மழை பெய்ய வேண்டிச் சிறப்பு யாகம் நடத்த அனைத்து இந்து அறநிலையத்துறை சார்ந்த கோவில்களுக்கும் அரசு முதன்மைச் செயலாளரும் அறநிலையத்துறை ஆணையாளருமான  பணீந்திர ரெட்டி  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி பர்ஜன்ய சாந்தி வருண ஜெபம் , வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல், அருள்மிகு  நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்துவரை நீர் நிரப்பி வழிபாடு செய்தல், சுந்தரமூர்த்தி நாயனாரின் ஏழாம் திருமுறை  ஓதுதல், திருஞானசம்பந்தரின் 12ஆம் திருமுறையை மேகரா குறிஞ்சி என்ற பண்ணில் பாடி வேண்டுதல், நாதசுரம், வயலின், புல்லாங்குழல், வீணை வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி, ஆனந்தபைரவி, ரூபகல்யாணி போன்ற ராகங்களைக்கொண்டு வாசித்து வழிபாடு செய்தல் என்று பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்க உத்தரவு இட்டு உள்ளது.மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் நல்ல காரியம் தானே, நடக்கட்டும் என்று தோன்றும்.

brahmin yaagaதனிமனிதர்கள், தனி அமைப்புகள் தாங்கள் விரும்பும் வழிகளில் செயல்பட அவர்களுக்கு உரிமை உண்டு என்றால் நாம் அதில் தலையிடப்போவது இல்லை.. ஆனால் ஒரு மதச்சார்பற்ற அரசு, இம்மாதிரியான மூடநம்பிக்கைகளை  ஊக்குவிப்பது சரிதானா என்ற கேள்வி எழுகிறது. அத்துடன் யாகம் நடத்துவது எங்கள் உரிமை என்றும் சிலர் சொல்லக்கூடும் அது அவர்கள் உரிமையானால் அதனைக் கேள்விகேட்கும் உரிமை நமக்குண்டு. .  " The fundamental duty of a citizen is to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform." என்பது அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமை.  "அறிவியல் பூர்வமான உணர்வுகளை வளர்ப்பதும், கேள்விகேட்கும் உணர்வுகளையும், சீர்திருத்தங்களையும் வளர்ப்பதும் ஒவ்வொரு  இந்தியக் குடிமகனின் கடமையாகும் என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது.

மேலும் இப்படிப்பட்ட ஆணைகளை இடுவதற்கு அந்த ஆணையருக்கு அதிகாரமே இல்லை. அவருக்கான அதிகாரமெல்லாம் கோவில்களின் கணக்கு வழக்குகள் சரியாக  இருக்கிறதா, சொத்துகள் எல்லாம் முறையாகப் பராமரிக்கப் படுகிறதா, கோவில் சிலைகளும், நகைகளும்  எல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று கண்காணிக்கிற, கணக்கு வழக்குகளைப் பராமரிக்கிற  வேலைதான் அவருடையதே தவிர, எந்த  நேரத்தில் என்ன பூசை செய்யவேண்டும், - எப்படி செய்ய வேண்டும் - யாரைக் கொண்டு செய்யவேண்டும்  என்று சொல்வது அல்ல. மூடநம்பிக்கைகளை ஒழிப்பதுதான் ஒரு நல்ல மக்கள் நல அரசின் கடமை. அதை விட்டுவிட்டு மூடநம்பிக்கைகளை வளர்ப்பது அல்ல.

