் ஒரே மாதிரி உருவாக்கப்பட்டவர்கள் என்றோ, தாங்கள் நடத்தப்படுவதைவிட மேம்பட்ட விதத்தில் தங்களை நடத்த வேண்டும் என வலியுறுத்தும் உரிமை அவர்களிடம் உள்ளது என்றோ, அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்க யாராலும் முடியாது.
அம்பேத்கர் நூல் தொகுப்பு: 2, பக்: 20
நேரடி அதிகாரம்
இந்தியாவில் தேசியவாதத்தின் தற்போதைய போக்கு, தீண்டத்தகாதோர் மீது கரிசனம் கொண்டவர்களின் தற்போதைய சொற்ப எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புவதற்கு இடமளிக்கவில்லை. மாறாக, தீண்டத்தகா÷தாருக்கு எதிரான பாவங்களைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் தான் பல்கிப் பெருகுவார்கள். அரசியல் போராட்டத்தின் வளர்ச்சியின் ஊடாக, சமூகச் சீர்திருத்தத்திற்கான போராட்டம் மங்கி வருகிறது; மறைந்து விட்டது என்று கூடச் சொல்லலாம். பிரார்த்தனை சமாஜம், பிரம்ம சமாஜம் ஆகிய முன்னேற்ற நடவடிக்கைகளுக்கான இயக்கங்கள், கடந்த கால வரலாற்றின் முடிந்து போன இயக்கங்கள் ஆகிவிட்டன. இனிவரும் காலமும் இதைப் போன்ற சில இயக்கங்களைத் தனது மடியில் வைத்திருக்கிறது.
கல்வி வளர்ச்சியானது, ஒரே ஒரு வகுப்புக்கு மட்டுமானதாக குறுக்கப்பட்டுவிட்டால், அது தாராளவாதத்துக்கு வழிகோலும் என்று சொல்ல முடியாது. வகுப்பு நலனை நியாயப் படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் அது வழிகோலலாம். ஒடுக்கப்பட்டவர்களை விடுவிப்போர்களை உருவாக்குவதற்குப் பதிலாக, கடந்த காலத்துக்கு வக்காலத்து வாங்குபவர்களையும், தற்போதைய நிலையை அப்படியே நீடிக்க வைப்பதற்கான ஆதரவாளர்களையும் அது உருவாக்கலாம். கல்வியின் இதுவரையிலான பலன் இதுதான் இல்லையா? வருங்கால குடிமக்கள் ஆட்சியில் இவை வேறுமாதிரி மாற்றமடைந்து விடும் என்று நம்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. எனவே, தீண்டத்தகாதவர்களை ஆதிக்க சாதியினரின் கருணையில் வாழும்படி விட்டுவிடுவதற்கு பதிலாக, பிறரைப் போல மற்றவர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறித்துக் கொள்ளாமல், சமூகத்தில் தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய இடத்தை உறுதி செய்ய ஆவலாய் இருக்கும் தீண்டத்தகாதவர்களிடையே – நேரடியாக அதிகாரத்தை வழங்குவதுதான் அறிவுப்பூர்வமான கொள்கையாக இருக்கும்.
அம்பேத்கர் நூல்தொகுப்பு: 2, பக் : 37