தீபாவளியைக் கொண்டாடுகிறோமோ இல்லையோ அதனை ஒரு கேளிக்கைக்கான நாள் என்று எடுத்துக் கொண்டு, குடும்பத்தினருடன் நண்பர்களுடன் மகிழ்வாக இருக்க வில்லை. குறைந்தது, அதனை ஒரு விடுமுறை நாளாகக் கருதி ஓய்வெடுக்கவும் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர், அன்று காலையிலிருந்து பழங்குடி மக்களை, இருளர்களை, நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்தவர்களைச் சென்று பார்ப்பதற்குச் செலவிட்டார்.
எத்தனையோ ஆண்டுகளாகத் தங்கள் நிலத்துக்கானப் பட்டா இல்லாமல், குடும்ப அட்டை இல்லாமல், சுருக்கமாகச் சொன்னால் முகவரியே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த அந்த மக்களுக்கு ஒரு புதிய ஒளியை வாழ்வில் அவர் அன்று ஏற்றி வைத்தார்.
அந்த ஏழை மக்கள் அத்தனை பேரிடமும் அப்படி ஒரு மகிழ்ச்சி. ஒரு முதலமைச்சரை இத்தனை அருகில், இவ்வளவு நெருக்கமாய்ப் பார்க்க முடியும் என்று அவர்கள் கருதி இருக்கமாட்டார்கள். கை பிடித்துக் குலுக்கி, தோளில் சாய்ந்து படம் எடுத்து, தன் சொந்த உறவைப் பார்ப்பது போல அந்த மக்கள் மகிழ்ந்தார்கள். சந்து பொந்துகளில் நடந்து சின்னஞ் சிறு குடிசைக்குள் நுழைந்து அந்த மாமனிதன் மக்களோடு மக்களாய்க் கலந்து நின்றார். இத்தனை நிகழ்வுகளும் கடந்த தீபாவளி நாளில்தான் நடந்தன.
ஆனால், இவற்றையெல்லாம் பாராட்ட மனம் இல்லாதவர்கள், பேசாமலாவது இருக்கலாம். ஆனால் திரும்பத் திரும்ப ஒரு கேள்வியை அவர்கள் முன் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டாமா என்பதுதான் அந்தக் கேள்வி. எடப்பாடி அவர்கள் முதலமைச்சராக இருக்கிற போது ஒவ்வொரு முறையும் வாழ்த்துச் சொன்னார், ஏன் ஸ்டாலின் வாழ்த்துச் சொல்ல வில்லை என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் முதல்வர்தான் தேவைப்படுகிறார். மக்களை வாழவைக்கும் முதல்வர் தேவை இல்லை. இத்தனைக்கும் பிறகு ஏன் அவர் வாழ்த்துச் சொல்லவில்லை என்று ஒரே ஒரு கேள்வியை முன்வைக்கிறவர்களுக்கு நாம் விடை சொல்ல வேண்டியிருக்கிறது.
அவர்கள் ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். தி.மு.க தலைவராகவோ, தி.க தலைவராகவோ அவர் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் எல்லோருக்கும் நான் முதல்வர் என்று சொல்லும் அவர் ஏன் இந்துக்களின் விழாவுக்கு மட்டும் வாழ்த்து சொல்ல வில்லை என்று கேட்கிறார்கள். இஸ்லாமியர்களின் விழாக்களுக்கு, கிறிஸ்தவர்களின் விழாக்களுக்கு, வாழ்த்துச் சொல்லும் போது இந்துக்களின் விழாக்களுக்கு மட்டுமே ஏன் வாழ்த்துச் சொல்வது இல்லை என்றும் கேட்கிறார்கள். இரண்டு கேள்விகளும் மேலோட்டமாகப் பார்க்கும்போது நியாயம் போலத்தான் தோன்றுகிறது. ஆனால் அதற்குள் இருக்கும் நுண் அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தி.மு கழகமும், முதலமைச்சரும், இன்றைய தமிழ்நாடு அரசும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்பதை நிலை நிறுத்தி இந்துக்களின் வாக்குகள் அவர்களுக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கம். ஆனால் கடந்த 50, 60 ஆண்டுகளாக இந்தப் பரப்புரையை அவர்கள் தொடர்ந்து செய்துகொண்டு இருந்தும், இந்த நிமிடம் வரையில் அதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஏனெனில் மக்கள் தங்களுக்கு நன்மை செய்கிற அரசு எது என்றுதான் தேடுகிறார்கள். தங்கள் மத விழாவுக்கு வாழ்த்துச் சொன்னால் போதும் என்று நினைத்து மக்கள் இருந்து விடுவதில்லை.
