இந்து மத பரிபாலன சட்டம் ஒன்று சென்னை சட்டசபையில் சுமார் 6, 7 வருஷத்திற்கு முன் கொண்டு வரப்பட்ட காலத்தில் பார்ப்பனர் எல்லோரும் ஏகோபித்தும் பார்ப்பனரல்லாதார்களில் பலர் பார்ப்பனருடன் சேர்ந்து கொண்டும் அச்சட்டத்தை “மதத்தில் சர்க்கார் பிரவேசித்து விட்டார்கள்” என்று ஆட்சேபித்ததுடன் இச்சட்டம் கொண்டு வரப்பட்டவர்கள் மீதும் கெட்ட எண்ணம் கற்பித்து எவ்வளவோ எதிர்பிரசாரம் செய்தும் வந்தது யாவரும் அறிந்ததேயாகும்.
அதுமாத்திரமல்லாமல் காங்கிரஸ் முதலிய அரசியல் ஸ்தாபனங்களின் பேராலும் பல பார்ப்பனர்கள் அச்சட்டத்தை எதிர்த்ததும் இந்தக் காரணத்தை வைத்தே தேர்தல்களில் எதிர்பிரசாரம் செய்ததும் பொது ஜனங்களுக்கு ஞாபகமிருக்கலாம். ‘இந்து’ ‘சுதேசமித்திரன்’ முதலிய “தேசீய” பத்திரிகைகளும் அச்சட்டத்தைக் கண்டித்து எழுதி பார்ப்பன சந்தாதாரர்களைக் கொண்டு மகஜர்கள் வாங்கி சர்க்காருக்கு அனுப்பியதும் ஞாபகமிருக்கலாம். அப்படிப்பட்ட நெருக்கடியான காலத்தில் நாமும் நமது நண்பர்கள் பலரும் பொது ஜன அபிப்பிராயம் என்பதற்கு எதிராய் நின்று பார்ப்பனர்களின் எதிர்ப்புகளை யெல்லாம் தாக்கி கண்டித்து அச்சட்டத்தின் நன்மையைப் பற்றியும், தேவையைப் பற்றியும் பொது ஜனங்களுக்கு எடுத்துக் கூறி எதிர்ப்பிரசாரத்தை அடக்கி வந்ததும் யாவரும் அறிந்திருக்கலாம்.
இந்த நிலையில் அச்சட்டம் சட்டசபையில் நிறைவேறி, கவர்னர், துரை, வைசிராய் பிரபு, அரசர் பெருமான் ஆகியவர்கள் சம்மதம் பெற்று முடிவாக அது அமுலுக்கு வந்திருக்கும் விஷயமும் யாவரும் அறிந்ததேயாகும்.
ஆனால் இப்போது அந்த சட்டத்தினால் ஏற்பட்ட பலன் என்ன? என்று பார்த்தோமேயானால் அச்சட்டம் இல்லாதபோது இருந்த நிலைமையைவிட எந்த அளவாவது “இந்து மத தர்மம்” மாறுபாடு அடைந்திருக் கின்றதென்றோ, “மக்களுக்கோ” “மதத்திற்கோ” “தர்மத்திற்கோ” நன்மை ஏற்பட்டிருக்கின்ற தென்றோ சொல்லுவதற்கில்லை என்றுதான் சொல்ல வேண்டியதாக இருக்கின்றது. ஆனால் அச்சட்டத்தின் பேரால் சில பார்ப்பன ரல்லாதார் கொஞ்சம் சம்பளம் பெறுகின்றார்கள் என்பதை ஒப்புக் கொள்ளுவோ மென்றாலும் விகிதாச்சாரத்தைவிட அதிகமாகவே பார்ப்பனர்களும் அச்சம்பளத்தில் பங்கு பெறுகின்றார்கள் என்பதைப் பார்த்தால் அதிலும் பார்ப்பனரல்லாதாருக்கு விசேஷ லாபமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் அந்த இலாக்காவின் மூலமாக பார்ப்பனரல்லாதார் இயக்க மென்னும் ஜஸ்டிஸ் கட்சி அதிகாரத்திலும் பதவியிலும் இருப்பதற்கு ஒரு வசதி அளிக்கின்றது என்கின்ற முறையில் அனுகூலமாயிருக்கின்றது என்று நினைப்போமானால் அவ்வழியிலும் பார்ப்பனர்களும் தங்கள் விகிதாச்சாரத்திற்கு மேற்பட்ட பதவியையும் அதிகாரத்தையும் லாபத்தையும் அனுபவித்துக் கொண்டுதான் வருகிறார்கள். ஆதலால் அந்த வழியிலும் பார்ப்பன ரல்லாதாருக்கு விசேஷலாபம் ஏற்பட்டது என்று சொல்லி விடுவதற்கும் இல்லை.
