26வது பெண்கள் சந்திப்பு, 2007 அக்டோபர் 13,14 மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற முதல் தலித் மாநாடு 2007 அக்டோபர் 20, 21 இரண்டிலும் கலந்து கொள்ள மும்பையிலிருந்து போன என் பயண அனுபவங்களைச் சிலர் எழுதச் சொல்கிறார்கள். என் பயணங்கள் , அதில் நான் கண்டது, கேட்டது, அறிந்தது, உணர்ந்தது எல்லாம் என்றாவது எப்போதாவது என் கதைகளில் கவிதைகளில் மலரலாம். மலராமலும் இருக்கலாம். அனுபவங்களை எல்லாம் எழுதியேதான் ஆகவேண்டுமா என்ன?

பயண அனுபவங்கள் என்ற பெயரில் அந்தந்த நாட்டு புகழ்பெற்ற கட்டிடங்கள் முன்னால் நின்று போட்டோ எடுத்து புவியியல் குறுந்தகடு/ உலகநூல் அகராதி இத்தியாதிகளிலிருந்து எல்லா விவரங்களையும் எடுத்துப் போட்டு கட்டுரை உண்டாக்குவது ஒரு மிகப்பெரிய திறமைதான். சுட்டுப்பொட்டாலும் எனக்கு அந்த மாதிரி திறமைகள் எல்லாம் இல்லை. எனவே இது அந்த மாதிரி பயணக்கட்டுரை அல்ல. பயமில்லாமல் நீங்கள் வாசிக்கலாம்!

ஃப்ராங்பர்ட் விமானநிலையத்தில் 750க்கும் அதிகமான பயணச்சீட்டு கவுண்டர்கள்.. எல்லா நாட்டு விமானங்களும் வருகின்றன.. போகின்றன..இளைப்பாறவும் பசியாறவும் (பெட்ரோல் போட்டுக்க).அளவில் பெரிய விமானத்தளம்.. தற்போது அறிவிப்பு பலகைகள் ஆங்கிலத்தில் இருப்பதால் பிரச்சனை இல்லாமல் வெளியில் வரமுடிந்தது. முன்பெல்லாம் அறிவிப்பு பலகைகள் ஜெர்மன் மொழியில் மட்டுமே இருந்ததாம். நல்லவேலை நான்பிழைத்துக்கொண்டேன்.

வெளியில் வந்தவுடன் பூக்கடை எதிரில் சோபாவில் உட்காரவா, நம்ம மும்பை மாதிரி வெளியில் வந்து நிற்கவா என்று தெரியாமல் அல்லாடிப்போனேன். இங்கும் அங்குமாக .. கைபேசியை எடுத்தால் இந்திய எல்லையைத் தாண்டி நான் எவரிடமும் பேசமாட்டேன் என்று அது அடம்பிடித்தது. மும்பையுடனும் பேசாமல் முரண்டு பிடித்தது.

என்னை அழைக்கவர இருந்த தேவாஹெரால்ட் வரவில்லை. ஒருவேளை வந்து என்னை அடையாளம் தெரியாமல் போயிருக்கக் கூடுமோ? அதுதான் போட்டோவை மெயிலில் அனுப்புகிறேன் என்று சொன்னேன். உங்களை எனக்குத் தெரியும், பதிவுகளில் பார்த்திருக்கிறேன் (நன்றி கிரிதரன் - பதிவுகள்) என்று சொல்லி என்னை நம்ப வைத்துவிட்டார். இப்போது என்ன செய்யலாம்..? யோசித்துக் கொண்டே அவர் முகவரியை எடுத்து பொதுதொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள எண்ணினேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஓர் ஆணும் பெண்ணும்.

அந்தப் பெண் கையில் சென்னை சில்க்ஸ் , சென்னை என்று தமிழில் எழுதப்பட்டிருந்த கைப்பை. அவர்களிடம் போய் பொதுதொலைபேசி பற்றி விவரம் கேட்டேன். அந்தப் பெண்ணுடன் இருந்த ஆண் தன் கைபேசியை என்னிடம் கொடுத்து பேசுங்கள் என்றார். நாங்கள் ஸ்ரீலங்கா தமிழர்கள் என்று சொன்னார். தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு திரும்புவதாகச் சொன்னார். தேவாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டிருப்பதையும் அரைமணி நேரத்தில் தான் வந்துவிடுவதாகவும் சொன்னார்.

