1

கண்களில் நிலா ஒளிருமவள்
ஆதி ரகசியமாக
சூரியன் ஒளித்து நகரும் நாளில்
தொடங்கு கிறது இக்கவிதை
 
சதா சூரியக்குருதி அருந்தி
களைக்கும் அவள் ஏவல்
சில பிணங்களை மறைக்கிறது
பத்திரமாய்
 
சூரியனைச் சாகடித்த
ஒரு கனவில்
உடல் பல தனங்களாகி
வழியும்
அமுதத்தில் மிதக்கும்
ஒரு குழந்தையின் இதழ்கள்
 
விரைத்த பாம்பின் விஷம்
அவள் சூரியன் உண்ணும்
ஒரு கிரகணத்தில்
முடியலாம் இக்கவிதை


2
நிரூபணம்

மரங்களழிந்த
நீள்வெளியில்
அலைந்துகொண்டிருக்கிறது வெயில்
தன்னை நிரூபிக்க
நிழல் தேடி

3
மனம்
வெள்ளையுடல்
இறக்கை சிவப்பில்
மென்பாதம் பற்றிய
கிளைவிலக்க மனமற்ற
அப்பறவையினையுதிர்க்க முயலும்
சிறுகிளை நடனத்தில்
நிலையான மனது
சட்டென்ற சிறகசைப்பில்
கிளைவிட்டுத்தாவி
வெளியெங்கும் பறக்கும்
 
பறந்து களைத்து அமரும்
கிளையுதிர்க்கும் இலையின் வழி
இறங்கும் பின்பு
தரைவீழ்ந்து ஓய்வுறும்.

4
அஞ்சலி

மழையில் நனைந்த மரத்தடியில் நின்றிருந்த
கருப்பு அம்பாசிடர் மீது
பழுத்த இல்லை ஒன்று உதிர்கிறது
கைகள் பரப்பி
கால்விரித்து
வாய்பிளந்து
மல்லாந்துகிடக்கும்
இலையின் மீது
பழகிய காற்று
உதிர்த்துப்போகிறது
அவ்வப்போது சில கண்ணீர்த்துளிகளை.

Pin It