பார்ப்பனர்கள் 4-6 இழைகளில் மெல்லிய பூணூல் போட்டுக் கொள்கிறார்கள். அவர்களைப் பார்த்துப் பூணூல் போடக் கற்றுக் கொண்ட திராவிடர் சிலர் சுண்டுவிரல் பரமனுக்குப் பூணூல் போட்டுக் கொள்கிறார்களே! ஏன்?

kuthoosi gurusamy 263வடகலை அய்யங்கார் ‘நைஸாக’ ஈர்க்கு மாதிரி (துடைப்பக்குச்சி!) மூன்று கோடுகள் இழுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களைப் பார்த்து நாமம் போடக் கற்றுக் கொண்ட தென்கலை அய்யங்கார்களும், நாயுடுகளும், பிற நாமக்காரர்களும் ஒரு அங்குல கனத்துக்கு இருட்டில்கூட ஒரு பர்லாங் தூரத்தில் தெரியும்படியாக வரட்டி கனத்தில் போட்டுக் கொள்கிறார்களே, அது ஏன்?

பரம்பரை ‘சைவர்’கள் நாசுக்காக மூன்று விரல்களால், பட்டும் படாமல் நெற்றியில் விபூதியடித்துக் கொள்ளும்போது அவர்களால் சைவ மதத்திற் சேர்க்கப்பட்ட புதுசுகள் சுவற்றுக்குச் சுண்ணாம்பு அடித்த மாதிரி நெற்றி நிறைய இரண்டு மூன்று ‘கோட்டிங்’ அடித்துக் கொள்கிறார்களே, அது ஏன்?

பரம்பரையாக மாமிச உணவு உண்பவர்கள், ஏதோ 4-5 மிருகங்கள், 7-8 பறவைகளோடு மட்டும் நிறுத்திக் கொண்டிருக்கும்போது, புதுசாக ‘வீரர்’களானவர்கள் எந்தக் கறியானாலும் சரி, (மனித மாமிசம் தவிர) கொண்டுவா, என்று கூறுகிறார்களே, அது ஏன்?

பரம்பரையாக இஸ்லாம் மதத்திலுள்ளவர்கள், தங்கள் பெண்களுடைய முக முடியை எடுத்துவிட்டு; அவர்களைப் போர் வீரர்களாக ஆக்கியிருக்கும்போது, போன வருஷம் காத்தானாக இருந்த காதர் பாக்ஷhக்கள் தங்கள் பெண்களை வீட்டிற்குள் போட்டுப் பூட்டி வைக்கிறார்களே, அது ஏன்?

பல நூற்றாண்டுகளாக கிருஸ்துவர்களாகவே இருந்தவர்களும் ‘பைபிள்’ வேதநூல் முழுவதையுமே மனப்பாடம் செய்தவர்களுமான மேல்நாட்டு அறிஞர்கள் பைபிளிலுள்ள குற்றங்குறைகளை எடுத்துக் கூறிக் கண்டிக்கும் போது, நேற்றுவரை உடையாராகவும், நாடாராகவும், பிள்ளையாகவும் இருந்த இந்த நாட்டு கிருஸ்துவர்கள், ஞாயிற்றுக் கிழமையன்று மட்டுமே பைபிளைத் திறந்து பார்க்கும் நம்மவர்கள், அதில் ஒரு எழுத்தைக் கூடத் தவறு என்று சொல்லக் கூடாது, என்கிறார்களே, அது ஏன்?

மந்திரத்தையே தன் வயிற்றுப் பிழைப்பாக வைத்துக் கொண்டிருக்கும் பார்ப்பனப் புரோகிதன், சமயம் சந்தர்ப்பம், வருமானம் ஆகியவைகளுக்கு ஏற்ற மாதிரி மந்திரத்தைக் கூட்டியும், குறைத்தும், சரிப்படுத்திக் கொள்ளும்போது அவனைக் கண்டு சூடு போட்டுக் கொண்ட பண்டாரங்கள் மட்டும் ஒரு சுமை சுள்ளியை ஒடித்துப் போட்டு, ஒரு டின் நெய்யை உடைத்து ஊற்றி, வாய் வலிக்க, காது ஜவ் கிழிய, சமஸ்கிருத மந்திரத்தை மணிக்கணக்காய்ச் சொல்லி நம் பிராணனை வாங்குகிறார்களே, அது ஏன்?