தொலைதூர தேசத்தில் சரியான நேரத்தில் எனக்கு உதவிய அந்த ஆண்-பெண்ணின் தொடர்பு முகவரியோ கைப்பேசி எண்ணொ கேட்காமல் இருந்து விட்டதை எண்ணி இப்போது வெட்கப்படுகிறேன். அவர்கள் இருவரின் முகங்களும் விழிகளும் என்னோடு எப்போதும் பயணித்துக் கொண்டிருப்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிகழ்வை சுவிஸ்சர்லாந்தில் அண்ணன் ரவி இல்லத்தில் வைத்து சொன்னபோது ரவிக்கும் தாமரைச்செல்வனுக்கும் (என் தோழி கவிஞை நளாயினியின் வாழ்க்கைத்துணைவர்) கண்களில் நீர் நிறைந்துவிட்டது. உலகத்தில் எந்த மூலையில் எவரும் எங்குச்செல்வது என்று திசைத் தெரியாமல் நிற்கும் அவலத்தை உணர்ந்தவர்கள் நாங்கள் என்றார்கள்.

கல்சுருகி:

தேவாவின் இல்லம் கல்சுருகியில். (karlsruhe) விசிறி வடிவத்தில் அமைந்துள்ள நகரம் இது. ராஜாவின் கல்லறை பிரமிட் வடிவத்தில். எகிப்திய பிரமிடுகளின் வடிவத்தை அப்படியே நகல் எடுத்த மாதிரி குட்டி பிரமிடு. என்ன மும்பையில் இரவும் பகலும் ஜனக்கடலலைகளுக்கு நடுவில் வாழ்ந்த எனக்கு கல்சுருகி மனிதர்கள் வெளிநடப்பு செய்துவிட்ட இடம் போலிருந்தது. டிராம்வண்டிகளில் சைக்கிளுடன் ஏறிக்கொள்கிறார்கள் என்றார் பாருங்களேன்.

தெருவில் மக்கள் நடமாட்டமே இல்லை. நீண்ட அகண்ட வீதிகளில் சத்தமே இல்லாமல் மயான அமைதி. எல்லாரிடமும் கார் இருந்தாலும் கார் ஒலிப்பானின் சத்தமில்லை. தெருக்களில் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவதில்லை. வீட்டுக்கு முன்னால் பூத்துக்குலுங்கும் ரோஜா பூக்களைப் பறித்து வீட்டு அலங்கார ஜாடிகளில் வைத்துக் கொள்ளாமல் மார்க்கெட் போய் பூங்கொத்துகளை வாங்கிவந்து வைத்துக் கொள்ளும் மக்கள். தங்கள் நாட்டு பூந்தோட்டத்து விவசாயிகள் வயித்தில் அடிக்காமல் வாழ்க்கை நெறிகளை ஏற்படுத்திக்கொண்டு ஒழுங்காக கடைப்பிடிக்கும் மக்கள்.

ரோட்டில் வாகனங்களே வராவிட்டாலும் மனிதர்களே இல்லாவிட்டாலும் தனியாக நிற்கும் ஒரு மனிதன் சாலைப் போக்குவரத்து விதிகளை மீறுவதில்லை. சிக்னலுக்காக காத்திருக்கிறான் தனியாக சாலையைக் கடந்து செல்ல. அன்று அப்படித்தான். டிராமுக்காக காத்திருந்த போது டிராம் வண்டியிலிருந்து இறங்கியவர் நடைபாதையில் கால்சறுக்கி விழுந்தார். யாரும் ஓடிப் போய் தூக்கவில்லை. என்னருகில் நின்ற தேவா அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் நின்ற ஓரிளம் பெண் அந்த முதியவருக்கு கை கொடுத்து உதவ முன்வந்தாள். "வேண்டாம், உன் உதவிக்கு நன்றி" என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்ணின் உதவியை மறுத்தார் அந்த மனிதர்.

அந்தப் பெண் அந்த நாட்டுக்குப் புதிதாக வந்தவளாக இருக்க வேண்டும் என்றார் தேவா. உதவி என்று கேட்காமல் நாமே வலியப்போய் உதவி செய்வதை இந்த ஊரு மக்கள் விரும்புவதில்லை என்று சொன்னார் தேவா. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டாமல் இருப்பது என்பது இதுதானோ என்று நான் தேவாவிடம் கடி ஜோக் அடித்தேன். ஆனால் அந்த வயதான ஜெர்மன்காரரின் தன்னம்பிக்கை, பெருமை எனக்குப் பிடித்திருந்தது.

