‘‘பெரம்பலூர் வழக்கினை மூடி மறைத்து அதிமுக எம்எல்ஏவைக் காப்பாற்றி விடலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்துவிடக் கூடாது" என்று திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபகாலமாகத்  தமிழகத்தில் இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள்  மீதான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கவலைக்குரியதாகவும், அதற்கு ஆளும் கட்சியே உடந்தையாக இருப்பது வெட்கக்கேடாகவும்  உள்ளது.  பெண்ணுரிமையைப் பேணிக் காக்க வேண்டிய  அரசும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டிய காவல்துறையும் குற்றவாளிகளைப் பாதுகாப்பதிலேயே முழுக்கவனம் செலுத்துவது வெட்கக்கேடான செயல்.

ஆளும் கட்சியான அதிமுகவின் முக்கியப் புள்ளிகள்  தொடர்புடைய பொள்ளாச்சி பாலியல்  வன்கொடுமையை மூடிமறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எடப்பாடி அரசிற்கு அடுத்த சிக்கலாக உருவெடுத்துள்ளது பெரம்பலூரில் நடைபெற்றுள்ள பாலியல் சம்பவம்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில குடும்பப் பெண்களையும் கல்லூரி மாணவிகளையும் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக  ஆசை வார்த்தைகள் கூறி, அ.தி.மு.க. எம்எல்ஏ , எம்எல்ஏ வின் கூட்டாளியான  போலி பத்திரிகையாளர் மற்றும் சிலர் சேர்ந்து  கூட்டுப் பாலியல் தொந்தரவு செய்ததாகப் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் வழக்கறிஞர் அருள் என்பவருடன் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அந்த ஆடியோ உரையாடலின் ஒரு பகுதியில்

"அங்க 2, 3 பேர் இருந்தாங்க சார். இன்டர்வியூ நடக்குற மாதிரி தெரியல. பெரிய முதலாளி யாராவது வந்திருப்பாங்களோனு நாங்க நினைச்சோம். அங்க ரொம்ப வல்கரா பேசுனாங்க. ரொம்ப ஒரு மாதிரி தப்பாவெல்லாம் நடந்துக்கிட்டாங்க. வாக்குவாதம் நடக்கும்போதே வீடியோவா வேற ஷூட் பண்ணீட்டாங்க. இதுக்கு ஒத்துழைக்கலனா இந்த வீடியோவ நெட்ல போட்டிருவோம்னு அப்டிஇப்டின்னு சொன்னாங்க.

என்னா பண்ணனும்னே எனக்கு தெரியல. அப்புறம் என்னன்னா மறுபடியும் கால் பண்ணி, அதிமுக எம்எல்ஏ பெயரைச் சொல்லி நீ அவங்ககிட்ட போகணும், பாக்கணும்னு சொல்லிட்டே இருந்தாங்க. அவுங்கக்கிட்ட நீ வரணும் என 2, 3 தடவை கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க. வர முடியாதுனு சொன்னா என்ன பண்ணுவீங்கனு கேட்டப்போ, உன்னுடைய வீடியோ எல்லாமே இருக்கு. அத கண்டிப்பா நெட்ல ரிலீஸ் பண்ணப்போறோம் அப்புடீன்ற மாதிரி சொன்னாங்க. அப்புறம் மறுபடியும் அந்த வீடியோவ மறுபடியும் எனக்கே அனுப்பி  நீ வா நீ வான்னு கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க..."

இந்தப் பாலியல் தொந்தரவு குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கொடுத்த புகார் மனுவைக்  காவல்துறை அதிகாரிகள்  வாங்க மறுத்ததோடு இதில் தொடர்புடைய ஆளும் கட்சி எம்எல்ஏ விடமே  அந்தப் பெண்ணை அழைத்து சென்று பேரம் பேசி மிரட்டியதாகவும் வழக்கறிஞர் அருள் கூறுகிறார். இதனால் இவ்விவகாரத்தை முறையாக விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கடும் கண்டனங்களினால் பாதிக்கப்பட்ட பெண்களின் புகாரைப் பெற்றுக் கொண்டு பெயரளவில் வழக்குப்பதிவு செய்த காவல் துறை,  குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்ற வழக்கறிஞர். அருளுக்கெதிராக அதிமுக வழக்கறிஞர்கள் மற்றும் மகளிரணியினர் கொடுத்த புகார் மனு மீது  வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் காவல் துறை வழக்கறிஞர்அருளை வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்தது.

இச்சம்பவம் குறித்துத் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பொள்ளாச்சி விவகாரம் போலவே இந்தப் பாலியல் புகாரை வெளியே சொல்ல முடியாமல் எப்படிப் பெண்கள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அந்தப் பெண்ணின் பேட்டி உணர்த்துகிறது. ஆனால், அந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புகாரையும் கூட மூடி மறைக்கும் விதத்தில்தான் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறதே தவிர -உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கிடவோ அல்லது பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வைப் போக்கிடவோ முன்வரவில்லை” என்று விமர்சித்துள்ளார்.

மேலும் பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசின் தோல்வி இப்போது பெரம்பலூரிலும்  எதிரொலித்திருக்கிறது. பெரம்பலூர் பாலியல் புகார்களைத் தீவிரமாக விசாரித்து, அப்பாவிப் பெண்களிடம் பாலியல் வன்முறை செய்தவர்கள் அனைவரையும் தயவு தாட்சண்யமின்றி கைது செய்திட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடும் ஸ்டாலின், மே 23 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது பொள்ளாச்சி வழக்கு மற்றும் பெரம்பலூர் வழக்கு போன்றவற்றை நீர்த்துப் போக வைக்க அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள், அதற்குத் துணை போன அதிகாரிகள் ஆகியோர் பற்றித் தனி விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த இரு வழக்கிலும் உள்ள உண்மைக் குற்றவாளிகள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும், யாருக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார்.

இந்த நிலையில் பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு பல்வேறு கட்சியினரும் பொது நல அமைப்புகளும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.

பெரம்பலூர் மட்டுமன்றி தமிழகம் முழுவதும்  கனலாய்த் தகித்துக் கொண்டிருக்கும் இந்த கூட்டுப் பாலியல் வன்புணர்வுச் சம்பவம் குறித்து  எடப்பாடி அரசும் காவல்துறையும்  ஒன்றுமே தெரியாதது போல் நடிப்பது ஆளும் கட்சி எம்எல்ஏ உள்ளிட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கே என பொதுமக்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

Pin It