political parties

அரியானாவில்குர்கான்” என்ற நகரத்தை மகாபாரதக் கதைப்படிகுரு கிராமம்” என்று பா... மாநில அரசு மாற்றியுள்ளதே, இது வரலாற்று அடிப்படையிலான பெயர் மாற்றமா? இந்துத்துவா அடிப்படையிலான பெயர் மாற்றமா?

ஆரியவாத அடிப்படையிலான பெயர் மாற்றம்!

மகாபாரதத்தில் குரு துரோணோச்சாரியார் தம் மாணவர்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்த இடம்தான் குர்கான் என்று மாறிவிட்டது. அதை மீண்டும், “குரு கிராமம்” என்று மாற்றுகிறோம் என்று அரியானாவின் பா.ச.க. அரசு கூறுகிறது.

மகாபாரதக் கதையை அப்படியே ஏற்றுக் கொண்டால், அந்த இடத்திற்கு “ஏகலைவன் கிராமம்” என்றுதான் பெயர் சூட்ட வேண்டும்.

சூத்திரனாகிய ஏகலைவனுக்கு வில்லம்புப் பயிற்சி கற்றுத்தர மறுத்து விடுகிறார் துரோணாச்சாரியார். சத்திரியனுக்குரிய போர்ப் பயிற்சி சூத்திரனுக்குக் கூடாது என்பது துரோணரின் வாதம். ஆனால் ஏகலைவன் துரோணாச்சாரியின் பொம்மையைச் செய்து வைத்து, அதற்குக் குரு வணக்கம் செலுத்தித் தானே வில்லம்புப் பயிற்சியைக் கற்று சிறந்த வில்லம்பு வீரனாகிறான். குரு காணிக்கை செலுத்த துரோணாச் சாரியாரின் பயிற்சிக் கூடத்திற்குச் சென்று தங்களுக்கு என்ன காணிக்கை வேண்டும் என்று கேட்கிறான் ஏகலைவன்.

வில்லம்பு விடச் சொல்லி சோதனை செய்த துரோணர் அதிர்ச்சி அடைகிறார். அவ்வளவு திறமை பெற்றுள்ளான் ஏகலைவன்! உடனே துரோணாச் சாரியார் நயவஞ்சகமாக, உன் கட்டை விரலை வெட்டிக் காணிக்கையாகக் கொடு என்று கேட்கிறார்.

ஏகலைவன் தன் கட்டை விரலை வெட்டிக் காணிக்கை கொடுத்து விடுகிறான். அது ஏகலைவன் ஈகம் செய்த இடம். மறுபக்கம் துரோணரின் நயவஞ்சகம் அரங்கேறிய இடம். நயவஞ்சகத்தை நினைவூட்டும் வகையில் பெயர் சூட்டுவதைவிட, தானே கற்றுக் கொண்டு திறமைமிக்க வில்லம்பு வீரனாக விளங்கிய ஒரு சூத்திரன் செய்த ஈகத்தை நினைவூட்டும் வகையில் ஏகலைவன் கிராமம் என்று பெயர் சூட்டியிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்! இதுவும் மகாபாரதக் கதை தானே!

தேர்தல் ஆணையம், கட்சிகள் மற்றும் இயக்கங் களின் கொடிகளை அகற்றுவது கொடிக் கம்பங் களைப் பிடுங்கி அப்புறப்படுத்துவது, காரில் கொடிகட்டிச் செல்வதைத் தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி சரியா?

தேர்தல் ஆணையத்தின் மேற்படிச் செயல்கள் அனைத்தும் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தைக் காட்டிக் கொள்ளும் ஆடம்பர அற்பத்தனங்களில் கொடிகளைத் தடை செய்வதும் ஒன்று.

ஐம்பதாயிரம் ரூபாய் கொண்டு போனால் பிடிப்போம் என்றார்கள். எதிர்ப்புக் கிளம்பவே பின்னர் ஒரு இலட்ச ரூபாய் கொண்டு சென்றால் அதற்கான ஆவணம் வேண்டும் என்றார்கள். இதனால் சாதாரண மக்களும் சிறு வணிகர்களும் படும் தொல்லை கொஞ்ச நஞ்சமல்ல!

இதெல்லாம் பெரிய அரசியல் கட்சிகள், பல நூறு கோடி ரூபாயைக் கொண்டு போவதிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பி காவலுக்குக் கெட்டிக்காரன் வேடம் போடும் கோமாளிக் கொடுமைகள்!

