பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரை வைத்து இணை அரசாங்கம் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முட்டுக்கட்டை போடும் வேலையை வாடிக்கையாக வைத்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு. தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட நாள் முதல் அவர் அத்தகைய மோதல் போக்கைத்தான் கடைபிடித்து வருகிறார்.

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 14 சட்ட மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்துள்ள நிலையில், “பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த” தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க, குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய ஒன்றிய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தி” அரசின் தனித் தீர்மானத்தை 10.04.2023 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றினார்.stalin pinarayi vijayan arvind and mamtaஅதன் எதிரொலியாக அன்றைய தினம் அவை அலுவல் முடிவதற்குள் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அதிரடியால் சென்னை ஆளுநர் மாளிகை மட்டுமின்றித் தெலுங்கானாவும் அதிர்ந்தது. 10 மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை அன்றைய தினம் 3 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார். 2 மசோதாக்களைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பியதுடன் 2 மசோதாக்களை மாநில அரசின் விளக்கம் கேட்டுத் திருப்பி அனுப்பினார்.

ஆளுநர்களைச் செயல்பட வைக்கும் ஆளுமையாக விளங்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு கேட்டும், இதே போன்ற மசோதாக்களை தங்கள் மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றுமாறு கேட்டும் பா.ஜ.க அல்லாத கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களுக்கு 11.04.2023 அன்று கடிதம் எழுதினார்.

அக்கடிதத்தில் “நமது நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் படிப்படியாக மறைந்து வருவதைக் காண்கிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர், ஆளுநருடைய கடமைகள் குறித்தும், ஒன்றிய-மாநில அரசுகளின் கடமைகளும் பொறுப்புகளும் வரையறுக்கப்பட்டுள்ள போதிலும் அவை மதிக்கப்படுவதில்லை. இதனால் மாநில அரசின் செயல்பாடுகள் பெரும் பாதிப்படைகிறது. மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்படும் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் மாநில ஆளுநர்கள் காலவரையறை இன்றி நிலுவையில் வைத்திருக்கின்றனர். இதனால் அந்தந்த மாநில செயல்பாடுகள் குறிப்பிட்ட இடங்களில் முடங்கிப் போய் இருக்கிறது. எனவே அந்தந்த மாநிலங்களில் சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்குக் காலநிர்ணயம் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தித் தீர்மானம் இயற்றுவது ஏற்புடையதாக இருக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு வரவேற்பு தெரிவித்து, பதில் கடிதம் எழுதிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இதே போன்ற தீர்மானம் டெல்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்று அதில் தெரிவித்திருந்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநருக்கு எதிரான முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்துள்ளார். மாநில அரசின் செயல்பாட்டை முடக்கும் வகையில் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு ஆளுநர்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். ஆளுநருக்கு எதிராகக் கேரள சட்டமன்றத்தில் இதே போன்ற தீர்மானத்தை நிறைவேற்ற பரீசலிப்போம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய பதில் கடிதத்தில் கூறியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசி வாயிலாக முதல்வர் ஸ்டாலினுடன் பேசி ஆதரவு தெரிவித்துள்ளார்.

“மாநில முதல்வரின் தலைமையில் இயங்கும் மாநில அமைச்சரவையின் பரிந்துரையின்றி ஆளுநர் எந்த முடிவையும் எடுக்க இயலாது” என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 163 கூறுகிறது. “ஆளுநர் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினால் அதை மீண்டும் சட்டமன்றம் நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தே ஆக வேண்டும்” என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 200 கூறுகிறது.

“மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை” என்ற அய்யன் திருவள்ளுவரின் வரிகளுக்கேற்ப இயற்கையான நுட்ப அறிவோடு நூலறிவையும் ஒருங்கே கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன் எந்த நுட்பமான சூழ்ச்சிகளும் பலிக்காது.

டெல்லி, கேரள முதல்வர்களைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பா.ஜ.க அல்லாத கட்சிகளைச் சேர்ந்த அனைத்து முதல்வர்களும் அரசியலமைப்புச் சட்டத்தை அவமதித்து ஒன்றிய ஆட்சியாளர்களின் முகவர்களைப் போல செயல்படும் ஆளுநர்களின் அத்துமீறலைத் தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பின்னால் அணி திரள்கிறார்கள், திரள்வார்கள். மக்களாட்சியின் மாண்பினைக் காக்கும் இந்தப் போரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அணி வெற்றி பெறுவது உறுதி.

வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Pin It