வெடவெடக்கும் குளிரில் கல்சுருகி தெருக்களில் நானும் தேவாவும் தனியாக நடந்து கொண்டிருந்தோம். உங்களுக்கு பேய்ப்பிசாசு நம்பிக்கை எல்லாம் உண்டா என்று கேட்டார் தேவா. இந்தக் கேள்வியை என்னிடம் போய் கேட்கிறாரே என்று எண்ணி சிரித்துக் கொண்டேன். ஜெர்மன் பேய்ப்பிசாசுகளிடம் எனக்கென்ன பயம்? ஜெர்மன் மொழியில் பேசும், எனக்கோ புரியாது ஒன்னும் பிரச்சனை ஆகாது என்று சொல்லிவைத்தேன்.

இப்போது நாம் நடந்து கொண்டிருக்கும் இடம் ஹிட்லர் பல்லாயிரம் யூதர்களைக் கொன்று குவித்த இடம். இந்த இடமெல்லாம் யூதர்களின் கல்லறை இருந்தது. யூதர்களின் கல்லறைகள் கூட இந்த மண்ணில் இருக்கக்கூடாது என்று நாஜிப்படை கல்லறைகளை உடைத்து பிணங்களைத் தோண்டி எடுத்து அதோ அந்த இடத்தில் குவித்து வைத்துவிட்டார்கள் என்று அமைதியாகச் சொன்னார். ஆங்கில நாவல் நினைவில் வந்தது.

நம் மதமும் அவள் கேள்வியும்

கல்சுருகியில் ஜெர்மன் கலைப்பொருட்களைப் பார்வையிடவும் விரும்பினால் வாங்கலாம் என்றும் சொன்னேன். அப்படி ஒரு கடையில் ஒரு கடைக்குள் நுழைந்தோம். பகுதி நேரப்பணியில் இருக்கும் பெண்ணிடம் நான் இந்தியாவிலிருந்து வந்திருப்பதை தேவா சொன்னார். இந்தியாவில் எங்கிருந்து? கேட்டார் அந்தப் பெண். நானும் பெருமையாக 'மும்பை' என்று சொன்னேன். இந்தியாவின் வணிகத் தலைநகரம், மாநகரம், இந்திய ரூபாயின் மதிப்பைத் தீர்மானிக்கும் வணிகச்சந்தை, வல்லரசாகப் போகும் இந்தியாவின் கனவுகளை நனவாக்கும் தொழிற்சாலை என்ற கர்வத்தில் சொன்னேன்.

அவள் என்னிடம் கேட்டாள் பாருங்கள் ஒரு கேள்வி! "இந்தப் பாம்பை எல்லாம் கும்பிடுவார்களே அந்தப் பிரதேசத்திலிருந்தா..?"

எனக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. எங்க மும்பையில் கண்பதி விழாவை ஒட்டி கொண்டாடப்படும் நாகப்பஞ்சமி பற்றி இவர் கேள்விப்பட்டிருக்கிறார். அதனால்தான் இப்படி ஒரு கேள்வி என்னிடம் கேட்டுவிட்டார் என்பதைப் புரிந்து கொண்டேன். மும்பையில் மகாலட்சுமி கோவிலுக்குப் போனால் நாகதேவ வழிபாடுகள் இருப்பதை இன்றும் நாம் பார்க்கலாம்.

மும்பையைப் பற்றி இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டாரே என்று வருத்தப்பட்டாலும் அவருக்கு விளக்கம் சொல்லவேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தேன். மனிதன் எதைக் கண்டெல்லாம் பய்ந்தானோ அதை எல்லாம் கும்பிட ஆரம்பித்தான். மேகம் இருண்டது, இடி இடித்தது மழைப் பொழிந்தது..பயந்தான். வருணபகவான் என்று கும்பிட்டான். புயல் வீசியது, மரம் விழுந்தது. பயம் வந்தது வாயுபகவான் என்று கும்பிட்டான். தீப்பிடித்தது, காடு எரிந்தது அக்னிப் பகவான் என்று கும்பிட்டான்.

