மகராஷ்டிராவில் காலை 5.45க்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நீக்கிக் கொள்ளப்பட்டு, 8 மணிக்கு பாஜக வின் பட்நாவிஸ் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதை, அமித்ஷாவின் அரசியல் சாணக்கியம் என்றார்கள். அது இப்போது அரசியல் அநாகரிகமாகி, அவமானப்பட்டு நிற்கிறது.

இனியேனும் அவர்கள் திருந்துவார்களா என்று திமுக தலைவர் கேட்டுள்ளார். இல்லை, அவர்கள் ஒரு நாளும் திருந்த மாட்டார்கள்.

uthav and stalinஇது ஒருபுறமிருக்க, உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்ற விழாவில், திமுக தலைவர் பங்கேற்றுக் கொண்டதை விமர்சனம் செய்து சிலர் எழுதியும், பேசியும் உள்ளனர். திமுக தலைவரை அவர்கள் அழைத்ததோடு மட்டுமின்றி, பெருமதிப்புடன் அவரை வரவேற்று, முதல் வரிசையிலும் அமர வைத்துள்ளனர். அனைத்திந்திய அரசியலில், திமுக ஒரு பெரும் சக்தியாக வளர்ந்து வருவதை அந்நிகழ்ச்சி உறுதிப்படுத்தியுள்ளது. அதனைப் பொறுக்க முடியாதவர்கள் பொருமுகின்றார்கள்.

சிவசேனா தொடங்கப்பட்ட 1966 ஆம் ஆண்டு, அங்கு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தன என்பது உண்மையே. ஆனால் அதற்குப் பிறகு, பல மாற்றங்கள் நடந்துள்ளன.

சாதாரண கேலிச்சித்திரப் படக்காரராகத் (கார்ட்டூனிஸ்ட்)தன் வாழ்வைத் தொடங்கிய பால் தாக்கரே, அதற்கு கிடைத்த வரவேற்பைப் பயன்படுத்திக் கொண்டு, சொந்தமாக ஓர் இதழைத் தொடங்கினார். அதில் பெற்ற வெற்றியே, சிவசேனா என்னும் காட்சியைத் தொடங்குவதற்கு அடித்தளமிட்டது.

"நேற்றுவந்த மதராஸி, பம்பாயின் பணக்காரராக இருக்கிறார், இந்த மண்ணில் பிறந்த மராத்தியர் ஏழையாகத் திரிகிறார்" என்று அவர் எழுப்பிய குரலே, 1966 அக்டோபரில் ஒரு வன்முறைக்கு வித்திட்டது.

1967இல் அங்கு சென்ற தலைவர் கலைஞரும், நாவலரும் ஆற்றிய உரைகள் ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தின. அதன்பிறகு, அண்ணாவின் நூல்களை ஆங்கிலத்தில் தான் படித்துள்ளதாகவும், இந்தியாவில் மாநிலக் கட்சிகளுக்குத் திமுக தான் முன்னோடி என்றும் பால் தாக்கரே கூறியுள்ளார்.

1978 மே மாதம், கலைஞர் அங்கு சென்றிருந்தபோது, யாரையும் சென்று சந்திக்காத பால் தாக்கரே, ஓபராய் டவர்ஸ் ஹோட்டலுக்குச் சென்று, கலைஞரைச் சந்தித்து ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை அவர் ஆதரித்தார். 2001 ஜூன் 30 நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது, அதனைப் பால் தாக்கரே வன்மையாகக் கண்டித்தார். அதற்கு திரு டி.ஆர். பாலு அவர்களும், மும்பை திமுக பொறுப்பாளர்களும் நேரில் சென்று நன்றி கூறினர்.

எனவே இன்றைய சூழலில், பாஜகவால் ஏமாற்றப்பட்ட சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு அங்கு ஆட்சி அமைத்திருப்பது நல்ல திருப்பம். இந்த நேரத்தில் அவர்கள் திமுக தலைவரை அழைத்திருப்பதும், அவர் கலந்து கொண்டிருப்பதும் வரவேற்கத்தக்கன.

தமிழகத்தில் மட்டுமின்றி, இந்திய அளவிலும் வலிமையாகக் காலூன்றத் தொடங்கியுள்ள திமுக, தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்தியாவெங்கும் மாநில சுயாட்சி மலரப் பாடுபட வேண்டும்!

அதிமுக இல்லை, ஆதிமுக

‘திராவிட அரசியல் ஒழியட்டும், ஆன்மிக ஆட்சி அமையட்டும்" என்னும் வரிகளை முன்னிறுத்தி, அர்ஜுன் சம்பத், சென்னையில், வரும் ஞாயிறு அன்று ஒரு மாநாடு நடத்துகின்றார். அதில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொள்வதாக அறிவிப்பு வந்துள்ளது- திராவிடத்தை ஒழிக்க நடத்தப்படும் மாநாட்டில், அதிமுக அமைச்சர் பங்கேற்கிறார் என்றால் என்ன பொருள்? அது அண்ணா திமுக இல்லை, அடிமைகள் திமுக அல்லது ஆன்மிக திமுக என்பதுதானே!.

- சுப.வீரபாண்டியன்