எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் அடுத்த சில நாள்களில் சந்தித்த முதல் மனிதர் பாஜகவின் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான், டில்லியில். சென்னை திரும்பிய அவர் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடிக்குக் காலக்கெடு வைத்தார், எடப்பாடி அசையவில்லை. பின்னர் முதுகுளத்தூர் நிகழ்ச்சி ஒன்றில் செங்கோட்டையன், ஒ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் இருவரையும் சந்தித்தார். சசிகலாவையும் சேர்த்துக் கட்சியை ஒன்று சேர்ப்போம் என்று ஆர்ப்பாட்டமாகச் சொன்னார், திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் விஜய் தொடங்கியுள்ள தவெக என்ற ரசிகர் கட்சியில் சேர்ந்து விட்டார்.
ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவம், ஒன்பதுமுறை சட்டமன்ற உறுப்பினர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடன் இணைந்து அரசியல் செய்தவர், முன்னாள் அமைச்சராக இருந்த செங்கோட்டையன், தன் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிய சில மணிநேரத்தில் தவெகவின் தலைவர் விஜயைச் சந்தித்தார்; மறுநாள், அக்கட்சியில் இணைந்து விட்டார். நீண்ட அரசியல் அனுபவமிக்கவர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் இணைந்து அரசியல் செய்தவர் நேற்று உருவான தவெகாவில் இணைந்து, அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாத நடிகர் விஜயைத் தலைவராக ஏற்கிறார் என்றால் இதன் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும்!
அண்மையில் ஊடகவியலாளர் செந்தில் அவர்கள் ஒரு காணொளியில் பேசியிருந்தார். அதில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் ஒன்றிய அமைச்சர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் இல்லாமல் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு வந்து செல்கிறார்கள், அந்தப் புள்ளிகள் அங்குள்ள வடமாநிலத் தொழிலாளர்களை அரங்கக் கூட்டங்களில் சந்தித்துப் பேசுகிறார்கள். வடமாநிலத் தொழிலாளர்கள் குடும்பத்தினர் ஒரு கோடிக்கு மேல் இருப்பார்கள், அவர்கள் தமிழ்நாட்டின் வாக்காளர்களாக ஆக்கப்படுவார்கள் என்று ஊடகவியலாளர் செந்தில் பேசியிருக்கிறார் அக்காணொலியில்.
இன்னொருபுறம் SIR என்ற வாக்காளர் சீர்திருத்தப் பட்டியல் என்று 30 நாள்களில் 6-7 கோடி மக்களின் வாக்குரிமையை சரிபார்க்கிறார்களாம். இப்படித்தான் பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்தது.
இவைகளை எல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தால், விஜய், தவெக, செங்கோட்டையன் பின்னால் பாஜகவின் நிழல் தெரிகிறது.
பாஜகவுக்குச் சாதகமாக செங்கோட்டையன் மூலம் விஜயை வழிநடத்தி திமுகவுக்கு எதிரான அரசியலை, சினிமா நாயகர் என்ற மாயையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் 'அசைன்மென்ட்' கொடுக்கப்படலாம்.
பாஜக அட்சியை தமிழ்நாட்டில் கொண்டு வரத் துடிக்கும் காவிகளின் அரசியல் சதுரங்கக் காய்களில் ஒருவரே செங்கோட்டையன்.
- எழில்