பூமிப் பிளந்தது நதி மறைந்தது பயம் பூமாதேவி என்று கும்பிட்டான். சூரியன் எழுவதும் மறைவதும் அறியாமல் பயந்து போய் சூரியபகவான் என்று கும்பிட்டான். நிலவு வளர்வதும் தேய்வதும் அவனறியவில்லை. பயம் நிலவையும் வணங்கினான். இப்படித்தான் தன்னுடன் இருந்தவன் பாம்பு கடித்தவுடன் பேச்சு மூச்சற்று மரணித்துப்போவதைக் கண்டு பயந்தான். நாகதேவதை என்று கும்பிட்டான் என்று விளக்கம் சொன்னேன்.

நான் இத்துடன் என் விளக்கத்தை நிறுத்தி இருக்க வேண்டும். நம் இந்திய நாட்டின் பெருமையை கல்சுருகியில் ரையின் நதிக்கரையில் மீட்டெடுக்கவேண்டும் என்ற பேராசையில் அதிபுத்திசாலித்தனமாக இன்னொன்றையும் சேர்த்து சொல்லிவைத்தேன். அதாகப்பட்டது உங்கள் நாட்டு புராண இதிகாசங்களிலும் இம்மாதிரி கதைகள், நம்பிக்கைகள் இருக்கிறதுதானே என்று கேட்டேன். ஆமாம் எங்கள் புராணங்களில் இதிகாசங்களில் இதெல்லாம் இருக்கிறது, இப்போது இதெல்லாம் வெறும் கற்பனை என்ற தெளிவு எங்களுக்கிருக்கிறது.. நீங்கள் மட்டும் எப்படி இப்போதும் பாம்புகளைக் கும்பிடுகிறீர்கள்? என்று மீண்டும் கேட்டார்.

என் காலைச் சுற்றிய பாம்பு கழுத்தைச் சுற்றியது. அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள். அமுதம் ஆல்ப்ஸ் மலைக்கும் ஆலாலவிஷம் இமயமலைக்கும் பரிமாறப்பட்டதை அவளுக்குச் சொல்லவில்லை. அட முட்டாள்களா..காட்டில் வாழ்ந்தபோது பயந்தீர்கள், சரி, இப்போதும் அதே பயத்தில் கணினி முன்னால் உட்கார்ந்து நாகபூஜை செய்கிறீர்களே என்று அவள் முகத்தில் அடிக்கிற மாதிரி கேட்கவில்லை ஆனால் அவள் கேள்விக்கு அப்படித்தானே அர்த்தம்!

அடடா.. கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று அந்த ஈரோட்டுக்கிழவன் சொன்னது இதைத்தானா? ஒரு வழியாக கல்சுருகி கடைவீதியில் புதியமாதவிக்கு ஞானம் பிறந்தது என்று நாளைய வரலாற்றில் நீங்கள் எழுதிக் கொள்ளலாம்.

இதோடு சம்மந்தப்பட்ட இன்னொரு நிகழ்வு, எப்போதோ வாசித்தது நினைவுக்கு வருகிறது. ஈ.வே.கி சம்பத் அவர்கள் சோவியத் ரஷ்யாவுக்குப் போயிருந்த போது நடந்த ஒரு சம்பவத்தை தந்தை பெரியாரிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது. சம்பத் அவர்களும் கே.எஸ்.ராமசாமியும் அப்போது இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த போது ரஷ்யாவில் ஓர் ஆரம்பபாடசாலைக்குப் போனார்கள். அங்கிருந்த குழந்தை அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டது. இந்தியாவிலிருந்து நீங்கள் வருவதாக நேற்றே சொன்னார்கள், உடனே எங்கள் லைப்பரரிக்குப் போய் இந்தியா பற்றிய புத்தகங்களைப் படித்தோம். அதில் நீங்கள் மாட்டைக் கும்பிடுகிற மாதிரி ஒரு படம் பார்த்தோம். பசு மாட்டுக்குப் பின்னாலே வாலைப் பிடித்துக் கொண்டு ஒருவர் கும்பிடுகிறாரே இது ஏன்? என்று கேட்டது.

சம்பத் பகுத்தறிவாளர். நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பது நமக்குத் தெரியுமே. அவர் என்ன செய்தார் "இந்தக் கேள்விக்கு என் நண்பர் பதில் சொல்லுவார்!" என்று சொல்லிவிட்டு உட்கார்ந்து விடுகிறார். கே.எஸ்.ராமசாமி காங்கிரசுக்காரார். ஆத்திகர். என்னய்யா என்னை வம்பிலே மாட்டி விட்டுட்டேரே என்று சொல்லிக் கொண்டே அந்தக் குழந்தையிடம் சொல்லியிருக்கிறார்..:" ஆமாம் எங்க நாட்டிலே நாங்கள் பசுமாட்டைக் கும்பிடுகிறோம். அது பால் கொடுக்கிறதல்லவா. அதனால் தான். நாங்கள் ரொம்பவும் நன்றியுள்ளவர்கள்" என்று பதில் சொல்லி இருக்கிறார்.

