மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், மிக வியப்பான ஒரு நீதிமன்ற நடைமுறையை நாம் பார்க்க நேர்ந்துள்ளது!
இது விடுமுறைக் காலம். வாரத்திற்கு இரண்டு முறைதான் நீதிமன்ற அமர்வுகள் இருக்கும். ஒன்று மனு அனுமதிக்காக (admission). இன்னொன்று மனுக்கள் மீதான விசாரணைக்காக!
நேற்று முன்தினம் விசாரணைக்காக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 40 வழக்குகள் வந்துள்ளன. அவற்றுள் 15 வழக்குகள் குண்டர் சட்டத்தை ரத்து செய்யுமாறு கேட்டு வந்தவை.முதல் 14 மனுக்களை, நீதிபதிகள் ஜி .ஆர் . சுவாமிநாதன், பி. பி. பாலாஜி இருவரும் ஒத்தி வைத்து விட்டனர். அரசின் பதில் மனு வந்த பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர். ஆனால் 15 ஆவது மனுவை மட்டும் உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், மதியம் 2.30 மணிக்குள் எல்லா ஆவணங்களையும் அரசு ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் ஆணையிட்டார். அந்த மனு சவுக்கு சங்கருக்காக அவருடைய தாயார் கொடுத்திருந்த ஒன்று.
14 மனுக்களை முறைப்படி தள்ளி வைத்த உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கர் தொடர்பான மனுவை மட்டும் ஏன் உடனே எடுத்துக் கொண்டது என்பது நம்மைப் போன்ற பாமரர்களுக்குப் புரியவில்லை. ஒருவேளை காந்தியாருக்கு அடுத்து உருவாகி இருக்கும் இரண்டாவது 'தேசத் தந்தை" யாக சவுக்கு சங்கர் இருப்பாரோ என்று எண்ணத் தோன்றியது.
நீதியரசர் சுவாமிநாதன், தான் சொன்னபடி மதியமே வழக்கை எடுத்துக் குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாகவும் சொல்லி விட்டார். ஆனால் அந்த அமர்வில் உடன் இருந்த இன்னொரு நீதிபதி பாலாஜி அவர்கள் அதனை ஏற்கவில்லை. அரசின் பதில் வந்த பிறகுதான் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார். அதனால் இப்போது அந்த வழக்கு, மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வளவு அவசரம் அவசரமாகச் சவுக்கு சங்கர் வழக்கை எடுத்துக் கொள்ள வேண்டிய - எடுத்துக் கொண்டு தீர்ப்பும் வழங்கிட வேண்டிய கட்டாயம் என்ன வந்தது? இதற்கு நம் மதிப்பிற்குரிய நீதிபதி சுவாமிநாதன் அவர்கள், நீதிமன்றத்திலேயே விடையும் சொல்லி விட்டார்.
சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடிய இருவர், நீதிபதியவர்களை அவர் அறையில் தனியாகச் சந்தித்து, இந்த வழக்கை அவசரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்களாம். எனவே அவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், உடனே எடுத்துத் தீர்ப்பும் சொல்லி விட்டாராம்.
இப்போது நமக்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. தனிப்பட்ட முறையில் நீதிபதி அவர்களை, அவர் அறையில் தனியாகச் சந்தித்து, நீதிமன்ற நடைமுறையில் குறுக்கிட்டு, தங்கள் செல்வாக்கைச் செலுத்தி, நீதிபதிக்கே யோசனை அல்லது மிரட்டல் கொடுத்த அந்த இரண்டு பேர் யார்? அவர்களின் பெயர்களை நீதிபதி ஏன் வெளிப்படையாகச் சொல்லவில்லை? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை?
நமக்கு இன்னொரு கேள்வியும் தோன்றுகிறது. இரண்டு பேர் தனியாகச் சந்தித்து வழக்கை எடுக்காதீர்கள் என்று சொன்னதற்காக, அதனை அவர் கையில் எடுப்பார் என்றால், இனி அடுத்தடுத்த வழக்குகளில் இரண்டு பேர் தனியாகச் சந்தித்து குறிப்பிட்ட இந்த வழக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னால் அல்லது மிரட்டினால், உடனடியாக நீதிபதி விசாரணையை நிறுத்தி விடுவாரா?
நீதிமன்ற நடைமுறை என்பது, நீதிபதியைத் தனியாகச் சந்தித்து யாரோ சிலர், என்ன சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அமையுமா என்பதும் நம் போன்ற பாமரர்களுக்குப் புரியவில்லை!
மாண்பமை நீதிபதியவர்கள் நம்மைப் போன்ற எளியவர்களின் இந்த ஐயங்களுக்கு விடை தந்து, நீதியைக் காப்பாற்றுவார் என்று நம்புவோமாக!
- சுப.வீரபாண்டியன்