தொடர்ந்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை இரண்டையும் வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் ஒரு அவப்பெயரை ஏற்படுத்திவிட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதனால்தான் செந்தில் பாலாஜி, பொன்முடி, ஜெகத்ரட்சகன் - இப்போது எ.வ.வேலு!,

வருமான வரித்துறை சோதனை நடந்த உடனேயே ஒருவர் குற்றவாளி ஆகி விடுவதில்லை. அதற்குப் பிறகு பல தொடர் நடவடிக்கைகள் உள்ளன. இறுதித் தீர்ப்பை நீதிமன்றம் - அதாவது உச்சநீதிமன்றம், வழங்கும். ஆனால் இப்போதே எதிர்க்கட்சியினரும், சில ஊடகங்களும் மிகப் பெரிய ஊழல் நடந்து விட்டது என்பது போலப் பேசுகின்றனர்.income tax officeநேற்று இரவு நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி விவாதத்திலும் அப்படி ஒரு நிகழ்வைப் பார்க்க முடிந்தது. புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, 1250 கோடி ரூபாய் ஜெகத்ரட்சகன் வீட்டில் பிடிபட்டிருக்கிறது. இது ஊழல்தானே என்று கேட்டார். மிக நிதானமாக, அந்த விவாதத்தில் பங்கேற்ற கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஒரு வினாவை முன் வைத்தார். 1250 கோடி ரூபாய் பிடிபட்டிருப்பதாக டாக்டருக்கு யார் சொன்னார்கள் என்று கேட்டார்.

வருமானவரித்துறை தான் சொல்லி இருக்கிறது என்றார் கிருஷ்ணசாமி. அப்படியா வருமான வரித்துறை எந்த அறிக்கையில் அப்படிச் சொல்லி இருக்கிறது என்று ரவீந்திரன் திருப்பி கேட்க, கிருஷ்ணசாமி மேலும் கீழும் விழித்துப் பார்த்தார். பிறகு ஊடகங்களில் வந்திருக்கிறது என்றார்.

ரவீந்திரன் விடவில்லை. முதலில் வருமான வரித்துறை என்றீர்கள், இப்போது ஊடகங்கள் என்கிறீர்கள். இது முரண் இல்லையா என்று கேட்டதோடு, ஊடகங்களில் உங்களைப் பற்றி வந்திருக்கிற செய்திகளை எல்லாம் இங்கு நான் பேசலாமா என்றும் கேட்டார்.

டாக்டர் கிருஷ்ணசாமியிடம் பதில் இல்லை!

அடுத்து சில அருமையான வினாக்களை ரவீந்திரன் அந்த அரங்கில் தொடுத்தார்.

பிரதமர் மோடியால் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அஜீத் பவார் பாஜக கூட்டணிக்கு வந்தவுடனேயே புனிதராகி விட்டார். அவருக்கு நிதி அமைச்சர் பொறுப்பும் கொடுக்கப்பட்டன.

தற்போது அஸ்ஸாம் முதலமைச்சராக இருக்கும் ஹிமந்த பிஸ்வா காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். அப்போது சாரதா சிட் பண்டு ஊழல் வழக்கில் விசாரணைக்கு உள்டுத்தப்பட்டவர். தற்போது அவர் பாஜகவிற்கு வந்தவுடன் வழக்கு கண்டுகொள்ளப் படவில்லை.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த சுவேந்து அதிகாரி, தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த ஒ.எஸ் சவுத்ரி என பாஜகவிற்கு வந்த பிறகு வழக்குகள் வேகம் எடுக்கவில்லை.

 மகாராஷ்டிர எம்.எல்.ஏ ஹர்ஷ்வர்தன் பாட்டீல், “காங்கிரசிலிருந்து பாஜகவிற்கு வந்த பிறகு நிம்மதியாக உறங்குகிறேன்” என்று வெளிப்படையாகவே கூறினார்.

இதே மஹராஷ்டிராவின் சாங்க்லி தொகுதி எம்.பி சஞ்சய் பாட்டீல், “பாஜகவில் சேர்ந்த பிறகு எனக்கு அமலாக்கத்துறை பற்றி பயம் இல்லை” என்று பொது மேடையில் பேசினார்.

 முகுல் ராய் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. பின், திரிணாமூல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவிற்கு அவர் சென்றவுடன் அந்த வழக்கு என்ன ஆனது ?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கிருஷ்ணசாமி மட்டுமில்லை, எவராலும் விடை சொல்ல முடியாத என்பதை நாம் அறிவோம். இப்படித்தான் இன்றைக்கு இந்த வருமான வரிச் சோதனை, அமலாக்கத்துறை சோதனை நாடகங்களில் காட்சிகள் அரங்கேறிக் கொண்டுள்ளன.

- சுப.வீரபாண்டியன்

Pin It