உடனே பக்கத்தில் இருந்தக் குழந்தை அடுத்தக் கேள்வியை கேட்டிருக்கிறது "அப்படியானால் எருமைமாடு அதைவிட அதிகமாக பால் கொடுக்குமே! அதை ஏன் நீங்கள் கும்பிடுவதில்லை" என்று . ஆமாம். அதைப் பற்றி நாங்கள் யோசனை பண்ணுகிறோம்! நல்ல கேள்விதான்" என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தார்.

உடைந்த பிம்பங்கள்
----------------------
ஜெர்மன் கல்சுருகியிலிருந்து பாரீசுக்கு துரித விரைவு இரயிலில் பயணம். அதுபோலவே பாரீஸிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு இரயில் பயணம்.

அப்படி ஒரு பயணத்தில் சுவிஸ் சர்ச்சிலிருந்து பாரிசுக்கு வரும்போது ஓர் ஆண் கைக்குழந்தையுடன் தனியாக பயணம் செய்ததைப் பார்த்தேன்.

அந்தக் குழந்தைக்கு நேப்கின் மாற்றுவதிலிருந்து பால்பவுடர் கலக்கிக் கொடுப்பதுவரை எல்லாம் செய்கிற ஆண்மகனை அப்போதுதான் முதல்முறையாக நான் பார்க்கிறேன்.

நானும் ரவியும் அந்தக் காட்சியை வெகுவாக ரசித்துக் கொண்டே வந்தோம். குடும்பம், உறவுகள், பாசம் இதெல்லாம் என்னவோ இந்திய மண்ணுக்கு மட்டுமே பட்டா போட்டு கொடுத்திருப்பது போல ஒரு மாயையான தோற்றம் நம்மிடம் இருக்கிறது. என் பயணத்தில் அந்த மாயையிலிருந்து முழுமையாக நான் விடுபட்டு வெளியில் வந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அண்ணன் ரவியும் நண்பர் ஸ்டாலினும் காய்கறி நறுக்குவதிலிருந்து டீ கப் கழுவுவது வரை எல்லாம் செய்வது இந்தக் காட்சிகளின் தாக்கம் தான் என்பதைப் புரிந்து கொண்டேன்.

பனித்துளியின் சூரியக்குடிசைகள்

றஞ்சி, ரவி, நான் மூவரும் ஆல்ப்ஸ் மலைக்கு (rope-car) ல் பயணம். இயற்கை அழகும் அதை அப்படியே பேணிப்பாதுகாப்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறையும் நாம் அவர்களிடமிருந்து இன்னும் கற்றுக்கொள்ளாத பாடமாகவே இருக்கிறது. அண்ணன் ரவியுடன் உட்கார்ந்து பேசுவதற்கும் பரிமாறிக்கொள்வதற்கும் நிறையவே இருந்தது. சுவிட்சர்லாந்தின் அழகைக் கண்டு எனக்கு பொறாமை ஏற்படவில்லை. ஆனால் அவருடைய புத்தக அலமாரியைக் கண்டு பொறாமை வந்தது. அந்தப் புத்தக வரிசைகளுக்கு நடுவில் என் புத்தகங்களும் இருப்பதுதான் என் எழுத்துகளுக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதையாக பெருமிதம் ஏற்படத்தான் செய்தது.

எனக்காக அவர் ரசித்த குறும்படங்களைச் சேகரித்து வைத்திருந்தார் குறுந்தகடுகளில். அதையும் மீறி அவரிடமிருந்து இரண்டொரு புத்தகங்களைக் களவாட நான் செய்த முயற்சிகள் தோற்றுப்போனது. எப்படியோ ஒரு வழியாக நம்ம ஊரு அ.மார்க்ஸ் எழுதிய 'அதிகாரத்தை நோக்கி' புத்தகத்தை எடுத்துக் கொண்டுவந்துவிட்டேன். மால்கம் எக்ஸ் தன்வரலாறு விடியல் பதிப்பகம் நான் வாசிக்கவில்லை. (அதன்பின் வாசித்தேன்) மால்கம் எக்ஸ் பற்றி நிறைய பேசினார். நிறைய புதுப்புது செய்திகளைச் சொன்னார். சில ராணுவ ரகசியங்கள் மாதிரி. ஈழ-இந்திய உறவில் வெளியில் சொல்ல முடியாதவை.