இப்போது நாம் அவர்களின் கேள்விகளுக்கு உரிய விடைகளைப் பார்க்கலாம். இந்து மத விழாக்களுக்கும் மற்ற மதங்களின் விழாக்களுக்கும் இடையில் ஒரு பெரும் வேறுபாடு இருக்கிறது. நீங்கள் தீபாவளி மட்டுமல்ல, ஆயுத பூஜை, சூரசம்காரம் என்று எந்த விழாவை எடுத்துக் கொண்டாலும், அந்த விழாவில் யாராவது ஒருவர் அல்லது சிலர் கொல்லப்பட்டிருப்பார்கள். தேவ அசுர யுத்தம் என்று அது சொல்லப்படும். ஒரு கேள்வி நம்மிடமமும் இருக்கிறது. கொன்றவரும் வென்றவரும் இந்துக் கடவுள் என்றால், கொல்லப்பட்ட வரும் வெல்லப்பட்ட வரும் யார்? கொல்லப்பட்டவர்கள் எல்லோரும் கிறிஸ்தவர்களா? இஸ்லாமியர்களா?. அவர்களும் இந்துக்கள் தானே.
அப்படியானால் ஒரு இந்துவின் வெற்றியை மட்டுமின்றி, இன்னொரு இந்துவின் மரணத்தையும் சேர்த்துக் கொண்டாடுவது எப்படிச் சரியாகும்? இப்போது நமக்குப் புரிகிறது. எல்லோரும் இந்துக்கள் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கும் மக்களுக்கு புரிய வேண்டும். இவர்களிடம் இரண்டு இந்துக்கள் இருக்கிறார்கள். ஊசிமணி, பாசி மாலை போட்டுக் கொள்ளும் இந்துக்களுக்கு முதலமைச்சர் நன்மை செய்தார். ஆனால் பூணூல் போட்டுக் கொள்ளும் மனிதர்களை மட்டும்தான் இவர்கள் இந்துக்கள் என்று கருதுகிறார்கள். ஒவ்வொரு கதைக்குப் பின்னாலும் கொல்லப்படுகிறவர்களாகவும், வெல்லப்படுகிறவர்களாகவும் சூத்திரர்களும் பஞ்சமர்களும்தான் இருக்கிறார்கள். எனவே இந்த தேவ அசுர யுத்தம் என்பது பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோருக்கு இடையிலான யுத்தம்தானே! எனவே பார்ப்பனரல்லாதார் கொல்லப்பட்டப் பிறகு அதனை அவர்களும் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதற்கு நாமும் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
சரி விநாயகர் சதுர்த்தி, ராமநவமி, கோகுலாஷ்டமி போன்றவைகளில் யுத்தம் எதுவும் இல்லையே அது பிறந்தநாள் வாழ்த்து தானே? நீங்கள் நபிகள் பிறந்த நாளுக்கும், இயேசுநாதர் பிறந்த நாளுக்கும் வாழ்த்துச் சொல்லும் போது ஏன் விநாயகர் பிறந்த நாளுக்கும் ராமர் பிறந்த நாளுக்கும் வாழ்த்துச் சொல்லக் கூடாது என்று இன்னொரு கேள்வி? சரிதான். ஆனால் இதிலும் ஒரு வேறுபாடு இருக்கிறது. நபிகளும், இயேசுவும் கடவுள் என்று அவர்கள் சொல்லவே இல்லை. கடவுளின் தூதர்கள் என்கிறார்கள். எனவே ஒரு தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது போன்றதுதான் அது. அவர்கள் மனிதர்களாக வாழ்ந்தவர்கள். ஆனால் இந்து மதத்தில் சொல்லப்படும் எல்லோரும் கடவுளர்கள் அல்லது கடவுளின் அவதாரங்கள், இந்து மதம் என்பது சனாதன மதம், இதற்கு அந்தமும் இல்லை ஆதியும் இல்லை என்கிறார்கள். மதத்திற்கே ஆதி