எது ஆளும் கட்சியாக இருந்தாலும் உயர் காவல் அதிகாரிகளின் ஊர்திகளில்தான் கோடி கோடியாய் கொண்டு செல்லப்படுகிறது. வாக்குகளை விலைக்கு வாங்கிடப் பெரிய கட்சிகள் எந்த வழியில் கோடி கோடியாய் கொண்டு போகின்றன என்பதைப் புலனாய்வுத் துறையால் கண்டுபிடிக்க முடியாதா? முடியும். ஏன் பொல்லாப்பு என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள். சாதாரண மக்களைத் துன்புறுத்து கிறார்கள்.

தேர்தல் பரப்புரையில் கட்சிகள் தங்களுடைய மாற்றுத்திட்டங்களை முன்வைக்காமல் வெறுமனேமாற்றம்”என்கின்றனவே, அதுசரியா?

மனத்தில் உள்ளது வாய் வழியே வருகிறது.  இப் பொழுது முதல்வர் பதவியில் உள்ளவரை அப்புறப் படுத்திவிட்டு அந்த அதிகாரத்தில் தாங்கள் அமர வேண்டும் என்பதுதான். உண்மையாகவே அவர்கள் விரும்பும் மாற்றம். அதைத்தான் ஏதோ கொள்கை மாற்றம் போல் பூச்சுகிறார்கள்.

ஒவ்வொரு கட்சியும் தனது எதிர்க்கட்சியைக் குற்றம் சாட்டுவதிலேயே முக்கால்பாக நேரத்தைச் செலவிடுகின்றன. தங்களின் மாற்றுத்திட்டங் களுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லையே?

வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறார்கள்? சட்டியில் இல்லை; அகப்பையில் வரவில்லை.

தமிழ்நாட்டு அரசுக்கு 2 இலட்சத்து 14 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது. கருணாநிதி ஆட்சியைவிட மிகக் கூடுதலாக செயலலிதா ஆட்சி கடன் வாங்கி விட்டது. இதுபற்றிப் பல கட்சிகளும் குற்றம் சாட்டு கின்றன. அது சரி. ஆனால் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தக் கடனை எப்படி அடைப்போம் என்பதைச் சொல்லவில்லையே!

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு 2014 வரை 96 ஆயிரம் கோடி ரூபாய் கடன். 2015-2016 - 12 ஆயிரத்து 700 கோடி கடன். ஆக மொத்தம் 1,08,700 கோடி ரூபாய் கடன். ஆட்சிக்கு வந்தால் இதை எப்படி அடைப்போம் என்று ஆட்சியில் உள்ள கட்சியும் சொல்லவில்லை. ஆட்சிக்கு வரப் போட்டியிடும் கட்சிகளும் சொல்ல வில்லை.

கிட்டத்தட்ட 90 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலையில் லாமலும், குறைந்த கூலி வேலையிலும் திண்டாடு கிறார்கள்.

மிகச் சிலருக்கு மாதம் ஒரு இலட்சம், 90 ஆயிரம், 50 ஆயிரம் என்று சம்பளம். மிகப் பலருக்கு உரிய வேலையில்லை; பட்டப்படிப்பு, பொறியியல் (பி.இ.) படிப்பு என உயர் படிப்புப் படித்தவர்கள் மாதம் ஐயாயிரம், ஆறாயிரம் ரூபாய் சம்பளத்தில் இலட்சக் கணக்கான ஆண்களும் பெண்களும் அல்லற்படு கிறார்கள். இவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை எப்படித் தருவோம் என்று திட்டவட்டமாக யாரும் கூறவில்லை.

தமிழ் மொழிப் பெருமை, தமிழர் பெருமை, வீரம், மானம் ஆகியவைப் பற்றிப் பேசுவோர் இந்தி -- சமற்கிருதத் திணிப்பை எப்படித் தடுப்போம் என்றோ -- ஆங்கில ஆதிக்கத்தை நீக்கித் தமிழ்வழிக் கல்வியை எப்படிக் கொண்டு வருவோம் என்றோ கூறவில்லை. தில்லியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களைத் தமிழ் நாட்டிற்கு எப்படி மீட்போம் என்றும் கூறுவதில்லை. காவிரி, முல்லைப் பெரியாறு உரிமைச் சிக்கல்களை எப்படித் தீர்க்கப் போகிறோம் என்றும் பேசுவதில்லை.