பச்சைப்புல்வெளியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ரவி, றஞ்சி, ஆர்த்தி, நிறமிக்குட்டி நினைவு என்றும் இருக்கும். அதிலும் நிறமி பத்து மணித்துளிகளில் தயாரித்து பரிசளித்த அவள் புகைப்பட ஆல்பம் எனக்குக் கிடைத்தற்கரிய பரிசு. மிகப்பெரிய இழப்புகளையும் அதிர்ச்சிகளையும் பிரிவுகளையும் தாங்கிக்கொண்டு வாழும் ரவி அண்ணன் எனக்கு விடைக் கொடுக்கும்போது குரல் கம்மி கண்ணிமைகள் ஈரமானதை இப்போது நினைத்தாலும் எனக்கு அழகை வந்துவிடும்போலிருக்கிறது. ஆனால் அப்போது நான் அழவில்லை. ரவி அண்ணன் அழக்கூடாது. போராளிகள் சின்ன சின்ன விசயங்களுக்கும் உணர்ச்சிவசப்பட்டு அழும் குழந்தைகளாகிவிடக்கூடாது.

என் ரவி அண்ணன் எனக்காகக் கூட அழக்கூடாது. வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவது என்பதற்காக எத்தனை இன்னல்கள், எத்தனைத் தலைமறைவு வாழ்க்கை, எத்தனை ஓட்டங்கள்.. உன் ஓட்டத்தை, உன் தலைமறைவு வாழ்க்கையை, நீ இழந்துப் போன உன் மண்ணை, உன் கனவுகளை.. எல்லாவற்றையும் நீ எழுத வேண்டும். நாளைய நம் சந்ததிகளுக்கு நீயும் ஓரு வரலாறுதான். தலைவர்களின் பக்கங்களால் நிரப்பப்படுவது மட்டுமே வரலாறாகிவிடாது. தலைவர்களை நம்பிய உன் போன்றவர்களின் ரத்தக்காயங்களில் தான் இனி நம் வரலாறு எழுதப்பட வேண்டும், செய்வாயா ரவி அண்ணா?"

சுவிட்சில் பத்துமாடு வைத்திருக்கும் விவசாயி பெரிய பணக்காரன். அவர்கள் நாட்டில் செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதே இல்லை. (No chemical fertilizers) அதுமட்டுமல்ல, ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என்றாலும் அரசின் அனுமதிப் பெற வேண்டும். அரசும் அனுமதிக் கொடுக்கும். ஆனால் அதற்குப்பதிலாக வேறு ஒரிடத்தில் மரம் நட்டு வளர்க்க வேண்டுமாம். இந்த மாதிரி செய்திகளை எல்லாம் கேள்விப்பட்டவுடன் வயித்தெரிச்சலாக இருந்தது.. இப்படி எத்தனையோ நல்ல விசயங்களை நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ளாமல் இருப்பதையும் நம் தலைவர்களும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு அரசு செலவில் பயணம் செய்பவர்களுக்கும் இதெல்லாம் கண்ணில் படாமலிருப்பதும் வியப்பாக இருக்கிறது.

கவிஞர் அண்ணன் அறிவுமதியின் தங்கைகள் இருவர் சுவிட்சில் சந்தித்துக் கொண்ட இனிய அனுபவம்.. என்னைச் சந்திக்க காரில் நீண்ட பயணம் செய்து ரவி-றஞ்சியின் இல்லத்திற்கு வந்த அவர்கள் இருவரும். உயிர்த்தீயில் நான் வாசித்த கவிஞை நளாயினி வேறு. அன்று தன் குழந்தைகளையும் தன் தோட்டத்தில் விளையும் காய்கறிகளையும் பற்றி ஒரு சிறுமியின் ஆர்வம் கண்களில் மின்ன உரையாடிய நளாயினி வேறு. இந்த இரண்டு முகங்களிலும் நான் வாசித்த கவிதைக்கீற்றுகளை என் நினைவு தடத்தில் நங்கூரமாக நிறுத்தி வைத்துக் கொண்டேன்.

