இரண்டு நாள்களுக்கு முன்பு (28.10.23019) Infinity Foundation என்னும் வலையொளியில், பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர் வைத்தியநாத அய்யரிடம், ராஜிவ் மல்ஹோத்ரா நேர்காணல் செய்யும் நிகழ்ச்சி வெளியாகியுள்ளது. திராவிட இயக்கம் என்னும் 'ஆபத்தை'ப் பற்றி அவர்கள் இருவரும் கவலையோடு பேசிக் கொள்ளும் காணொளி அது!

rajiv malhothraதிராவிட இயக்கமும், தந்தை பெரியாரும், தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும் எதிரானவர்கள் என்பதாகத் தோழர் மணியரசனும் தொடர்ந்து பல வலையொளிக் காட்சிகளில் பேசி வருகின்றார்.

இரண்டும் திராவிட இயக்க எதிர்ப்பு என்னும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. ஆனால் வேறு வேறு கோணங்களிலிருந்தும், வேறு வேறு உத்திகளைக் கையாண்டும் அவை சொல்லப்பட்டுள்ளன.

முதலில் மல்ஹோத்ரா - வைத்தியநாத ஐயரைப் பார்த்து விடுவோம்.

ராஜிவ் மல்ஹோத்ரா தன் 45 ஆவது வயதிலே விருப்ப ஓய்வு பெற்று, முழு நேரமாக, இந்து - சமஸ்கிருதம் - இந்திய மேம்பாட்டிற்கு வேலை செய்யத் தொடங்கியவர். 1995 ஆம் ஆண்டு இந்த 'இன்பினிட்டி பவுன்டேஷன்' அமைப்பை நிறுவினார். அந்நிறுவனத்திற்கு, அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட, உலக அளவிலான பல தொடர்புகள் உள்ளன. இதுவரையில், அந்நிறுவனம் 400க்கும் மேற்பட்ட மானிய நிதி உதவிகளைப் பெற்றுள்ளது. ஆனால் அங்கு, ராஜிவ் மல்ஹோத்ரா மட்டுமே ஒரே ஒரு முழு நேர ஊழியர்.

2011 ஆம் ஆண்டு, திராவிட இயக்கத்தைத் தேச விரோத இயக்கமாகக் காட்டி, 'உடையும் இந்தியா' (Breaking India) என்ற நூலை எழுதியவர். அந்நூலுக்கான மறுப்புக் கூட்டமும், நூல் வெளியீடும், சென்னை, பெரியார் திடலில் நடந்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.

பேரா. வைத்தியநாதன், பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனத்தில் பொருளியல் பேராசிரியர். தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் வருகைதரு பேராசிரியர். இவரைப் புகழ்ந்து மறைந்த சோ இராமசாமி எழுதியுள்ளார் என்பதே இவர் யார் என்பதற்கான சான்றாக அமையும்.

இந்த நேர்காணலில், ஆங்கிலேயர் நிதி உதவியுடன் நீதிக்கட்சி தொடங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 'இந்தியாவுக்கும், பிராமணர்களுக்கும் எதிராக ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட பிரித்தாளும் சூழ்ச்சியே திராவிட இயக்கம் என்பதான கருத்தை இவர்கள் முன்வைக்கின்றனர். வடநாட்டில் இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் தூண்டி விடப்பட்டதைப் போல, தமிழகத்தில் திராவிட இயக்கம் உருவாக்கப்பட்டது என்பதே இவர்கள் சொல்லவரும் செய்தி.

அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் வரும் நிதியைக் கொண்டு நிறுவனம் நடத்தி, எந்த ஆங்கிலத்தை எதிர்த்துப் பரப்புரை செய்கின்றனரோ, அதே ஆங்கிலத்தில் உரையாடி, திராவிட இயக்கத்தை ஒழித்து விட வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். இந்தியாவையும், இந்து மதத்தையும் எதிர்க்கும் திராவிட இயக்கத்தை எதிர்ப்பதாக இவர்கள் சொல்கின்றனர்.

இந்தியாவையும், இந்து மதத்தையும் தாங்களும் எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் தோழர் மணியரசனும், திராவிட இயக்கத்தை மிகக் கடுமையாக எதிர்க்கிறார். திராவிடத்தை எதிர்ப்பதற்காகவே இவர் 'நேர்ந்து விடப்பட்டுள்ளது' போலத் தெரிகிறது. (யாரால் என்பதைக் காலம் விரைவில் சொல்லும்).