கோவில் நிர்வாகங்களின் யோக்கியதைகளைப் பற்றி நமக்குக் கவலை யில்லையானாலும் அதன் வரும்படிகளான தேசத்தின் பொதுச் சொத்துக்கள் போகும் மாதிரியைப் பார்க்கும் போது அதாவது இந்தச் சட்டத்திற்கு முன் அதிகாரத்தின் பேரால் திருட்டும் கண்டபடியெல்லாம் செலவினங்களின் பேரால் கொள்ளையும் போய்க் கொண்டிருந்த பணங்கள் இப்போது அதாவது சட்டத்திற்குப் பிறகு சட்டப்படி திருட்டும் கொள்ளையும் போய்க் கொண்டிருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டி யிருக்கின்றதற்கு வருந்துகின்றோம். ஆகவே அந்த வகையிலாவது பயன் உண்டு என்று சொல்லுவதற்கும் இடமில்லை.
மற்றபடி மக்களுக்கு மத உணர்ச்சியோ, தர்ம உணர்ச்சியோ, ஒழுக்க உணர்ச்சியோ கற்பிக்கப்படுகின்றதா என்றாவது பார்த்தால் அந்தத் துறையிலும் விஷயங்களில் முன்னையைவிட இப்போது மோசமாகவே நடைபெற்று வருவதை எடுத்துச் சொல்ல வேண்டி இருப்பதற்கும் வருந்த வேண்டியதாகவே இருக்கின்றது.
தேவஸ்தானக் கமிட்டிகள் நியமிக்கப்படும் ஒழுங்கும் அவர்களால் தர்ம கர்த்தாக்கள் டிரஸ்டிகள் நியமிக்கப்படும் ஒழுங்கும் பெரிதும் முட்டாள்களின் பணத்தை நெஞ்சில் சிறிதும் ஈரமற்ற கனவான்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளையாகவே நடைபெற்று வருகின்றன. கோயிலின் பேரால் மதத்தின் பேரால் வசூலாகும் பணத்தில் ஒரு காசு குறைவில்லாமல் வசூல் செய்யவும், கோயிலின் பேரால் மதத்தின் பேரால் நாசமாகும் பணத்தில் அரை காசு குறையாமல் வட்டியுடன் நாசமாக்கவும், கோயிலின் பேரால் மதத்தின் பேரால் வயிறு வளர்ப்போர்களுக்கு எவ்விதக் கேள்வி கேப்பாடுமில்லாமல் தாராளமாய் பிழைப்பு நடக்கவுமான காரியங்கள் தான் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த மாதிரி சட்டம் நிறைவேற்றப்பட்டதால் என்ன பலனைக் கொடுத்தது? இதன் அவசியம் என்னவாயிற்று? என்பதைப் பற்றி யோசிக்க வேண்டியதற்கு இது முக்கியமான சமயம் என்றே சொல்லுவோம்.
