திமுகவின் இளைஞரணி செயலாளராக ஸ்டாலின் அவர்களது மகன் உதயநிதி அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார். தமிழகம் முழுக்க திமுக விசுவாசிகளால் இந்த அரிய அரசியல் நிகழ்வை வாழ்த்தி கட் அவுட்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் பெரும்பாலானவற்றில் ஸ்டாலின் அவர்கள் உதயநிதியை உச்சி முகர்ந்து முத்தமிடும் படம் தவறாமல் இடம் பெற்றிருந்தது. இதே போன்றதொரு படம் ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றபோது தமிழகம் முழுக்க வைக்கப்பட்டிருந்தது. அதில் கலைஞர் அவர்கள் ஸ்டாலினை உச்சி முகர்ந்து முத்தமிடுவது போன்று இருந்தது. தற்போது இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகின்றது, அது ‘ஆசை வெட்கம் அறியாது’ என்பது.

 stalin and udhayanidhiவாரிசு அரசியலால் தரம் தாழ்ந்து போயிருக்கும் இந்திய அரசியலில் இது ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டிய நிகழ்வு இல்லை என்றாலும், இந்திய ஜனநாயகத்தைப் பிடித்த தொழுநோயாக மாறியிருக்கும் வாரிசு அரசியலை ஜனநாயகக் கண்ணோட்டத்தில் இருந்து அம்பலப்படுத்துவது நம்முடைய கடமையாகும்.

  ஒரு இலக்கியவாதியின் மகன் இலக்கியவாதியாய் வருவதற்கும், விளையாட்டு வீரனின் மகன் விளையாட்டு வீரனாய் வருவதற்கும், சினிமாக் கலைஞனின் மகன் சினிமாக் கலைஞனாய் வருவதற்கும், அதே போல அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதியாய் வருவதற்கும் வித்தியாசம் உள்ளது. முன்னதில் திறமை இல்லை என்றால், அவர்கள் தானாகவே தோற்று, காணாமல் போய் விடுவார்கள். மேலும், அதனால் பெரிதாக எந்த ஒரு சமூக சீர்குலைவும் ஏற்பட்டுவிடாது. ஆனால் அரசியலில் அப்படியல்ல. ஓர் அரசியல்வாதிக்கு மகனாய்ப் பிறந்த ஒரே காரணத்திற்காக அவனை அரசியலில் ஈடுபடுத்துவதும், கட்சியின் முக்கிய பொறுப்புகளைக் கொடுப்பதும், தேர்தலில் நிறுத்தி பல நூறு கோடிகளை செலவு செய்து வெற்றி பெற வைப்பதும் மிகப் பெரிய சமூக சீர்குலைவை ஏற்படுத்தும். அரசியல் கட்சிகள் என்பவை கோடான‌ கோடி மக்களின் வாழ்வோடு தொடர்புடைய நிறுவனங்கள் ஆகும். அவை அது போன்ற தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடுவது அயோக்கியத்தனமானதாகும்.

  7 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்தில் 2 கோடி தொண்டர்களைக் கொண்ட ஒரு கட்சியில் தன் மகனுக்கு மட்டுமே கட்சியின் முக்கிய பொறுப்புகளை ஏற்று வழிநடத்தும் தகுதியும் திறமையும் உள்ளது என நினைப்பது எந்த வகையான அரசியல் அறம்? ஒரு தொழிற் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக தன்னுடைய வாரிசை நியமிப்பதைப் போன்று கட்சியில் தனக்குப் பின்னால் தன்னுடைய மகனை நியமித்துக் கொள்கின்றார்கள். ஊழலிலும் அதிகார முறைகேடுகளிலும் ஈடுபட்டு பெரும் சொத்துடைய நிறுவனங்களாக மாறியிருக்கும் இன்றைய கார்ப்ரேட் கட்சிகள் அதை முழுவதுமாக அனுபவிப்பதற்கான பாத்தியதையை தன்னுடைய வாரிகளுக்கு கைமாற்றிக் கொடுக்க விரும்புகின்றன. ஆனால் இதை அந்தக் கட்சிகளில் உள்ள தொண்டர்கள் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்கின்றார்கள்.

