இந்தியாவில் மத்திய அரசு பொறுப்பேற்ற 2014 ஆம் ஆண்டுத் தொடக்கம் இந்திய அரசின் பொருளாதார நிலை கேள்விக்குறியாகவே இருந்தது.

இப்பொழுது பிரதமர் மோடியின் பொருளாதாரக் கொள்கை சீரழிந்து படுபாதாளத்திற்குப் போய் விட்டது.

கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்று கூறிக்கொண்டு பணமதிப்பிழப்பு நீக்கம் செய்தார் மோடி. அதன் விைளவாக நாட்டின் பணப்புழக்கம் வெகுவாகக் குறைந்து போனது.

இதனால் தொழில்துறை முடங்கிப் போனது. ஆட்டோமொபைல், ஆபரணங்கள், நெசவு ஆகிய தொழில்கள் அடியோடு பாதிக்கப்பட்டன.

புதிய தொழில்கள், தொழிற்சாலைகள் போன்றவை உருவாகி புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதற்கு மாறாக இலட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்து விட்டார்கள்.

நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்த உற்பத்தி விழுக்காடு 5 ஆகக் குறைந்தது. இது மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

நிதிநெருக்கடி குறித்தும் பொருளாதாரச் சரிவு குறித்தும் எதிர்க்கட்சிகள் மக்களவையில் கேள்விகள் கேட்ட போது இன்றைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘பொருளாதாரம் மந்த நிலையில்தான் இருக்கிறது. ஆனால் சரிவு ஏற்படவில்லை. இது ஒரு பின்னடைவுதான்... 2014 ஆம் ஆண்டுக்குப் பின் இதுவரை பொருளாதார நிலை 7.5 சதவீதமாக இருக்கிறது' என்று சொல்லியிருக்கிறார்.

இது அப்பட்டமாக உண்மைக்கு மாறான தகவல். இன்றைய பொருளாதார நிலையைப் பின்னடைவு என்று சொல்லமுடியாது. மாறாக இது பொருளாதாரச் சரிவு என்பதே உண்மை.

இன்றைய பொருளாதார நிலை 5 விழுக்காடு என்பதே பொருளாதாரச் சரிவு என்பதை உணர்த்துகிறது.

2012 - 2013 ஜனவரி- மார்ச் காலாண்டில் 4.3 சதவீதம் குறைவாக இருந்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த ஜூலை- செப்டம்பர் காலாண்டுகளில் இன்னும் குறைந்து 4.5 சதவீதம் ஆகிவிட்டது.

இப்படி நாடே பொருளாதாரத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும்போது, தீவிரவாதச் சவால்களை முறியடிக்க இலங்கைக்கு ரூபாய் 358 கோடியும், இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூபாய் 2,870 கோடியும் ஆக மொத்தம் ரூபாய் 3,228 கோடியை இலங்கைக்கு இந்தியா கொடுக்கிறது.

அண்மையில் நடந்த இலங்கைப் பொதுத் தேர்தலில் ஈழத் தமிழர்களை இனஅழிப்பாக அழித்தொழித்த மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனே தமிழர் பகுதிகளுக்கு இலங்கை இராணுவம் அனுப்பப்பட்டது.

இந்தியா இலங்கைக்கு கொடுக்கும் நிதி ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் திரும்பாது என்பது என்ன நிச்சயம்?

Pin It