எனவே, இந்தக் கட்சிகளுக்கு மிகவும் வசதியானது, தங்களின் எதிர்க்கட்சிகளைக் குற்றம் சாட்டுவது, விழிப்புணர்வு குறைவாய் உள்ள மக்களில் பலர்க்கும் இதுதான் விறுவிறுப்பான வேடிக்கை!

பழைய காலங்களில் பிராமணர்கள் ஊர்களில் அக்ரகாரங்கள் அமைத்துக் கொண்டு கோலோச்சினார்கள். நிலக்கிழார்களாக இருந்தார்கள். ஆதிக்கம் செலுத்தினார்கள். இப்போது அக்ர காரங்கள் இல்லை. அவர்கள் எல்லாம் சென்னை, மும்பை, இலண்டன், நியூயார்க் என்று போய் விட்டார்கள். இப்போதும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் மூச்சுக்கு மூச்சு பார்ப்பனியம் - பார்ப்பனியம் என்று பகை நோக்கில் பேசுவதும் எழுதுவதும் காலப்பொருத்தம் உடையதா?

கிராமங்களில் அக்ரவாரங்கள் முன்புபோல் கட்டுக் கோப்பாகவும் இல்லை; ஊர் ஆதிக்கம் செய்வதாகவும் இல்லை என்பது உண்மை. ஆனால் இப்போது பார்ப்பனர்களின் அக்ரகாரங்கள் உயிர் ஈட்டுறுதிக் கழகம் (எல்.ஐ.சி.), ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) போன்ற வங்கிகள், நடுவண் அரசின் உற்பத்தி வரி, சுங்க வரி, வருமான வரி அலுவலகங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் இவையெல்லாம் புதிய அக்ரகாரங்கள் போன்றவை தான்!

பழைய கால கிராமத்து அக்ரகாரங்களைவிட இவை அதிக வலிமையுள்ளவை. அரசின் கொள்கை உருவாக்கம், சமூகக் கருத்துருவாக்கம் போன்றவற்றில் இந்தப் புதிய அக்ரகாரங்கள் தீர்மானகரமான பங்கு வகிக்கின்றன.

இவை ஒருபக்கம் இருக்க, இந்திய அரசியலில் இந்துத்துவா என்ற கோட்பாடு அன்றாடம் தீவிரமாகத் திணிக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசில் ஆட்சியும் செலுத்துகிறது இந்துத்துவா! இந்துத்துவாவுக்கு அடிபணியாதவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.

இந்துத்துவா என்பது ஆரியப் பார்ப்பனிய இன ஆதிக்கவாதம் - வர்ணாசிரமம் -- வேதமதத் தீவிரவாதம் ஆகியவற்றின் தொகுப்பாகும்!

கருத்தியல் அடிப்படையிலும் களப் போராட்டங்கள் வழியிலும் முன்பைவிட முனைப்பாக எதிர்க்கப் பட வேண்டிய அளவிற்கு பார்ப்பனிய ஆதிக்கம் விரிந்து பரந்துள்ளது.

பார்ப்பனியம் - திராவிடம் இவை இரண்டில் எதை முதன்மைப்படுத்தி எதிர்க்க வேண்டும்? ஏன்?

முதன்மைப்படுத்தி எதிர்க்க வேண்டியது பார்ப்பனியம். ஏனெனில் அது இந்திய அரசுக் கட்டமைப்பிலேயே இருக்கிறது.

நமது பிறப்பிலிருந்து இறப்பு வரை உள்ள எல்லா வற்றையும் ஆரியப் பார்ப்பனியம் தனது ஆதிக்கத் திற்கேற்ப கட்டமைக்கிறது. வர்ண சாதி, சமற்கிருதம், அரசியல், ஆன்மிகம், குடும்பச் சடங்குகள் அனைத்தும் பார்ப்பனியக் கட்டமைப்பில்தான் இருக்கின்றன.

திராவிடம் என்பது இந்திய அரசுக் கட்டமைப்பில் இல்லை. ஆனால், இந்திய அரசுக்குக் கங்காணி வேலை பார்க்கிறது. தமிழர் என்ற இயற்கையான இனப்பெயரை மறுத்து ஆரியர் சூட்டிய திரிபுப் பெயரான திராவிடரை அது நம்மீது திணிக்கிறது. அதனால் அதனைப் பார்ப்பனியத்தின் ஒன்றுவிட்ட பங்காளி என்கிறோம்.

