தங்களைத் தமிழ் இந்துக்கள் என்று அறிவித்துக் கொள்ள இன்று சிலர் முடிவெடுத்துள்ளனர். அது அவர்கள் விருப்பமும், உரிமையும் சார்ந்தது. ஆனால் அப்படி அறிவித்துக் கொள்வதற்கு முன், “திராவிடம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இருக்கிறதா?” என்று கேட்ட அவர்கள், இந்து என்ற சொல் சங்க இலக்கியத்தில் எத்தனை இடங்களில் இருக்கிறது என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.

brahmin childrenகிருத்துவர்களும், இஸ்லாமியர்களும் தங்களுக்குள் ஒருங்கிணைப்புப் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்களாம். எனவே சைவர்கள், வைணவர்கள் எல்லோரும் இந்துக்கள், அதாவது தமிழ் இந்துக்கள் என்ற பெயரில் இணைய வேண்டுமாம். எனவே இந்த ஒற்றுமை முயற்சி, கிறித்துவ, இஸ்லாமியர்களுக்கு எதிரானது போலிருக்கிறது. அதைத்தான் ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆகியனவும் முன்வைக்கின்றன.

இருவரின் நோக்கமும், மத அடிப்படையில் இந்துக்களை இணைப்பதும், திராவிடத்தை எதிர்ப்பதும்தான். ஆனால் இருவரும் ஒன்று என்று நாம் நினைத்த்துவிடக் கூடாதாம். இவர்கள் தமிழ் இந்துக்களாம், அவர்கள் ஆரிய இந்துக்களாம். இருவரும் செய்யும் வேலை மட்டும் ஒன்றுதானாம்!

திராவிட நாடு எங்கே இருக்கிறது என்று கேட்கும் இவர்கள், ஆரிய நாடு எங்கே இருக்கிறது என்பதை இன்றுவரையில் தெரிவிக்கவில்லை.

திராவிடம் என்ற பெயர் ஒரு நூற்றாண்டுக்கு முன் வந்தது என்பதால் அதனை ஏற்கக் கூடாதாம். ஆனால் ஓரிரு நூற்றாண்டுக்கு முன் ஆங்கிலேயரால் சூட்டப்பட்ட இந்து என்ற பெயரை ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்.

ஆங்கிலேயர்கள் இந்து என்றும், இந்தியா என்றும் பெயர் சூட்டினார்கள் என்று சந்திரசேகர சாமிகள் சொல்லியுள்ளார். எனவே ஆங்கிலேயர் உருவாக்கிய இந்தியாவை நாம் ஏற்றிடக் கூடாது என்றும், இந்துவை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ‘தத்துவப் பேராசான்கள்’ நமக்குக் கற்றுக் கொடுக்கின்றனர்.

இன்னொரு பெரிய அதிசயத்தையும் பேராசான் கண்டுபிடித்திருக்கிறார். ‘இந்து’ என்பது மதச் சார்பற்ற பெயராம். எனவே ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வதை எதிர்க்கும் அவர், விநாயகர் அகவல் பாட வேண்டும் என்கிறார். ஓ..விநாயகர் மதச் சார்பற்றவர் போலிருக்கிறது!

தமிழ் இந்துக்கள் வருணாசிரமத்தை எதிர்க்கின்றனராம். ஆனால், மறந்தும் பார்ப்பனர் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், ‘பிராமணர்’ என்னும் வருணாசிரமச் சொல்லைத்தான் பயன்படுத்துவார்களாம்.

பகுத்தறிவு என்பதெல்லாம், சிந்தனைக் குறைவானவர்களின் பேச்சாம் - இது குட்டி ஆசானின் அருள்மொழி! தெய்வத்தின் குரலை ஒட்டி, இப்போது பேராசான், சிற்றாசன் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இந்தப் பட்டங்களை எல்லாம் அவர்கள் விரும்பவில்லையாம். பட்டங்கள் போட்டுக்கொள்ளும் திராவிட மரபைப் பார்த்துத் தமிழ்த் தேசியத் தம்பிகள் சிலர் இப்படிப் போடுகிறார்களாம். ஆகமொத்தம், திராவிட இயக்க மரபைத்தான் அங்கிருப்பவர்களும் பின்பற்றுகின்றனர் என்பது புரிகிறது.

சைவம், வைணவம் இரண்டு மதங்களும் நெருக்கமாக வந்து விட்டன என்பதால், இரண்டையும் சேர்த்து, இந்து - மன்னிக்கவும் - தமிழ் இந்து என்கின்றனராம். ஏன், காணபத்யம், கௌமாரம், சாக்தம், சௌரம் போன்றவைகளைச் சேர்க்கவில்லை? அவற்றையும் சேர்த்தால் அது ‘கருவாட்டுச் சாம்பார்’ ஆகிவிடுமோ?

எல்லாம் முடிந்துவிட்டது. மேலாடையைக் கழற்றிவிட்டு, திருச்செந்தூர் முருகன் அருள் பெற மாலையும், கழுத்துமாய் நின்றாயிற்று.அவாளாகவே மாறிவிட்டார்கள். பூணூல் ஒன்றே ஒன்றுதான் பாக்கியுள்ளது. அதையும் போட்டுக்கொள்ள இவர்கள் தயார். ஆனால் அவரகள் அனுமதிக்க மாட்டார்கள்!

- சுப.வீரபாண்டியன்

Pin It