மொழிபெயர்ப்புக் கவிதை

வாழ்வு ஒரு மரத்தை வரைகிறது
மரணம் மற்றொரு மரத்தை வரைகிறது
வாழ்வு ஒரு கூட்டை வரைகிறது
மரணம் அதை நகலெடுக்கிறது
வாழ்வு ஒரு பறவையை வரைகிறது
கூட்டில் வாழ்வதற்கு
உடனேயே மரணம்
வேறொரு பறவையை வரைகிறது

எதையுமே வரையாத ஒரு கரம்
ஓவியங்களுக்கிடையே திரிகிறது
சமயங்களில் ஏதாவதொன்றை நகர்த்துகிறது
உதாரணத்திற்கு:
வாழ்வின் ஒரு பறவை
வாழ்வு வரைந்த மரத்திலிருக்கும்
மரணத்தின் கூட்டில் வசிக்கிறது

வேறு சமயங்களில்
எதையுமே வரையாத கரம்
மறைத்துவைக்கிறது ஓவியங்களுள் ஒன்றை
உதாரணத்திற்கு:
மரணத்தின் மரம்
மரணத்தின் கூட்டை ஏந்தியிருக்கிறது
ஆனால் ஒரு பறவையுமில்லை அதில்

வேறு சில நேரங்களில்
எதையுமே வரையாத அக்கரம்
தன்னையே மாற்றிக்கொள்கிறது
இன்னொரு சித்திரமாக
ஒரு பறவையின் உருவில்
ஒரு மரத்தின் உருவில்
ஒரு கூட்டில் உருவில்
அதன் பிறகு,அதற்குப் பிறகுதான்
எதுவும் காணாமற்ப் போகவில்லை,
எதுவும் விடுபடவில்லை
உதாரணத்திற்கு:
இரண்டு பறவைகள் வசிக்கின்றன
மரணத்தின் மரத்திலிருக்கும்
வாழ்வின் கூட்டில்

அல்லது வாழ்வின் மரம்
இரண்டு கூடுகளை ஏந்தியிருக்கிறது
ஒரே ஒரு பறவையோடு

அல்லது ஒற்றைப் பறவை
வாழ்வின் மரத்திலும்
மரணத்தின் மரத்திலும் இருக்கும்
ஒரு கூட்டில் வாழ்கிறது

Pin It