எல்லா மக்களுக்கும் சம நியாயம், சம சந்தர்ப்பம், சம உரிமை கொடுப்பதே நோக்கமாகக் கொண்டதன் பயனாகவே பதவியும், அதிகாரமும் பெற்ற கூட்டத்தார் இன்று இந்த இந்து மத தர்ம பரிபாலன சட்டத்தினால் ‘இந்து மத’த்திற்கு, தர்மத்திற்கு செய்த நன்மை என்ன என்பதை பொது ஜனங்கள் யோசித்துப் பார்க்க வேண்டியது முதற்கடமையாகும். இரண்டாவதாக இந்த மாகாணத்தில் இந்து மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு இருக்கும் 4-கோடி மக்களில் சுமார் ஒரு கோடி மக்களுக்கு இந்துக் கோவில்கள் என்பவைகளில் பிரவேசமளிக்க இதுவரை யாதொரு மார்க்கமும் செய்யாமல் ஒரு கூட்டமானது 10-வருஷமாய் மாதம் 5000, 4000, 2000, 1000, 800, 500, 250, 150, 100, 75 வீதம் பல நூற்றுக்கணக்கான மக்கள் சமதர்மத்தின் பேரால் பதவி அடைந்து சம்பளம் பெற்று வாழ்வதில் என்ன பிரயோஜனம் என்பதையும் யோசித்துப் பார்க்கும்படி பொது ஜனங்களுக்கு நினைப்பூட்டுகின்றோம்.
மற்றும் 400-லட்சம் “இந்து மக்களில்” 13 லட்ச மக்கள் பார்ப்பனர் என்னும் பேரால் பிறவியின் காரணமாக அக்கோயில்களில் அனுபவிக்கும் நியாயமற்ற உயர்வையும், செல்வத்தையும் சிறிதுகூட மாற்றி நியாயம் செய்ய முடியாமலும், அவர்கள் தவிர மற்ற மக்கள் சிங்கு, நாயகர், செட்டியார், முதலியார், நாயுடு, தேவர், பிள்ளை என்கின்ற எல்லா ஜாதியாருக்கும் அக் கோயிலில் பார்ப்பனர் கிட்ட நெருங்கக்கூடாதவர்களாய் இருந்து அனுபவிக்கும் இழிவையும் கொடுமையையும் சிறிதுகூடப் போக்க முடியாமலும் இருக்க மேல்கண்டபடி ஒருசிலரை இந்து தர்மபரிபாலனம் என்னும் பேரால் கொள்ளையடிக்கவிட்டுக் கொண்டிருப்பதிலும் என்ன பயன் என்று யோசித்துப் பார்க்கும்படியும் விரும்புகின்றோம்.
மற்றும் சாதாரணமாக சென்னை மாகாணத்தின் இந்து கோவில், மடம் ஆகியவைகளின் வரும்படி போர்டார் கணக்குப்படியே வருஷம் ஒன்றுக்கு இரண்டரை கோடி ரூபாய் ஆகின்றது.
மற்றும் அதன் பேரால் பொது ஜனங்களுக்கு ஏற்படும் செலவைப் பற்றி இங்கு நாம் குறிப்பிடவில்லை. .
ஆனாலும், அக்கோயில்களுக்கும், மடங்களுக்கும் இருக்கும் வரும்படி இல்லாத ரத்தினம், பொன், வெள்ளி முதலிய உலோக வகைகளின் பொருமானம் எத்தனை கோடி ரூ. பொருமானதாகும்? ஆகவே அவற்றின் குறைந்த வட்டி வருமானமும் சேர்ந்தால் இன்னும் வருமானம் அதிகப் படலாம். இந்த வருமானங்களில் இந்துமத பரிபாலன போர்டார் மற்றும் அதன் சிப்பந்திகள் ஆகியவர்கள் சம்பளமாகப் பெரும் ஒரு பாகம் தவிர மற்ற பாகங்கள் முழுவதும் ஒழுக்கமற்றதும், அனாவசியமானதுமான வகைகளிலேயே செலவாகின்றன என்பதை யாராவது மறுக்க முடியுமா? அதாவது புராணக் கதைகளில் வரும் பாத்திரங்களான 'சாமி'களினுடையவும் அவர்களது பெண்டுபிள்ளை வைப்பாட்டி அடியார்கள் பக்தர்கள் ஆகியவர்களினுடையவும் பூசைக்கும், கல்யாண முதலிய உற்சவத்திற்கும் என்றும், மற்றும் டிரஸ்டிகளின் சொந்தப் பிரயோசனத்திற்கு என்றும் வீண் போகின்றனவே தவிர வேறு என்ன பலனுக்கு பயன்படுகின்றன?
