தேசிய ஒற்றுமை தினம் என்றும், இந்தியாவின் ஒற்றுமை விழாவைக் கொண்டாடுவோம் என்றும் மத்திய அரசு ஒரு விளம்பரத்தை நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது.

அந்த விளம்பரத்தில் "இந்தியாவின் ஒற்றுமைக்கான ஓட்டத்தில் ஒட்டு மொத்த தேசமும் பங்கேற்க உள்ளது" என்ற வரிகளுக்குப் பின்னர் "ஒரே இந்தியா, உன்னத இந்தியா உருவாக" என்று முடிகிறது.

இந்தியாவின் ஒற்றுமை என்று சொல்லிவிட்டு, பின்னர் ஒரே இந்தியா என்று சொல்லுவதில் முரண் இருக்கிறது.

பல்வேறு மாநிலங்கள், அவைகளில் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள், அவர்களிடையே காணப்படும் வெவ்வேறு பண்பாட்டுக் கூறுகள் இருக்கும் பெரும் நிலப்பரப்பு இந்தியா.

இந்த வெவ்வேறு மாநில மக்களின் மொழிகள் உட்பட அவர்களின் அனைத்து உரிமைகளும் பாதிக்கப்படாத வகையில், அவர்களின் ஒற்றுமையைப் பேணுவதுதான் தேசிய ஒற்றுமை, இந்தியாவின் ஒற்றுமை.

மாறாக, மேலே சொன்ன வெவ்வேறு மாநில மக்களின் மொழிகளை ஏறத்தாழ ஒழிப்பதைப் போல பின்தள்ளி, சமஸ்கிருத மொழியை ஆட்சி மொழியாக்கி ‘ஒரே இந்தியா’ என்று சொல்லும்பொழுது அங்கே ஒற்றுமை என்ற சொல்லே அற்று வீழ்கிறது.

இன்னொரு பக்கம் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ வழங்கி, தனி உரிமையோடு இருந்த ஜம்மு காஷ்மீரில் அச்சிறப்பு சட்டத்தை ரத்து செய்தது மத்திய அரசு.

ஊரடங்குச் சட்டம், நெருக்கடி நிலை, தலைவர்கள் சிறை வைப்பு, அடக்கு முறை என முற்றிலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது காஷ்மீர்.

இப்பொழுது அந்த மாநிலச் சட்டசபையைக் கூட கலந்து பேசாமல் அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டன. இந்திய மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையை இந்தியாவின் ஒற்றுமை என்று எப்படிக் கூற முடியும்?

மத்திய பாஜக அரசுக்கு எதிராகப் பேசும் எழுத்தாளர்கள் கொல்லப்படுகிறார்கள்.

மாட்டிறைச்சியை உணவாகக் கொள்ளும் தாழ்த்தப்பட்ட, முஸ்லீம் சிறுபான்மையின மக்கள் தாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள்.

காவிரி வேளாண் நில மக்கள் தண்ணீருக்காகப் போராடுகிறார்கள். நிலங்கள் வறண்டு போகின்றன.

ஆனால், கர்நாடக மாநில பாஜக அரசு தண்ணீர் தர மறுக்கிறது. தமிழக மக்களின் கண்ணீர் மத்திய ஆட்சியாளர்கள் கண்களில் படவில்லை.

இப்படிப் பல்வேறு முரண்கள் இருக்கும் நிலையில் இந்தியாவின் ஒற்றுமை என்பது கேள்விக்குறியாகிறது.

சரியாகச் சொன்னால் ஒரே மொழி, ஒரே இந்தியா என்பதுதான் இந்தியாவின் ஒற்றுமையைச் சீர்குலைக்கிறது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

 

Pin It