student suicideதுப்பாக்கி முனைகளால் கொல்லப்பட்டவர்கள் மக்கள், தூத்துக்குடியில்.

பேனா முனைகளால் கொல்லப்படுகிறார்கள் மாணவர்கள், நீட் தேர்வினால்.

அன்று அரியலூர் அனிதா தூக்கில் தொங்கினார்.

இன்று விழுப்புரம் பிரதீபா, கீர்த்திகா, திருச்சி சுபஸ்ரீ பலியாகிப் போனார்கள் தமிழ்நாட்டில்.

தெலுங்கானா மாநிலம் மயூரி கட்டிடத்தின் ஒன்பதாம் மாடியில் இருந்து மாணவி ஜல்லின் கபூரும், டெல்லி துவாராகாவில் 8 அடுக்குமாடியில் இருந்து ஒரு மாணவரும் கீழே குதித்து உயிரைப் பறி கொடுத்துள்ளார்கள்.

அனைவரும் மாணவர்கள், அனைவரும் 18 வயதுக்கு உட்பட்ட இளந்தளிர்கள்.

வாழ்க்கை இருந்தது அவர்களுக்கு. வாழவிடாமல் சாவுக்குள் தள்ளிய அந்த கொடுமைக்குக் காரணம் நீட் எனும் தேர்வு.

தேர்வு மாணவர்களுக்காக இருக்க வேண்டும். மாணவர்களைத் தேர்வுக்காக வதைக்கக் கூடாது. அப்படி மத்திய-மாநில அரசுகளின் வதை காரணமாக மாணவர்களின் மரணங்கள், அடுத்த ஆண்டும் தொடருமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி 39.55 விழுக்காடுதான். ஆனால் தமிழகம் கல்வியில் பிறமாநிலங்களை விட முன்னணியில் உள்ள மாநிலம்.

அதே சமயம் கல்வியில் பின் தங்கிய வடமாநிலங்கள் 60.45 விழுக்காடு தேறியுள்ளன.

கல்வியில் மிகமிகப் பின் தங்கிய மாநிலம் பீகார். அம்மாநிலத்தைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி இவ்வாண்டு நீட் தேர்வில், இந்தியாவிலேயே முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். எப்படி?

கல்பனா குமாரி +2 தேர்வு எழுதக் கல்வித்துறை அனுமதிக்கவில்லை. காரணம் அவரின் பள்ளி வருகைப் பதிவு குறைவாக இருந்ததோடு அவரின் படிப்பும் நாட்டமின்றி இருந்ததுதான். ஆனால் அவர் நீட்டுக்கு அப்போது தயாராகிக் கொண்டிருந்திருக்கிறார். அது எப்படி?

அதே சமயம் சில உயர் அதிகாரிகள் தலையிட்டு, அந்த மாணவிக்குப் +2 தேர்வு எழுத அனுமதி பெற்றுத் தந்ததுடன், அம்மாணவி அத்தேர்வில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

அதே மாணவிதான் நீட் தேர்வில் இந்தியாவின் முதல் மாணவி.

சி.பி.எஸ்.சி. செய்திக் குறிப்பின்படி பீகாரில் நீட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் 35,641 பேர்கள்.

தேர்வு முடிந்தபின் சி.பி.எஸ்.சி செய்திக் குறிப்பில் விண்ணப்பித்தோர் 66,071 பேர் என்றும், தேர்வு எழுதியவர்களும் 63,003 பேர் என்றும் சொல்லி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.

எனவே பீகாரில் முதல் இடம் பெற்ற கல்பனா குமாரி தேர்வில் ஊழல் நடந்திருப்பதாகக் கல்வியாளர்கள் குரல் எழுப்ப, அந்த மாணவி விசாரணை வளையத்துள் வர இருப்பதாக நாளிதழில் செய்தி வெளியாகியிருக்கிறது.

இந்திய அளவில் அதிகமான அரசு மருத்துவக் கல்லூரிகள் (24) இருக்கும் மாநிலம் தமிழகம். இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் என்று கூடச் சொல்லலாம். இக்கல்லூரிகளில் படிப்பதற்கு ஏறத்தாழ 15,000 ரூபாய்தான் ஆகிறது. பிற மாநிலங்கள், மற்றும் பாகிஸ்தானில் இருந்தும் கூட நோயாளிகள் இங்கு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட தமிழக மருத்துவக் கல்லூரிகளில் தமிழர்களின் இடங்களைக் குறிவைத்து, வட இந்திய மருத்துவர்களைக் கூடுதலாக நுழைக்க நீட் தேர்வை மத்திய அரசு நுழைத்துள்ளதாகவும் தெரிகிறது.

நீட் தேர்வுதான் சிறந்த மருத்துவர்களை உருவாக்கும் என்பது அப்பட்டமான பொய்.

அப்படியானால் 1984ஆம் ஆண்டுக்கு முன்னர் சிறந்த மருத்துவர்களைத் தமிழகத்திற்குத் தந்தது நீட் தேர்வா? 1984&2006, 23 ஆண்டுகள் நுழைவுத் தேர்வின் மூலம் சிறந்து விளங்கிய தமிழக மருத்துவர்களை எந்த நீட் தேர்வு, தேர்வு செய்தது?

“அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக மருத்துவ மனைகளில் மனித ஆற்றல் குறைந்து விடும். சிறந்த வல்லுநர்கள் இருக்க மாட்டார்கள்... கார்டியாலஜி, கேன்சர் குறித்த சிகிச்சைகள், பல்மனாலஜி போன்ற துறைகள் ஏற்கனவே தனியாரிடம் கொடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்தையும் பெரு முதலாளிகளிடம் ஒப்படைக்க நினைக்கிறது பா.ஜ.க. அப்படிச் செய்யும் போது தமிழகத்தில் எதிர்பார்த்த தரம் குறையும். போதிய மருத்துவர்கள் இல்லை என்று கூறி கார்டியாலஜி மட்டுமில்லாமல் பொது மருத்துவம், அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாகச் சொல்வார்கள்” என்று நீட் தேர்வின் பின் விளைவை விளக்குகிறார். தமிழ்நாடு நலவாழ்வு இயக்கத் தலைவரும், மருத்துவருமான ரெக்ஸ் பீட்டர்.

இப்படிப்பட்ட நீட் தேர்வை கொண்டுவராமல் விடமாட்டோம் என்று சூளுரை செய்யும் மத்திய அமைச்சர் பொன்.இராதா கிருஷ்ணனின் சென்னை விமானநிலையப் பேட்டி ஒன்று இந்தியா முழுவதும் நீட்டுக்கு எதிர்ப்பு வலுக்கிறது என்ற உண்மையை உறுதிப்படுத்துகிறது.

சென்ற ஆண்டு நீட்டுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் இரண்டு சட்ட முன்வடிவங்களை இயற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தது தமிழக அரசு.

கோப்பு அங்கு தூங்குகிறது. அமைச்சர்கள் இங்கு தூங்குகிறார்கள்.

மக்களும் தூங்கினால், நீட் தேர்வும் தொடரும், நீட் (தற்)கொலைகளும் தொடரலாம்.

இதைத் தடுக்க ஒரே வழி நீட் தேர்வைத் தமிழகத்தில் ஒழிப்பதுதான்! வேறு வழியில்லை!   

Pin It