ஆகவே கோவில், மடம் ஆகிய ஸ்தாபனங்களும், அதன் செல்வங்களும் இந்து மத தர்மபரிபாலன போர்டு ஏற்பட்டு 7 வருஷகாலமாகியும் யாதொருவித மாறுதலும் இல்லாமல் இருக்குமானால் இந்தச் சட்டத்தினால் நன்மை ஏற்பட்டதாக எப்படிச் சொல்ல முடியும் என்று கேட்கின்றோம்.
குறைந்த அளவாவது கோவில்கள் மூலமும், மடங்களின் மூலமும் மக்களுக்குச் சமத்துவ மேற்படுத்த அவர்களுக்கு யோக்கியதை இல்லா விட்டாலும், அச்செல்வத்தைக் கொண்டு மக்களுக்கு அறிவு விர்த்திக்கோ, தொழில் விர்த்திக்கோ பயன் படும்படியான வித்தைகளைப் படிப்பிக்க வேண்டிய ஏற்பாடுகளாவது செய்திருக்கக் கூடாதா என்று கேட்கின்றோம். ஆகையால் அந்தத் துறையிலும் இதுவரை ஏதாவது செய்யப்பட்டதாகச் சொல்லுவதற்கில்லாமலே இருந்து வருகின்றது.
ஆகவே, இந்த நிலைமையில் இருந்து வரும் மதபரிபாலன போர்டை கண்டிக்காமல் இருக்க முடியவில்லை. மத போர்டு நிர்வாகஸ்தர்கள் பெரும்பாலும் நாணையமும், யோக்கியப் பொருப்புமுள்ளவர்கள் என்பதில் நமக்கு ஆnக்ஷபமில்லை என்பதோடு அவர்கள் பெரும் சம்பளம் பெறத் தகுதி உடையவர்கள் என்றே சொல்லலாம். ஆனாலும் அவர்களால் மத தர்மபரிபாலனத்திற்கு என்ன பயன் என்பதுதான் நமது கவலை.
மதம் என்றால் என்ன? தர்மம் என்றால் என்ன? என்கின்ற கேள்விகள் புறப்படும் காலையில் மதத்திற்கும் தர்மத்திற்கும் எவ்வளவோ தத்துவார்த்தங்கள் கூறிவிட்டு இயற்கைக்கு விரோதமான விளையாட்டு பொம்மைகளுக்கும் சித்திரங்களுக்கும் செய்யும் பூஜை உற்சவம் முதலியவைகளின் பேரால் பல கோடிக்கணக்காக செல்வத்தை பாழாக்குவதுதானா மத தர்ம பரிபாலனம் என்று கேட்கின்றோம்.
இவ்வளவு கோடி ரூபாய்களை இவ்வளவு அனாகரீகமான வழியில் இந்த உலகில் வேறு எந்த தேசத்திலாவது இவ்வளவு முட்டாள்தனமாக பாழாக்கப்பட்டு விட்டு 100க்கு 97 பேர்கள் கீழ்ஜாதி மக்களாகவும், 100க்கு 90 பேர்கள் தன் பெயர் எழுதத் தெரியாத தற்குறிகளாகவும் இருந்து வருகின்றார்களா என்று கேட்கின்றோம். பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்து பார்ப்பனரல்லாத மக்கள் ஆதிக்கம் வர வேண்டும் என்றும் அதுவும் சமதர்ம ஆதிக்கம் வர வேண்டும் என்றும் கருதி இச்சட்டத்தை ஆதரிக்கப் பாடுபட்டதின் பலன் இதுதானா என்று யோசித்துப் பார்த்தால் நெஞ்சம் குமுறுகின்றதே ஒழிய கொஞ்சமும் திருப்தி அடைய இடமில்லாமலேயே இருக்கின்றது.