வன்கொடுமைகள்

இல்லத்தில் வன்முறைகளும் பாலியல் வன்முறைகளும் அதிகரித்திருப்பதை பெண்கள் சந்திப்பில் கட்டுரையாக வாசித்தார் தேவா. அதைப்பற்றிய நிறைய உண்மை சம்பவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். ஜெர்மன் மொழியில் சரளமாக பேசவும் எழுதவும் கற்றிருப்பதால் அங்கு வாழும் ஈழத்தமிழர்களுக்கும் அரசுக்கும் நடுவில் மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார்.

மனைவியை அடித்து துன்புறுத்தும் கணவன் அவளுக்கு கொலைமிரட்டலாகச் சொல்வது.."இரு இரு உன்னை இந்தியாவுக்கு கூட்டிட்டு போறேன்' என்பதாக இருக்கிறது. இதற்கானச் சான்றுகள் இருக்கிறதா என்று நான் அவரிடம் கேட்டேன். தனக்குத் தெரியாது என்றும் தன்னிடம் வரும் பெண்கள் தங்கள் கணவன்மார் இவ்விதம் சொல்லி தங்களைப் பயமுறுத்துவதையும் சொன்னார். இந்தியாவில் கொலை செய்வது என்ன அத்தனை எளிதானக் காரியமா?

தந்தை உறவு, தந்தையுடன் பிறந்தவர்கள் சித்தப்பா, பெரியப்பா உறவுமுறை, தாயுடன் பிறந்த மாமா உறவு..இப்படியான உறவுகளுக்கு நடுவில் சமுதாயம் விலக்கி வைத்திருக்கும் பாலியல் உறவு, பாலியல் வன்கொடுமையாக பெருகி இருப்பதையும் இம்மாதிரி சூழல்களில் பெற்ற குழந்தைக்கும் கணவனுக்கும் இடையில் அகப்பட்டுக்கொண்டு மனநோயாளியாகிவிடும் பெண்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். இந்தக் கலாச்சார சீரழிவு ஓர் அதிர்ச்சி தரும் செய்தியாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக தமிழ்க்குடும்பங்களில் இவைப் பெருகி இருப்பதற்கான சமூகக் காரணிகள் ஆராயப்பட வேண்டிய விசயம்.

பாரீஸில்

பாரீஸில் தோழி விஜி, அவர் வாழ்க்கைத்துணைவர் ஸ்டாலின், அவர்களின் இளம் மொட்டுகள், அங்கே சந்திப்பில் கலந்து கொள்ள வந்திருந்த இனிய தோழி கவிஞை ஆழியாள், அக்கா ராஜேஸ்வரி, ஓரிரவு தங்கி இருந்தாலும் ஓராயிரம் செய்திகளைப் பகிர்ந்து கொண்ட இலங்கை தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த சாந்தி, அவர்களின் விருந்தோம்பல், அசுராவின் தார்மீகக்கோபம், லாசேப்பல் வீதிகளில் நடக்கும் போது என்னவோ தமிழ்நாட்டில் சென்னையில் எங்கோ நடந்து கொண்டிருக்கிற மாதிரி இருந்த ஓர் அனுபவம், அந்தக் கடைவீதியில் இருக்கும் முனியாண்டி விலாஸ் சிற்றுண்டியகம், ஆழியாள் தேடி வாங்கிய எம்.ஜி.ஆர், சிவாஜி திரைப்படங்களிருந்து தொகுத்திருக்கும் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு. (.பாவம் ஆஸ்திரேலியாவில் ஆழியாளுக்கு இதெல்லாம் கிடைக்காதுதான்.)

தேவதாசன், அசுரா தன் நண்பர்களுடன் வர இரண்டு இரவுகள் சூடாக நடந்த கலந்துரையாடல், அந்தச் சூடு தணிய தேவதாசனுடன் இணைந்து சாந்தி பழைய பாடல்களைப் பாடி குளிர்வித்த தருணங்கள் இனிமையானவை. நிறைய பேசினீர்கள், நிறைய செய்திகளைச் சொன்னீர்கள்.

