காலம், காலமாக ஆண்களுக்கு கட்டுப்பட்டு அடிமை போல வாழ்ந்த, மொத்த எண்ணிக்கையில் சரிபாதி உள்ள பெண் இனம், இன்று யாருக்கும் அடங்காத காட்டாற்று வெள்ளம் போன்று தடைகளை உடைத்து முன்னேறியுள்ளது.

simbu with anirudhஆணால் கற்பனை செய்ய முடியாத, சமன் செய்ய இயலாத ஒரு இடத்திற்கு பெண் வந்து விட்டாள்.. அவளுக்குக் கிடைத்த கல்வி, பொருளாதார சுதந்திரம் முழு தன்னம்பிக்கையையும், சார்ந்து வாழும் நிலைமையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் ஆற்றலையும் அவளுக்குக் கொடுத்துள்ளது.

காதல் தோல்வி, மண முறிவு , ஆணின் துரோகம் இவற்றால் வீழ்ந்து கிடந்த பெண்கள் இது அனைத்தும் என் தவறு அல்ல... நான் ஏன் வெட்கி குனிய வேண்டும்... என்று அடுத்த வாழ்விற்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டுள்ளனர்.

எப்போதெல்லாம் ஒரு பெண்ணை மட்டுப்படுத்த வேண்டுமோ, அவளை இழி நிலைக்குத் தள்ள வேண்டுமோ அப்போதெல்லாம் பிற்போக்குவாதிகள் கையில் எடுக்கும் ஆயுதம் பெண்ணின் ஒழுக்கமும், கற்பும்...... எது பெண்ணை மண்ணைக் கவ்வச் செய்யுமோ, எது அவளை ஒன்றும் இல்லாமல் ஆக்குமோ, அதுவே அவளின் ஒழுக்கம் குறித்த பேச்சுக்கள்.... அதுவே, பெண்ணை வெற்றி கொள்ள இயலாத ஆணின் ஆயுதம்...

கற்பு விடயத்தில் ஒவ்வொரு பெண்ணும் உணர்ச்சி சார்ந்தே இயங்குவாள்.... ஏனெலில் அவள் மரபணு அவளுக்கு கற்பிப்பது , கற்பு என்பது புனிதமானது... ஆணுக்கோ, இந்த சமூகம் கற்றுக் கொடுத்த பெண் பற்றிய மதிப்பீடுகள், மரபணுக்களில் பொதிந்து உள்ள ஆணாதிக்க உணர்வு இவற்றிக்கும், தான் வாழும் சூழலில் பெண்ணின் மிகப் பெரும் வளர்ச்சிக்கும் இடையிலான இடைவெளியை பெண் மீதான வன்மத்தின் மூலமே வெளிப்படுத்துவான். இதை , உளவியல் ரீதியாகவே புரிந்து கொள்ள முயல வேண்டும்.

தன்னை பெண்ணியவாதியாக அடையாளப் படுத்திக் கொள்ளும் பெண்கள் இன்னும் ஒரு படி ஏறி, தன்னைத் தானே வர்ணித்துக் கொள்ளும் அவலம் தான் காண முடிகிறது... இவர்களும் பெண்ணை, அவள் அங்கங்களை வர்ணிப்பதன் மூலம் பெண்ணை போகப் பொருளாகவே நினைக்கிறார்கள் என புரிந்து கொள்ள முடிகிறது... இது தான் தற்போதைய பெண்ணியவாதிகள் சிலரின் அவலத்தின் உச்சம்....

சமூகமும், படைப்புகளும் வேறு வேறு அல்ல... சமூகத்தின் வெளிப்பாடு தான் படைப்புகள்.... அது போலவே, படைப்புகளில் இருந்து சமூகம் பெற்றுக் கொண்டதும் அதிகம்....

ஒழுக்கமான பெண்கள் டைனோசர் காலத்திலேயே போய் விட்டார்கள் என்ற சினிமா வசனத்திற்கு கிடைத்த ஆதரவு, பெண் பற்றிய ஆணின் மனோ நிலை இல்லை... அது அவனின் ஆற்றாமையின் வெளிப்பாடு. Pub-க்குச் செல்லும் பெண்களையும், பாருக்குச் செல்லும் பெண்களையும் அகலத் திறந்து பார்க்கும் சமூகம், சமூகத்தின் மிகச் சிறிய அளவிலான பெண்கள் செய்யும் தவறுகளை முழு சமூகத்திற்கும் பொருத்திப் பார்த்து பெண் சுதந்திரம் தான் இதற்கு காரணம் என முனங்குவது அவர்களின் இயலாமையால் தான்....

எத்தனையோ பெண்கள் படித்தவர்களாக, பண்புள்ளவர்களாக, குடும்பத்தின் பொருளாதார சுமையை சுமப்பவர்களாக இருக்க, அதை ஏற்றுக் கொள்ளும் தைரியம் ஆண்களுக்கு இல்லை...

பெண்ணை கொச்சைப்படுத்தி எழுதிய சிம்பு, அனிருத் பாடலுக்கு எதிர்ப்புகள் எங்கும் கிளம்ப, சமூக வலைத்தளங்களில் இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கும் ஆண்களையும் பார்க்க முடிகிறது.... சிம்பு, அனிருத் இப்போதுள்ள இளைஞர்களின் குறியீடு. இனி, இது போன்ற சிம்புகள் புறப்படுவார்கள்..... தாங்கள் பெண்கள் மீது கொண்ட அச்சத்தை , ஆதங்கத்தை அடிடா அவள என்றும் , கேடு கேட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியும் தான் வெளிப்படுத்துவார்கள்.....

இவை அனைத்தையும் கடந்தே, புறக்கணித்தே, பெண் சமூகம் முன்னேறி வர வேண்டும்.... இது ஒரு புலம்பல், மனப் பிறழ்வு, ஆற்றாமை அவ்வளவே...

- கவுதமி தமிழரசன்