1969 ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் தலைவர் கலைஞர் அவர்கள், அண்ணாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மாநில சுயாட்சி பற்றி ஆய்வு செய்து அறிக்கை தருவதற்காக ராஜமன்னார் குழுவை நியமித்தார்.
1974 ஏப்ரல் 20 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அந்த ராஜமன்னார் குழுவின் அறிக்கையை அரசு முன்வைத்து ஏற்றது ! அந்த நிகழ்வுதான் இந்தியாவில் உள்ள மற்ற எல்லா மாநிலங்களுக்குமான முதன்மை வழிகாட்டியாக இருந்தது !
இப்போதும் மீண்டும் அதே பாதையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களின் தலைவர்கள் எல்லாரையும் ஒன்று கூட்டி, தொகுதி மறு சீரமைப்புத் திட்டத்தை இன்னும் 25 ஆண்டுகளுக்குத் தள்ளி வைக்குமாறு ஒரு தீர்மானத்தை சென்னையில் இன்று தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது !
இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஏழு மாநிலங்களைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்! மேற்கு வங்கம் முதல்வர், தன் ஆதரவைத் தொலைபேசியில் தெரிவித்து இருக்கிறார். ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னுடைய ஆதரவையும் இப்போது தெரிவித்துள்ளார்!
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு திட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஒழுங்காகப் பின்பற்றிய மாநிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்பதை இன்றைய கூட்டம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது !
தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் இது குறித்துத் தெளிவான செய்தி ஒன்றைக் கூறியிருக்கிறார். மறு சீரமைப்பு என்பது தொகுதிகளோடு மட்டும் தொடர்புடையது அன்று, இது மாநில சுயாட்சியோடு தொடர்புடையது என்பதே அவர் கருத்து! அது நூற்றுக்கு நூறு சரியானது !
பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில், மாநிலங்கள் வெறும் நிர்வாக இயந்திரத்தின் ஒரு பகுதியாக மட்டும் இருந்துவிட முடியாது! ஒரு மாநிலத்தில் பல மாவட்டங்கள் இருப்பது போல, இந்தியாவில் மாநிலங்களைக் கருத வாய்ப்பில்லை!
எனவே தொகுதி மறு சீரமைப்பு என்பது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான - ஜனநாயக உரிமைகளுக்கு மாறான - ஒரு திட்டமாகவே அமையும்! அதனைச் சரியான நேரத்தில், சரியானவர்களை ஒன்று கூட்டி இந்தியாவிற்கும், இந்திய ஒன்றிய அரசுக்கும் தெரிவித்திருக்கிற தமிழ்நாடு அரசு பாராட்டிற்குரியது!
இன்று சென்னையில் நடந்தது, வெறும் கூட்டம் அன்று, ஒரு வரலாற்றுப் பதிவு!
- சுப.வீரபாண்டியன்