நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற இயலாமல் போனாலும் கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ளார் நரேந்திர மோடி. கடந்த இரண்டு முறைகளைப் போல் இவர் இந்த முறை எளிதாக ஆட்சி நடத்த முடியாது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்து. அதை உறுதிப் படுத்துவது போலவே அமைச்சரவை உருவாக்கத்தில் அனைத்துத் தரப்பினரின் அதிருப்திக்கும் ஆளாகியுள்ளது ஒன்றிய அரசு.

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவே இந்த அரசு அமைவதற்கு அடிப்படையாக இருப்பதால் அதற்கேற்ற அளவுக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் அளிக்கப்படும் என்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. பிரதமர் மோடி மற்றும் 71 பேர் அடங்கியுள்ள அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு வெறும் 11 இடங்கள் மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளன. அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துறைகள் அனைத்தும் முக்கியத்துவம்

இல்லாததாக இருப்பது அவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தேசம் நிதி போன்ற துறைகளையும், ஐக்கிய ஜனதாதளம் இரயில்வே துறையும் கேட்டு நிர்ப்பந்தித்தது குறிப்பிடத்தக்கது.chandrababu modi nithishதேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சி, கேபினட் அமைச்சர் பதவி ஒதுக்காமல் இணை அமைச்சர் பதவி ஒதுக்கியதால் அமைச்சரவையில் இணைய மறுத்து விட்டது. அதபோல் சிவசேனா (ஷிண்டே) கட்சி 7 மக்களவை உறுப்பினர்களைக் கொண்டுள்ள தங்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி ஒதுக்காமல், வெறும் இரண்டு மக்களவை உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த ஹெச்.டி.குமாரசாமிக்குக் கேபினட் அமைச்சர் பதவி ஒதுக்கியதை நேரடியாகக் கண்டித்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே சிவசேனா (ஷிண்டே) கட்சியின் தலைவரும் மராட்டிய முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே "பா.ஜ.க நானூறு இடங்களில் வெற்றி பெறும் என்று மோடி பேசியதால் வெற்றி பெற்ற பிறகு அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி விடுவார்கள் என்று அஞ்சியே மராட்டிய மக்கள் தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வில்லை" என்று வெளிப்படையாக பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சரவையில் இரண்டு சீக்கியர்கள், இரண்டு பவுத்தர்கள் மற்றும் ஒரு கிறிஸ்துவர் என ஐந்து சிறுபான்மையினருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஒரு இசுலாமியர் கூட அமைச்சரவையில் சேர்க்கப் படவில்லை என்பது இசுலாமியர் மீதான பா.ஜ.கவின் வன்மத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஒரு இசுலாமிய மக்களவை உறுப்பினர் கூட இல்லை என்றாலும் பா.ஜ.கவைச் சேர்ந்த ஒரு இசுலாமிய தலைவரையாவது அமைச்சரவையில் சேர்த்து அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கியிருக்கலாம்.

71 பேர் கொண்ட மோடியின் அமைச்சரவையில் 30க்கும் மேற்பட்டவர்கள் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர் போன்ற பலர் மக்களைச் சந்திக்காமலேயே மாநிலங்களவைக்கு தேர்வானவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்தியா கூட்டணியை நோக்கி வாரிசு அரசியல் என்று விமர்சித்த பிரதமர் மோடி தனது மூன்றாவது அமைச்சரவையில் 22 வாரிசுகளுக்கு இடமளித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அமைச்சரவையில் 24 மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளதாக பா.ஜ.க சொல்வதை ஏற்க இயலாது. ஏனெனில் அது உண்மையான பிரதிநிதித்துவம் அல்ல. குறிப்பாக நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர் மற்றும் எல்.முருகன் ஆகியோரை தமிழ்நாட்டின் பிரதிநிதிகளாக பா.ஜ.க கூறினாலும் அவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். அவர்களைத் தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகளாக எவ்வாறு ஏற்க முடியும்?

கூட்டணிக் கட்சிகளின் கடிவாளத்துடன் அமைந்துள்ள இந்த ஆட்சியில் பா.ஜ.க தனது இந்துத்துவ செயல்திட்டங்களை நிறைவேற்ற இயலாது என்பது அக்கட்சித் தொண்டர்களை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. அந்த வகையில் அனைத்துத் தரப்பினரின் அதிருப்தியோடு இந்த ஆட்சி அமைந்துள்ளது. அமைச்சரவை உருவாக்கத்திலேயே இவ்வளவு சிக்கலை எதிர்கொண்டுள்ள பிரதமர் மோடி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எப்படி ஆட்சி நடத்தப் போகிறார் என்ற கேள்வியே இந்திய மக்கள் மனதில் தற்போது எழுந்துள்ளது.

காலம் கனியும்! காத்திருப்போம்!!

வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Pin It