இதை இப்போது விட்டுவிட்டால், "அவன் அதைச்செய்தால் மழை  வராது. இவன் இதைச் செய்தால் மழை வராது " என்று எவனோ எதிலோ சொன்னதையெல்லாம் நம்பி நடவடிக்கை எடுக்கிற அரசாக இது மாறிவிடும். " பதினெட்டுக் கன்னிப்பெண்கள் நிர்வாணமாக ஊரைச் சுற்றிவந்தால் மழை வரும்" என்று அந்த சாஸ்திரி சொன்னான், இந்த நம்பூதிரி சொன்னான் என்று நடைமுறைப் படுத்த மாட்டார்கள் என்று யார் உத்திரவாதம் அளிப்பது?  முன்பொருசமயம் வயலின் கலைஞர் குன்னக்குடி வைததியநாதன் கோடை வெயிலில் வறண்டுபோன குளத்தில் இறங்கி  மழையை வரவைக்க  அமிர்த வர்ஷினி ராகங்களை இசைக்கிறேன் என்றார்.. அவர்  கொண்டுபோன கூஜாத்   தண்ணீரைக் குடித்துவிட்டுத் திரும்பினாரே தவிர மழையை வரவைக்க முடியவில்லை.

 மழை எப்படிப் பெய்கிறது என்று மூன்றாம் வகுப்புக்கு குழந்தையைக் கேட்டாலும்,." ஏரி குளங்கள், நீர்நிலைகள், ஆறுகள் கடலில் உள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேலே சென்று கருமேகங்களாக உருவெடுத்து குளிர் காற்று  பட்டதும் மழையாகப் பொழிகிறது"  என்று சொல்லும்.   கருமேகங்கள் மீது குளிர் காற்று பட, மரங்களை வளர்க்கவேண்டும்., வனங்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் இந்த அரசு, வனங்களை அழித்து யானைகளின் வழித்தடங்களில் கார்ப்பரேட் கோவில்களை எழுப்பிய ஜக்கிகளுக்கான அரசாக அல்லவா இருக்கிறது. போதாக்குறைக்கு, வனங்களையும், பல்லாயிரம் மரங்களையும் அழித்து 8வழிச் சாலைகள் அமைத்து அதில் கல்லா கட்ட நினைக்கும் சுயநலப் பேய்களின் ஆட்சியல்லவா நடக்கிறது. அணைகளில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாக்கூல் அட்டைகளைப் போட்டுத் தடுக்கும் அறிவியல் அறிஞர்களை அமைச்சர்களாகக் கொண்ட அரசல்லவா இது.  

 அண்ணாவின் பெயரால் கட்சியை வைத்துக்கொண்டு பகுத்தறிவுக்குக் கிஞ்சிற்றும் தொடர்பில்லாத ஆட்சி நடைபெற்றுக்கொண்டு உள்ளது. பல்லாண்டுகள் பல்வேறு சீர்திருத்தச் செம்மல்கள் போராடி, குழந்தைத் திருமணம்,, உடன்கட்டை ஏறுதல், பொட்டுக்கட்டுதல் போன்ற மூடநம்பிக்கைகளை ஒழித்தனர். அந்த மூடநம்பிக்கைகள் எல்லாம் மீண்டும் அரங்கேறி விடுமோ என்கிற அச்சம் மேலோங்குகிறது. நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலம் இது.,  

எது எப்படியானாலும் அரசு ஆணையிட்டு விட்டது. அதை அனைத்துக் கோவில்களும் நிறைவேற்றிவிட்டன. அவர்கள் நம்பிக்கை உண்மையென்றால் இந்நேரம் தமிழகமே மழை வெள்ளத்தால் மூழ்கியிருக்க வேண்டாமா? நனைந்திருக்கவாவது  வேண்டாமா? கடந்தவாரம் ஆங்காங்கே பெய்த மழை கூட இப்போது இல்லை. அப்படியானால் கோவில்களில் அரசு உத்தரவை மதித்து யாகம் நடக்கவில்லையா? அல்லது நடத்திய யாகங்களுக்கு  மழையைக் கொண்டுவரும் சக்தியில்லையா?  அல்லது சுந்தரமூர்த்தி நாயனாரின் ஏழாம்  திருமறையும் , திருஞான சம்பந்தரின் 12ஆம் திருமுறையும் தமிழில் இருப்பதால் அந்த வாயு பகவானுக்கும் , வருண பகவானாவுக்கும் புரியவில்லையா? அவையெல்லாம் தேவ பாஷையில் சொன்னால்தான் புரியுமா? நீசபாஷையில் பாடியதால் தெரியவில்லையா?

Pin It