அந்தம் இல்லை என்றால், மதத்தைப் படைத்தக் கடவுளுக்கு எப்படி ஆதியும் அந்தமும் இருக்க முடியும்? பிறப்பும் இறப்பும் உடையவராக இருந்தால் அவர் எப்படிக் கடவுளாக ஆக முடியும்? நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். கிருஷ்ணர் கொலை செய்யப்பட்டார். ராமர் நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதுதான் அவர்கள் தருகிற புராணக்கதை. தற்கொலை செய்துகொள்வது எப்படிக் கடவுளின் மனோபாவம் ஆகும் என்று கேட்டால், உடனே நீங்கள் எல்லோரும் இந்துமத விரோதிகள் என்கிறார்கள்.
ஆகவே பிறப்பும், இறப்பும் அற்றவர் கடவுள் என்று சொல்லிவிட்டு, கடவுளின் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள் என்று சொல்கிறீர்கள். அதுமட்டுமல்லாமல் அப்படி அவதாரம் எடுத்து வந்த ராமர் என்ன செய்தார், தவம் செய்த சம்புகன் எனும் சூத்திரனைத் தலையை வெட்டிக் கொன்றார். எதற்காகச் சம்புகன் கொல்லப்பட்டார்? அவன் இந்து மதத்திற்கு எதிராக ஏதேனும் பேசினானா? இந்து மதக் கடவுள்களை நிந்தனை செய்தானா? இல்லை. இந்து மதம் சொல்லுகிற தவம் என்னும் முறையைத்தானே அவன் மேற்கொண்டான். பிறகு ஏன் அவரை இராமர் கொன்றார்?
சூத்திரன் எப்படித் தவம் செய்யலாம் என்று கேட்டு இராமர் அவன் கழுத்தைச் சீவினார். எனவே இங்கே மதம் என்கிற பெயரில் வருணம்தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்னும் சிக்கல்தான் மேலெழுந்து நிற்கிறது. எனவே பார்ப்பனர்களின் கொண்டாட்டங்களை அவர்கள் கொண்டாடிக் கொள்ளட்டும். பார்ப்பனரல்லாதார்கள் கொண்டாடவேண்டும் என்று எதிர்பார்ப்பதும், பார்ப்பனரல்லாதார்களின் அரசு வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் எந்த வகையிலும் நியாயமாகாது.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் மக்களுக்காக இந்த அரசு இயங்குகிறது. அந்த மக்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களாகத்தான் இருக்கிறார்கள். இந்துக்களுக்கு நன்மை செய்கிற அரசைப் போற்றுவதுதான் நேர்மையானச் செயலாக இருக்க முடியும். அப்படி இல்லாமல் இந்துக்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. இந்து மதம் பற்றியும், இந்துக் கடவுள் பற்றியும், அவற்றை எல்லாம் காப்பாற்றிக் கொண்டு இருப்பதாகச் சொல்லப்படும் பார்ப்பனர்களைப் பற்றியும்தான் நாங்கள் கவலைப்படுவோம். பார்ப்பனர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதும், அவர்களை வணங்கி நிற்பதும், அவர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்வதும் நான் இந்து மத அடிப்படை என்று சொன்னால், நாங்கள் சாகும்வரை இந்துமத விரோதிகள் ஆகத்தான் இருப்போம்.
- சுப.வீரபாண்டியன்