கங்காணி, ஒன்றுவிட்ட பங்காளி போன்ற பாத்திரங்கள் வகிப்பதால் திராவிடத்தை இரண்டாம் நிலையிலும் ஆரியப் பார்ப்பனியத்தை முதல் நிலையி லும் வைத்துத் தமிழ்த்தேசியர்கள் எதிர்க்க வேண்டும்.

திராவிடத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் பார்ப்பனியத்தை எதிர்க்க மறுப்பது அல்லது அதன்மீது அரவணைப்பு நிலை கொள்வது மிகப்பெரிய தமிழினத் துரோகமாக அமைந்துவிடும்!

அதேபோல், ஆரியப் பார்ப்பனியத்தை எதிர்த்திடத் திராவிடத்தின்பால் இணக்கம் காட்டினால் அது துரோகிகளுடன் கூட்டணி சேர்ந்த நிலையாகும்!

தமிழ்நாட்டில் சாதி வெறியாட்டங்கள் - மதச் சண்டைகள் நடக்கும் போதெல்லாம் திராவிட வாதிகள் பெரியார் பிறந்த மண்ணில் இப்படி நடக்கலாமா என்று கேட்கிறார்கள். திருவள்ளுவர் பிறந்த மண்ணில் - திருவள்ளுவர் பிறந்த இனத்தில் இப்படி நடக்கலாமா என்று கேட்ப தில்லையே, ஏன்?

இவ்வாறு சொல்வதன் மூலம் திராவிடவாதிகள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொள்கிறார்கள் என்று கருதலாம். ஏனெனில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக பெரியாரைத் தலைவராகக் கொண்ட ஆட்சிகள்தான் நடக்கின்றன.

பெரியார் தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவதற்கு முன் தமிழர்களுக்கு அறிவு இல்லை; தன்மானம் இல்லை, கல்வி இல்லை; அவர் பிறக்காவிட்டால் இன்றும் தமிழர்கள் அடிமை வேலைகள் பார்த்துக் கொண்டும் ஆடு மாடுகள் மேய்த்துக் கொண்டும்தான் இருப்பார்கள் என்ற கருத்தைத்தான் திராவிடவாதிகள் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

”பிறப்பு அடிப்படையில் அனைவரும் சமம்” என்ற திருவள்ளுவர், “எல்லா ஊரும் நமது ஊரே, எல்லோரும் நம் உறவினரே” என்று பாடிய கணியன் பூங்குன்றன், “ஒன்றே குலம் - ஒருவனே தேவன்” என்று பேசிய திருமூலர், “சாதிபேசி அழியாதீர், மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்று பாடி அனைவருக்கும் பொதுவான சமரச சுத்த சன்மார்க்க சங்கம் உருவாக்கிய வள்ளலார், தமிழர்கள் அனைவரும் சமம் என்று இயங்கிய அயோத்திதாசர், மனிதர்கள் அனைவரும் சமம் என்று பொதுவுடைமை பேசிய சிங்காரவேலர் போன்றோரெல்லாம் பிறந்த மண் தமிழ் மண் என்றோ, அவர்கள் எல்லாம் பிறந்த இனம் இதே தமிழினம் என்றோ திராவிடவாதிகள் பேச மாட்டார்கள்.

திராவிடவாதிகளின் அடிமனக் கருத்து திராவிட இனப் பெயரை நிரந்தரமாக நிலைநிறுத்தி, தமிழினப் பெயரை நிரந்தரமாக மறையச் செய்வதுதான்!

எனவே தமிழர்களின் வரலாற்றுப் பெருமிதங்கள் - தமிழினத்தின் வரலாற்று நாயகர்கள் பெயரை நினைவூட்டாமல், பெரியார் பெயரை மட்டும் திரும்பத் திரும்ப நினைவூட்டிக் கொண்டே இருப்பார்கள்.

“தமிழினத்திற்குத் தன்மானம் ஊட்டும் பணியைச் செய்ய தமிழரில் யாரும் முன்வரவில்லை, எனவேதான் நான் அதை என்மேல் போட்டுக் கொண்டேன்” என்று தான் பெரியாரே திரும்பத் திரும்பச் சொன்னார்.

தமிழின வரலாற்று நாயகர்களைப் பற்றித் திராவிடவாதிகள் சொல்லவில்லையே என்று எண்ணுவதைவிடுத்து, நாம் அந்த நாயகர்களின் பெயர்களையும் அறிவுரைகளையும் செயல்களையும் தமிழ்நாட்டு இளையோர்க்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டுவோம்!

Pin It