நரேந்திர மோடி கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் ஆட்சி அமைத்துப் பிரதமர் ‘பட்டம்' சூடி இருக்கிறார்

 இன்னும் ஒரு வாரம் கூட நிறைவுபெறாத நிலையில், நாக்பூரில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மணிப்பூர் இன்னமும் எரிந்து கொண்டு இருக்கிறது. அதை யார் கவனிக்கப் போகிறார்கள்? உண்மையான சேவகர் கண்ணியத்தைக் கடைபிடிப்பார். ஆணவத்தைக் காட்டிக் காயப்படுத்த மாட்டார். தேர்தல் வாய்ச் சவடால்களை விட்டுவிட்டு, நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது, என்று சற்று காட்டமாகப் பேசியிருக்கிறார்

இதில் இரண்டு செய்திகள் இருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் இல் இருந்தாலும் அரசியல் அதிகாரத்திற்கு வந்த பின்னர், மோடியின் தனித்த சர்வாதிகார ஆணவம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சிந்திக்க வைத்திருக்கிறது.

அதனால்தான் மணிப்பூர் கலவரம் நடந்த நேரத்தில் வாய் திறக்காத மோகன் பகவத், இன்று மோடியை எச்சரிக்கும் விதமாக இப்படிப் பேசியிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க ஆர்.எஸ். எஸ் அமைப்பு 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எதிர்வரும் 2025ஆம் ஆண்டு அதற்கு நூறாம் ஆண்டாகும்

இந்த நூறாண்டு கால அரசியல் முன்னெடுப்புகள் மூலம் ‘இந்து ராஷ்ட்ர'த்தை 2025இல் அமைத்துவிட வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் இன் கனவை 2024 பொதுத் தேர்தலில் ‘இந்தியா கூட்டணி' தகர்த்துப் போட்டு விட்டது. இப்பொழுது ஒன்றியத்தில் மோடியின் பா. ஜ.க அரசு ஒரு ‘மைனாரிட்டி' அரசாகக் குறுகி விட்டது

ஆர்.எஸ்.எஸ்இன் நூற்றாண்டு ‘இந்துராஷ்ட்ர' கனவு கலைந்ததாலும், அக்கனவு கலையக் காரணம் மோடியின் பத்தாண்டுகால சர்வாதிகார ஆட்சிதான் என்பதாலும் மோகன் பகவத் தன் குரலை உயர்த்தியிருக்கிறார் என்பதை அவரின் நாக்பூர் பேச்சின் மூலம் உணர முடிகிறது.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It