இந்த மாதிரிப் பல சந்தேகங்கள் உங்களுக்கு அடிக்கடி எழலாம். நாடக மேடையில் கூட அப்படித்தான். இயற்கையான ராஜாவைவிட நாடக மேடை ராஜா அதிகமான டம்பத்தோடு புது நடை நடப்பார். பெண்ணாய்ப் பிறந்தவள் செய்யக் கூசுகின்ற “தளுக்கு” ‘மினுக்கு, எல்லாம் ஆணாய்ப் பிறந்த சேலையுடுத்தி நடிப்பவனிடம் சர்வ சாதாரணமாயிருக்கும்! அந்த மாதிரி குலுக்கிக் கொண்டு செல்லும் பெண்ணைக் கட்டாயம் ஊரார் கல்லால் அடிக்காமலிருக்க மாட்டார்கள்! ஆனாலும் நாடக மேடையில் தோன்றும் “பெண் நடிகனை” சும்மா விட்டுவிடுவார்கள்!

“கன்வர்ட்களின் உற்சாகம்” என்று இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அதாவது ஒரிஜினலை விட ட்யூப்ளிகேட்கள் அதிக வெளிச்சம் போடும்! அசலைவிட நகல் பிரமாதமாக மணி அடிக்கும்! (கார்பன் வைத்து எழுதிய கடுதாசி நகலைப் பார்த்திருப்பீர்களே, அதே போல!)

மயிலாப்பூரில் பேசிய பார்ப்பனத் தலைவர்கள் “சமஸ்கிருதத்தைப் பள்ளியில் கட்டாய பாடமாக வைக்க வேண்டும்” என்று மட்டுந்தான் கூறினார்கள்! அது கூட எதற்காகத் தெரியுமோ? முழத்துக்கு அளந்தால் ஜாணுக்காவது வராதா என்ற கருத்தினால்!

ஆனால் திருப்பதியில் பேசிய ஜஸ்டிஸ் ராஜமன்னார் (திராவிடர்) என்ன சொல்லி யிருக்கிறார் தெரியுமோ? சமஸ்கிருதத்தை போதனா மொழியாகவே வைக்க வேண்டும் என்கிறார்! (பிறகு வந்த செய்தியில் இதை மறுத்து விட்டார்! ஆனாலும் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டு மென்று சொல்கிறார்) அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தாய்மொழிகள் வழியாக சரித்திரம், கணக்கு, பூகோளம், விஞ்ஞானம் முதலிய பாடங்களைக் கற்பிக்க வேண்டு மென்கிறோமே! அது கூடாது; சமஸ்கிருதத்தின் வழியாகவே இப்பாடங்களைப் போதிக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

எவ்வளவு சமஸ்கிருத பக்தி! என்ன பார்ப்பன அன்பு! இவருக்கு பிரதம நீதிபதி வேலையைவிட புரோகிதர் வேலை கொடுத்திருந்தால் எவ்வளவோ பொருத்தமாயிருக்கும்! பார்ப்பனருக்குச் ‘சோப்’ போடும் முறைகளில் இதுவும் ஒன்று! தம் பதவி நிரந்தரமாகும் வரையில் இவர் அடிக்கடி இந்த மாதிரி ‘சோப்’ போட்டுக் கொண்டே யிருக்க வேண்டும்! இல்லாவிட்டால் ஓமந்தூராரைச் சொல்வது மாதிரி, ‘இந்தப் பேர்வழி இவ்வேலைக்குத் தகுதியல்ல,” என்று ஒரே வரியில் எழுதித் தள்ளி விடுவார்கள். நீதி இலாகாதான் கோட்ஸே இனத்தாரிடம் இருக்கிறதே...!

பலே பேஷ் ஜஸ்டிஸ் ராஜமன்னார்! தாய் எட்டடி தாண்டினால் குட்டி பத்தடி தாண்டி பாதாளத்திலாவது விழ வேண்டாமா? பார்ப்பான் கூடச் சொல்வதற்குப் பயப்படும் வார்த்தைகளைச் சொன்னீரே! உம் தைரியத்தை எப்படித்தான் புகழ்வது?

உம்மீது குற்றமில்லை! அது ஒரு நோய் ஸார்! நோய்! காலரா, ப்ளேக். . . மாதிரி ஒரு நோய்! பணக்காரனாயிருந்தாலும் சரி, படித்தவனாயிருந்தாலும் சரி, கால்ராவும் ப்ளேக்கும் விட்டு விடுமா, என்ன? புதுசுகள், பிஞ்சுகள், இமிடேஷன்கள், போலிகள், ட்யூப்ளி கேட்டுகள், கார்பன் காப்பிகள், நார்ப்பட்டுகள், கில்ட் நகைகள், போலி நாணயங்கள்... இவைகளுக்கெல்லாம் ஒரு தனி மினுமினுப்பு! பிரத்யேகமான பகட்டு! இது தானே உலகம்! காரியத்தில் செய்யும் கர்ம வீரர்களை உலகம் எங்கே மதிக்கிறது? வாய்ச் சவடால் அடிக்கும் தகர டப்பாக்களைத்தானே தாங்குகிறார்கள்! அது ஒரு நோய், ஸார்! நோய்! யார் மீதும் குற்றமில்லை.

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It