 இதற்குக் காரணம் இன்று கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளில் தலைமைக்கும் தொண்டனுக்குமான உறவு என்பது ஆண்டான் - அடிமை உறவைப் போல்தான் உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளில் தலைமையின் முடிவை ஒரு சாமானிய தொண்டனால் கேள்வி கேட்க முடியும். ஏன் அதை மாற்ற வைக்கக் கூட முடியும். ஆனால் கார்ப்ரேட் கட்சிகளில் அப்படி கேள்வி கேட்டால் இருந்த இடம் தெரியாமல் செய்து விடுவார்கள். அரசியல் என்பதை பொறுக்கித் தின்பதற்கான இடமாக பார்ப்பவர்களே பெரும்பாலும் கார்ப்ரேட் கட்சிகளை நோக்கிச் செல்கின்றார்கள். அது போன்றவர்களுக்கு தான் சார்ந்த கட்சியில் பொறுக்கித் தின்பதற்கான ஓர் இடம் கிடைத்தால் போதும் என்ற அளவிலேயே அவர்களது சிந்தனை வரம்பிடப்பட்டிருக்கும். அது போன்றவர்கள் நிறைந்திருக்கும் கட்சியில் தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதை சிரமேற்கொண்டு நடைமுறைப்படுத்துவது அடிமைகளின் கடமையாகும்.

 அப்படித்தான் இன்று திமுக இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டதை நாம் பார்க்க வேண்டும். கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எந்தவித எதிர்ப்பும் இன்றி அவரால் மிக எளிதாக அந்தப் பதவியை பிடிக்க முடிந்திருக்கின்றது. காரணம் அதை குற்றம் சொல்லும் தகுதி அநேகமாக தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு கார்ப்ரேட் கட்சிக்குமே இல்லை என்பதால்தான். ஊரை அடித்து உலையில் போட்டு பொறுக்கித் தின்பதற்கான பெரும் வணிகமாக மாறியிருக்கும் அரசியலில் தவிர்க்க முடியாத விளைவுதான் வாரிசு அரசியல் என்பது.

  சித்தாந்தம் எல்லாம் செல்லரித்துப் போய் பிழைப்புவாதம் மட்டுமே எஞ்சியிருக்கும் காலத்தில் உதயநிதி இல்லை, அரவது மகன் இன்பநிதி வந்தாலும், அதை வரவேற்கும் நிலைதான் இருக்கும். திமுக வேண்டுமானால் ஸ்டாலின் அவர்களின் குடும்பச் சொத்தாக இருக்கலாம். ஆனால் தமிழகம் ஒன்றும் கருணாநிதி குடும்பத்தின் சொத்து கிடையாது என்பதை ஸ்டாலின் கூடிய சீக்கிரம் உணர்ந்து கொள்வார்.

 நமக்கு உதயநிதி பிரச்சினையை விட இப்போது பெரிய பிரச்சினை என்னவென்றால் எவனாவது முற்போக்கு ‘வியாதி’, ‘வாழும் பெரியாரே’ என உதயநிதிக்குப் பட்டம் கொடுத்து விடுவானோ என்பதுதான். கலைஞரின் முகத்தில் பெரியாரைப் பார்த்து பிரமித்தவர்கள், ஸ்டாலின் முகத்தில் பெரியாரைப் பார்த்து கசிந்து உருகியவர்கள், தங்கள் சட்டியில் மிச்சம் இருக்கும் கொள்கையை உதயநிதியிடம் விற்று காசாக்க காத்திருக்கின்றார்கள். திமுகவின் கூலிப்படை முற்போக்குவாதிகளின் பட்டாளம் மிக நீளமானது. அவர்கள் அம்பேத்கரைப் பேசுவார்கள், பெரியாரைப் பேசுவார்கள், ஏன் சில சமயம் கூட்டம் அதிகமாக இருந்தால் மார்க்சைக் கூடப் பேசுவார்கள். அவர்களிடம் சென்று 'இதை எல்லாம் தெரிந்துகொண்டு நாங்கள் என்ன செய்வது தோழரே' என்று கேட்டால், 'திமுகவிற்கு ஓட்டு போடுங்கள்' என்று காதுகளில் வந்து கிசுகிசுப்பார்கள். 'இந்த மானங்கெட்ட பொழப்பு பொழக்கிறதுக்கு ஏண்டா அம்பேத்கரையும், பெரியாரையும் பேசுறீங்க' என்று யாரும் கேட்டுவிட மாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

 அதனால் தன்மானமும், சுயமரியதையும் உள்ள திமுக தொண்டர்களுக்கும், அதன் கூலிப்படை முற்போக்குவாதிகளுக்கும், திமுகவின் பினாமியாக செயல்படும் போலி டுபாக்கூர் முற்போக்கு இயக்கங்களுக்கும், நாம் வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் சொல்லிக் கொண்டு, ஓர் ஓரமாக காறித் துப்பிவிட்டு வேலையைப் பார்க்கக் கிளம்புவோம். 

- செ.கார்கி
Pin It