உங்கள் அனைவரின் தார்மீகக்கோபத்தை நான் உணர்ந்து கொண்டேன். பாபாசாகிப் அம்பேத்கர் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மைய நீரோட்டத்தில் தன்னைக் கரைத்துக் கொள்ளாமல் சமூக விடுதலையுடன் கூடிய நாட்டுவிடுதலையைப் பேசியதாலெயே அவரை அவர் வாழும் காலத்தில் தேசத்துரோகி என்று அழைத்தார்கள். உங்கள் கோபம் எங்களுக்குத் தமிழன் என்ற அடையாளம் என்ன செய்து கிழித்துவிட்டது? என்று ஓங்கி என் முகத்தில் அறைகிற மாதிரி கேட்டபோது உண்மையிலேயே நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன்.

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்ற பெருமிதத்தை உங்களின் அறச்சீற்றம் எரித்ததை இப்போது நினைத்தாலும் நடுக்கம் ஏற்படத்தான் செய்கிறது. இந்த அடையாளச்சிக்கலை அடுத்த தலைமுறைச் சந்திக்கும்போது தான் தொட்டிச்செடிகள் தன் தாய்மண்ணை இழந்தச் சோகம் புரியவரும்.!

அறிந்த வரலாற்றில் நானறியாத பாத்திரங்கள்

ஈழவிடுதலைப் போராட்ட ஆரம்பக்காலங்களில் சிறைச் சென்றவர். போராளி புஷ்பராஜனின் உடன்பிறந்த சகோதரி. அன்புடன் என்னை அணைத்துக் கொண்டதும் தன்னை தன் அடையாளத்தை தலித் முதல் மாநாட்டில் அவர் தலைநிமிர்ந்து சொன்னதும் அவர் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதையை ஏற்படுத்திவிட்டது. புஷ்பராஜனின் துணைவி மீராவும் பழகுவதற்கு இனிய தோழி. புஷ்பராஜன் எழுதிய "ஈழப்போராட்டத்தில் என் சாட்சியம்" என்ற புத்தகத்தை எனக்குப் பரிசளித்தார். இந்தியா வந்தப்பின் அந்தப் புத்தகத்தை வாசித்தேன்.

என்னைக் கொஞ்சம் உலுக்கிப் போட்டுவிட்டது அந்த மனிதனின் சாட்சியங்களில் ஒலித்த உண்மையின் கோரமுகம். என் ஐரோப்பிய பயணத்திற்கு முன்பே இந்தப் புத்தகத்தை வாசித்திருந்தால் மிகவும் பயனுள்ளதாக சில சந்திப்புகள் அமைந்திருக்க கூடும். ஆனால் அந்த வாய்ப்பினை நான் இழந்துவிட்டேன்.

அதுபோலவே உயிர்நிழல் ஆசிரியர் தோழி லஷ்மி அவர்களையும் சந்தித்தும் அவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடலுக்கான ஒரு வாய்ப்பு என்ன காரணத்தினாலோ கடைசிவரை கிடைக்கவில்லை. அவருடைய இதழ்பணி பற்றி இந்தியா வந்த பின் தொடர்ந்து வாசிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் மக்களின் என் உறவுகளின் வரலாற்றில் எனக்குத் தெரிந்தது கடுகளவுதான் என்ற உண்மை இந்தப் பயணத்திற்குப்பின் என்னை என் ஆளுமையை அரித்துக் கொண்டிருக்கிறது.

எப்படியும் வாழ்வில் ஒருமுறையேனும் ஈழத்து மண்ணில் சுற்றுலா போர்வையில் ஒரு 'வெளிநாட்டு பயணி' என்ற அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டாவது என் கண்கள் பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். ஈழ மண்- சுற்றுலாவுக்கு வந்த வெளிநாட்டு பயணி- இதை எழுதும்போதே எனக்கு வலிக்கிறதே.. நினைத்துப் பார்க்கிறேன்.. ராமேஸ்வரம் கடற்கரையோரம் அகதிகளாய் உங்கள் ஆதித்தாயின் மண்ணில் கால்பதிக்கும் உங்கள் முகங்களை கவிஞர் அண்ணன் அறிவுமதியின் கவிதை வரிகள்

இராமேசுவரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்

நாங்கள் குதித்துக்
கரையேறுகிறோம்

அங்கே
அவனா
என்று கேட்டு
அடித்தார்கள்
வலிக்கவில்லை.

இங்கே
திருடனா
என்று கேட்டு
அடிக்கிறார்கள்
வலிக்கிறது.

முகாமிற்கு
அருகில் உள்ள
பள்ளியிலிருந்து
கேட்கிறது

யாதும் ஊரே
யாவரும் கேளிர்.

- புதிய மாதவி, மும்பை

Pin It