stalin 599திரை கடல் தாண்டித் திரவியம் தேடும் தன்மை நம் தமிழர்க்கு எப்பொழுதும் உண்டு. அவ்வேளையில் வரும் துயர்களை, சவால்களைச் சமாளிக்க ஒரு பாதுகாப்பு அரணாக அமைகிறது, தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள "புலம்பெயர் தமிழர்நல வாரியம் ".

புலம் பெயர் தமிழர்கள் குறித்தத் தகவல்களைத் திரட்டித் தரவுதளம் அமைக்கப்படுகின்றது. அப்பொழுதுதான் வாரியத்தின் தேவை எப்படி, எங்கே இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிய வரும்.

இந்தத் தரவுதளத்தின் முக்கியத்துவத்தை அறிய வேண்டுமானால், கொரானா முதல் அலையில் புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையை நினைத்துப் பார்த்தால் புரியும். வேலை தேடி வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் நாடு திரும்பவும் முடியாமல், வேலை முடக்கத்தால் அங்கேயே இருக்கவும் முடியாமல், சரியான வழிகாட்டுதல் இன்றித் தவித்தது நினைவிற்கு வரும்.

தன் மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரிந்தால்தான், அரசு அதற்கு ஏற்பத் திட்டமிட்டுச் செயல்பட முடியும். இல்லாவிட்டால் கோரிக்கை வந்த பின்தான் அதற்கான ஆயத்தப் பணியில் ஈடுபடவே முடியும்.

வெளி நாடுகளில் வாழும் எளிய நம் மக்களுக்கு, வெளி உறவுத்துறை என்பது ஓர் எட்டாக்கனியாக இருக்கிறது. இனி தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அப்படி, இருக்காது. மக்கள் எளிதாக தொடர்பு கொள்ள, ஆலோசனை பெறக் கட்டணமில்லாத் தொலைபேசி, வலைதளம், அலைபேசிச் செயலிகள் இச்சேவைக்காக வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர்.

முக்கியமாக, உடல் உழைப்பு சார்ந்த வேலைகளுக்காக வெளிநாட்டிற்குச் செல்லும் தொழிலாளர்களிடம், சட்டத்திற்குப் புறம்பாகச் சிலர் செய்யும் உழைப்புச் சுரண்டல் பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம். அப்படிப்பட்ட நிலையில் சிக்குவோருக்கு அந்த நாட்டுச் சட்டங்கள் மற்றும் அவற்றை அணுகும் முறை ஆகியவைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களைப் போன்றவர்களுக்கு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.

புலம்பெயர் தமிழர்நல வாரியத்தில் தனியாக சட்ட உதவி மையம் செயல்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

வாரியத்தில் பதிவு செய்து கொள்பவர்களுக்குக் காப்பீட்டுத் திட்டங்கள் வழங்கப்படும். இதில் விபத்து, மருத்துவம், ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் அடங்கும். அத்துடன் அடையாள அட்டையும் வழங்கப்படும். பணியின் போது இறக்க நேரிட்டால், அக்குடும்பத்திற்கு கல்வி மற்றும் திருமணத்திற்கான ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தாயகம் திரும்பும் புலம் பெயர்த் தமிழர்களுக்கு மானியத்துடன் கடன் வசதி செய்து தரப்பட இருக்கின்றது.

ஜனவரி 12 புலம் பெயர்ந்த உலகத் தமிழர் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் கொண்டாட்டத்திற்குச் சற்று முன்னதாக இந்நாள் அறிவிக்கப்பட்டுள்தை எதார்த்தமாக அமைந்ததாகக் கருத முடியவில்லை.

பெருமளவில் பொங்கலுக்காக ஊர் திரும்பும் தமிழர் பண்பாட்டுடன் இணைந்ததாகவே இதை உணர முடிகின்றது. பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் இந்த நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளி நாடுகளில் வாழ்பவர்களுக்குப் பெருமளவில் ஒரு ஏக்கம் உண்டு. அது, அடுத்த தலைமுறையினர் தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டை விட்டு விலகிப் போவதும், அறிந்து கொள்ள முடியாமல் போவதும் ஆகும். இதனைப் போக்கும் வகையில் இவ்வறிவிப்பில் குழந்தைகளுக்குத் தமிழ் பயிற்றுவிப்பு இடம்பெற்றிருக்கிறது. 'கரும்பு திங்கக் கூலி' என்ற பழமொழியைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். இங்கு தமிழ் பயிற்றுவிக்க ஊக்கத்தொகையும் உள்ளது. நலச்சங்கங்கள் ஒருங்கிணைப்பு, அதன் வழியே கலை, இலக்கிய, பண்பாட்டுப் பரிமாற்றங்களை வெளிநாடுகளுடன் தமிழ்நாடு ஏற்படுத்திக் கொள்ள புலம் பெயர் தமிழர்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் வழி உண்டு.

இதற்காக ரூபாய் 5.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இதனால் இரு நாட்டிற்கும் பாலமாகப் புலம் பெயர்த் தமிழர்கள் செயல்பட முடியும்.

இவற்றோடு சேர்த்து, ரூபாய் 5 கோடி நிதியை அரசு முன்பணமாகக் கொண்டு இவ்வாரியம் உருவாகப்படுகின்றது. வாரியத்திற்கு மூலதனச் செலவினமாக 1.4 கோடி ஒதுக்கப்படும். மற்றும் ஆண்டுதோறும் ரூபாய் 3 கோடி நலத்திட்டத்திற்காகவும், நிர்வாகச் செலவிற்காகவும் ஒதுக்கப்பட இருக்கிறது. மொத்தத்தில் ரூபாய் 20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார் நம் முதல்வர்.

வெளிநாடுகளில் வேலை செய்யும் தமிழர்கள் தங்கள் ஊதியத்தை, அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்யப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் தன் சொந்த ஊருக்கு உதவ விரும்புவோர்களுக்கு 'எனது கிராமம்’ என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மனம் அறிந்து செயல்படும் அரசாக, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாட்டை வழி நடத்துகின்றார் என்பதற்கு, “புலம்பெயர் தமிழர்நல வாரியம்” சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

அன்று "புலம் பெயர் மாக்கள்" என்று சிலப்பதிகாரம், பட்டினப்பாலை போன்ற இலக்கியங்களில் காணப்படும் பெயரில், இன்று "புலம்பெயர் தமிழர்நல வாரியம்" அமைவது மக்களின் வரவேற்பைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

- மதிவாணன்

Pin It