raghupathi book on dalits1992 ஆம் ஆண்டு டப்ளின் நகரில் நடைபெற்ற பன்னாட்டு நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாநாட்டில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது : “தேவைப்படும் அனைத்துப் பயன்பாடுகளிலும் பொருளாதார ரீதியான மதிப்பை நீர் பெற்றுள்ளது. நீரை அதன் பயன்பாட்டின் அடிப்படையில் மதிப்பிடுவதை, ஒரு பொருளாதார இலக்காக அங்கீகரிக்க வேண்டும்” என்பதே அத்தீர்மானம். இயற்கையின் கொடையாகவும், அனைவருக்கும் பொதுவானதாகவும் இருந்த தண்ணீருக்கும் நிதி செலவிட வேண்டிய நிலையினை டப்ளின் மாநாட்டுத் தீர்மானம் ஏற்படுத்தி விட்டது. ஆனால் இந்தியச் சமூகத்தில் நீர் என்றைக்குமே பொதுவானதாக இருந்ததில்லை என்கிறார் நூலின் ஆசிரியர் கோ. ரகுபதி.

புனிதம் Vs தீட்டு என்கிற வருணாசிரமக் கோட்பாடு காரணமாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தண்ணீர் என்னும் உரிமை மறுக்கப்பட்டு வந்த துயர வரலாறை எடுத்துச் சொல்கிறது “தலித்துகளும் தண்ணீரும்” என்னும் இந்நூல். தண்ணீருக்கான உரிமை மறுக்கப்படுவதை வெறும் ‘குடிமை உரிமை’ அல்லது சமூக உரிமை’ மறுக்கப்படுவது போல அல்லாமல் அதனை ‘உயிர் வாழும் உரிமை’ மறுக்கப்படுவதாகவே கொள்ள வேண்டும் என்பதை இந்நூலின் வழியாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்திய வரலாற்றில் நீருக்கும், நதிகளுக்கும் புனிதம் கற்பிக்கப்பட்டு, அவை பண்பாட்டு முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதன் காரணமாக நீரானது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அந்நியமாக்கப்பட்டு, ஒரு சில சமூகத்தினர் அதன்மீது ஏகபோக உரிமை செலுத்தி வருகின்றனர். நீர் உரிமையினை மையப்படுத்தித் தமிழ்நாட்டில் நடந்த பிரச்சினைகள், தலித்துகளின் போராட்டங்கள் பலரும் அறியாதவை. அவை அனைத்தையும் ஆவணப் படுத்தியுள்ளது இந்நூல். 1929 இல் செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் “மனித நாகரிகத்திற்கும் தேச முன்னேற்றத்திற்கும் தடையான தீண்டாமையை ஒழித்து ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலிய பொது ஸ்தாபனங்களைத் தட்டுத் தடங்கலின்றி அனுபவிக்க, சகல ஜனங்களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டும் இந்நூல், தாழ்த்தப்பட்ட மக்களின் நீர் உரிமைக்கான சுயமரியாதை இயக்கத்தின் முன்னெடுப்புகளை இன்னும் விரிவாக ஆவணப் படுத்தி இருக்கலாம்.

பொதுச்சொத்துகளைத் தலித் மக்கள் அணுகுவதற்கும், அனுபவிப்பதற்குமான உரிமைகளை நிலைநாட்டுவதில் அரசின் போதாமைகளைச் சுட்டிக் காட்டுவதோடு, தலித்துகளுக்குத் தனியாகத் தண்ணீர்த் தொட்டிகளையோ, கிணறுகளையோ உருவாக்குவதைக் கண்டிக்கிறார் நூலாசிரியர். இது பொருளாதாரத்திற்கும், சுற்றுச்சூழலிற்கும் உகந்ததில்லை. பொது நீராதாரங்களில் தங்களது உரிமையை நிலைநாட்டுவதும், தண்ணீர் தனியார்மயமாக்கம் செய்யப்படுவதற்கு எதிராகப் போராடுவதுமே தலித்துகளின் தண்ணீர் உரிமையை மீட்டெடுக்கும் என்கிற தீர்வை முன்வைக்கிறது இந்நூல்.

நூல்: தலித்துகளும் தண்ணீரும்

ஆசிரியர்: கோ.ரகுபதி

பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்

பக்கங்கள்: 150

விலை: ரூ.190

- வெற்றிச்செல்வன்

Pin It