உலகம் போகின்ற போக்கில் மதப்பிடிவாதக்காரர்களும் புராண மரியாதையில் மூழ்கி இருந்தவர்களுமான பலர் தைரியமாக வெளிவந்து மகாநாடுகள் கூட்டி இம்மாதிரி நாட்டின் செல்வம் பாழாய்க் கொண்டிருப்பதை நல்வழியில் பயன்படுத்த இசைந்து வருகின்ற காலத்தில்
அதாவது திருநெல்வேலியில் இம்மாதம் 4, 5 தேதிகளில் கூடிய சைவ சித்தாந்த மகாநாட்டில்,
- “ஏராளமான செல்வங்களையுடைய சைவ மடங்களை அரசாங்கத்தார் இந்து மத பரிபாலன இலாகாவின் கீழ் கொண்டு வராமலும் போர்டார்களுடைய பரிசீலனைக்குக்கூட கொண்டு வராமலும் விட்டு வைத்திருப்பது நியாயமல்ல வென்றும் இனியாவது அப்படிப்பட்ட மடங்களையும் ஆதீனங்களையும், அரசாங்க பரிபாலன இலாக்காச் சட்டத்திற்குள் கொண்டு வந்து அவைகளை பரிசீலனை செய்து வரவேண்டுமாய் அரசாங்கத்தாரை இச்சைவ மகாநாடு வேண்டிக் கொள்ளுகின்றது.”
- “ஏராளமான செல்வம் படைத்த முக்கியமான பொது மடங்களே இச்சட்டத்தைவிட்டு விலக்கப்படுவதாயிருந்தால் இந்த மாதிரியாக ஒரு சட்டமே தேவை இல்லை என்றும் சட்ட சபையில் சமீபத்தில் கொண்டுவரப் போகும் தண்டவரி சட்ட திருத்தமும் அவசியமில்லை என்றும் இப்போது இச்சட்டம் அமுல் நடக்கின்ற மாதிரியானது கோயில்களுக்கும் சிறு மடங்களுக்கும் வீண்தொல்லையையும் நஷ்டத்தையும் விளைவிக்கத்தான் பயன்படுகின்றதா யிருக்கின்றதென இச்சைவ மகாநாடு தீர்மானிக்கின்றது.”
- “சைவ சமய நூல்கள் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று வரையறுத்துக் கூறுகின்றமையால் சிறு தெய்வவணக்கமும் உயிர்ப்பலி இடுதலும் ஜாதி வேற்றுமைகள் காட்டுதலும் சைவ ஒழுக்கத்திற்கு மாறுபட்ட தென்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.”
என்பதான தீர்மானங்களை செய்திருக்கின்றபோது யாரோ சில சுயநலக்காரர்களுக்கும் வயிற்றுப் பிழைப்புக்காரர்களுக்கும் பயந்து கொண்டு அரைத்த மாவையே திருப்பித் திருப்பி அரைப்பது போல் பூசை உற்சவம் முதலியவைகளுக்காக வீணாக செல்வங்களை விரயமாக்கிக் கொண்டிருப்பதற்கு ஒரு போர்டும் பல அதிகாரிகளும் பல சிப்பந்திகளும் இருப்பது மானக்கேடான காரியமல்லவா என்று யோசித்து பார்க்கும்படி பொது மக்களை கேட்கின்றோம்.
ஆதலால் அந்த போர்டு இனியாவது சற்று தனது பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து இவ்வளவு செல்வங்களும் ஒரு யோக்கியமான - பயன்படத்தக்க வழியில் செலவு செய்யப்பட ஒரு திட்டம் போட முயற்சிக்க வேண்டும் என்றும் அந்தப்படி செய்ய முடியாவிட்டால் சுயமரியாதை உள்ளவர்கள் அதைவிட்டு விலகி விடுவதன் மூலம் அப் போர்டுக்கு புத்தி வருவிக்கச் செய்ய வேண்டுமென்றும் தெரியப்படுத்திக் கொள்ளுகின்றோம்.
(குடி அரசு - துணைத்தலையங்கம் - 26.04.1931)