இவருடைய புதிய கோட்பாடு, "திராவிடம் என்பது பார்ப்பனியத்தின் இளைய பங்காளி" என்பது! காலமெல்லாம் பார்ப்பனியத்தை எதிர்த்த திராவிடம், அதன் பங்காளி என்று கண்டறிந்த விஞ்ஞானி இவர்.

இப்போது தோழர் மணியாரசனிடம் கேட்பதற்கு நம்மிடம் இரண்டு வினாக்கள் இருக்கின்றன. ராஜிவ் மல்ஹோத்ரா, வைத்தியநாதன், ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகிய பார்ப்பனர்கள் எல்லோரும் தங்கள் பங்காளியை எதிர்த்துத்தான் போரிட்டுக் கொண்டிருக்கிறார்களா? அதற்காகத்தான் திராவிட இயக்கத்தின் மீது இவ்வளவு கடுமையான தாக்குதல்களைத் தொடுக்கின்றார்களா?

இன்னொரு கேள்வி - திராவிடத்தை நீங்கள் எதிர்ப்பது போல, உங்கள் கட்சியில் - மன்னிக்கவும், "பேரியக்கத்தில்!" - உங்களுக்கு அடுத்த இடத்தில் உள்ள தோழர் வெங்கட்ராமன் எதிர்ப்பதில்லையே, ஏன்?

p maniarasanதிராவிடம் அவருடைய இளைய பங்காளி என்பதாலா? அல்லது அவர் நேரடியாக எதிர்த்தால், பூனைக்குட்டி வெளியில் வந்துவிடும் என்பதாலா? உண்மையில் வெங்கட்ராமன்தான் பேசுகிறார், மணியரசன் வாயசைக்கிறார் என்னும் குற்றச்சாற்றை நீங்கள் அறிவீர்களா? அப்படி, 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்' என்று எதார்த்தம் இருப்பதாகச் சொல்லப்படுவதை மறுப்பதற்காகவேனும், வெங்கட்ராமன் திராவிடத்தை எதிர்த்து நேரடியாகப் பேசுவாரா? உங்கள் கட்சிக் கொள்கைதானே அது? நெஞ்சில் கள்ளம் இல்லையென்றால், அவரும் நேரடியாகப் பேச வேண்டும்தானே! பேசாவிடில், அது கள்ள மௌனம் என்று ஆகி விடாதா?

பிராமணர்களுக்கும், இந்தியாவிற்கும் எதிரான இயக்கம் என்பதால் திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டும் என்று அவாள் பேசுவார்கள். பிராமணர்களுக்கும், இந்தியாவிற்கும் ஆதரவான இயக்கம் என்பதால், திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டும் என்று இவாள் பேசுவார்கள். அதாவது இது ஒரு கத்திரிக்கோல் உத்தி.

ஈழச் சிக்கலிலும் இப்படித்தானே நடந்தது! கலைஞரும், திமுகவும் ஈழ மக்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் எதிரானவர்கள் என்று ஒரு பக்கம் பரப்புரை நடந்தது. விடுதலைப் புலிகளுக்கு மறைமுகமாக உதவுகின்றனர் என்று சொல்லி, திமுக ஆட்சி மறுபுறம் கலைக்கப்பட்டது. இதே கத்திரிக்கோல் உத்திதான் இப்போது மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. கத்திரிக்கோலில் இரண்டு கத்திகள் இருக்கும். இரண்டும் நேர் எதிர்த் திசைகளில் செயல்படும். ஆனால் இரண்டையும் ஒரே கைதான் இயக்கும்.

இது ஒரு மோசமான வலைப்பின்னல். அவர்கள் திராவிடம் என்னும் பெயரை எதிர்க்கவில்லை. பெயரில் ஒன்றுமில்லை என்பது அவர்களுக்கும் தெரியும். எனினும் அது ஒரு குறியீட்டுச் சொல். சமூக நீதிக்கான குறியீட்டுச் சொல். அது நாட்டில் வேரூன்றி நிற்கும் வரையில் பார்ப்பனியம் எழ முடியாது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். எனவேதான், திராவிடத்தைப் பல்வேறு முனைகளிலிருந்தும் குறி வைத்துத் தாக்குகின்றனர்.

ஆம், திராவிடத்தை அழிக்க வேண்டும், திமுக வை ஆட்சிக்கு வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து வேலை செய்யும் ராஜிவ் மல்ஹோத்ரா, வைத்தியநாதன், ஹெச். ராஜா, எஸ்.வி.சேகர், மணியரசன், சீமான் ஆகிய அனைவருக்கும் பெயர்கள் மட்டுமே வேறு வேறாக உள்ளன.

- சுப.வீரபாண்டியன்

Pin It