ஆர்.எஸ்.எஸ்.அழைப்பை ஏற்று, நாக்பூரில் நடந்த அதன் பயிற்சி முகாமின் இறுதி நாளில், அதன் விருந்தினராகக் கலந்து கொண்டார் பிரணாப் முகர்ஜி.

அவர் ஒரு காங்கிரஸ்காரர். முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர். அனைத்து இந்திய மக்களுக்கும் சாதி, மத வேறுபாடற்ற தலைவராக இருந்தவர் அவர்.

இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அவர் உண்மையில் அந்த அமைப்பின் கொள்கைகளைத் தாங்கிய குடியரசுத் தலைவராகவே இருந்துள்ளார் என்பது தெரிகிறது.

“பாரத மாதாவின் தவப்புதல்வரான ஹெட்கேவருக்கு மரியாதை செலுத்துவதற்காக இங்கு வந்துள்ளேன்” - ஆர்.எஸ்.எஸ். தலைமையக வரவேற்புப் புத்தகத்தில் இப்படி எழுதி இருக்கிறார் பிரணாப்.

பூனை வெளியே வந்து விட்டது.

“சகிப்புத் தன்மைதான் நமது பலம். நாட்டின் பன்முகத் தன்மையை நாம் கொண்டாட வேண்டும்,” என்று பிரணாப் அங்கே பேசியிருக்கிறார்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்று ‘ஏக இந்தியா’ கொள்கையைக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பன்முகத் தன்மையைப் பேசுகிறார் பிரணாப் முகர்ஜி என்றால், அதை ஏற்றுக் கொள்ளச் சற்றுக் கடினமாகத்தான் இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் பசுக் காப்பாளர்களால் அடக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும், கொல்லப்படுவதும் ஒருபுறம் நடக்கும்.

மறுபுறம் முற்போக்கு எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்.

சிறுபான்மை மக்களின் உடமைகள் தாக்கப்படுவதும், பெண்கள் பாலியல் வன்முறைகளுக்குப் பலியாவதும் நடந்து கொண்டு இருக்கும்!

இவைகளுக்குப் பின்புலமாக ஆர்.எஸ்.எஸ். இருக்கும்.ஆனால் சகிப்புத்தன்மையைப் பற்றி மட்டும் விடாமல் இவர்கள் பேசுவார்கள்.

அண்மையில் இராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம் புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் தன் மனைவியுடன் சென்றுள்ளார்.

ஆனால் அவரின் சாதியைக் காரணம் காட்டி, அவரைக் கோவிலுக்குள் நுழைய, அக்கோயிலின் பூசாரி அனுமதிக்கவில்லை.

சர்வ வல்லமையும், அதிகாரமும் படைத்த குடியரசுத் தலைவரால் அந்தப் பூசாரியை ஒன்றும் செய்ய முடியவில்லை.

என்றாலும் ‘சகிப்புத் தன்மையுடன்’ சகித்துக் கொண்டு, கோயிலின் வெளிப்படிக்கட்டில் சூடம் ஏற்றிவிட்டுத் திரும்பி இருக்கிறார் குடியரசுத் தலைவர்.

இதைத்தான் சகிப்புத்தன்மை என்கிறார் பிரணாப் முகர்ஜி!

காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பை மீறி இவர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார் என்பதில் இருந்து இவரின் இனப்பற்று புரிகிறது.

இது போன்ற நடைமுறைகள் வருங்காலங்களில் தொடர்வது நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல!

இன்றைய குடியரசுத் தலைவரும் ஆர்.எஸ்.எஸ். காரர்தான். இராஜஸ்தான் பிரம்மா கோயில் அவருக்குப் பாடம் புகட்டியிருக்கிறது.

அவர்கள் பாடம் கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

குடியரசு தலைவர் மாளிகைக்குப் போனவர் பிரணாப்.

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமுக்குப் போனவர் முகர்ஜி.

அவ்வளவுதான்!

Pin It