இந்திய அரசமைப்புச் சட்டம் 1950 சனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது முதற்கொண்டே இடஒதுக்கீடு குறித்த வழக்குகள் உயர் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. அத்துடன் கடந்த நூறு ஆண்டுக்காலத்தில் அரசியலில், அரசு வேலைகளில் இடஒதுக்கீடு என்கிற கோட்பாடு இந்திய அரசியலில் ஒரு முதன்மையான கூறாக இயங்கி வருகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆளும் வகுப்பினராக அனைத்து அதிகாரங்களையும் தங்கள் முற்றுரிமையாகக் கொண்டிருந்த பார்ப்பன - சத்திரிய - பனியா மேல்சாதியினர் இடஒதுக்கீட்டின் மூலமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல்குலத்தினர், பழங்குடியினர் ஆகியோர் அதிகாரத்தில் பங்கு கேட்பதையும் தங்களுக் குப் போட்டியாளர்களாக வருவதையும் தடுப்பதற்காக எல்லா வகையிலும் முயன்று வருகின்றனர்.
சென்னை மாகாணத்தில் அரசு வேலையிலும் உயர் கல்வியிலும் 1947 முதற்கொண்டே பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு நடப்பில் இருந்தது. 1950இல் இதன் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கல்வியில் இடஒதுக்கீடு அளிப்பதற்கான விதி இல்லை என்றும், இடஒதுக்கீட்டின் காரணமாகத் தனக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கவில்லை என்றும் செண்பகம் துரைராசன் என்கிற பார்ப்பனப் பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
கல்வியில் இடஒதுக்கீடு அளித்தது செல்லாது என்று 1950 சூன் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றமும் இதை உறுதி செய்தது. கல்வியில் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டத்தில் விதி செய்ய வேண்டும் என்று பெரியார் மாபெரும் போராட் டம் நடத்தினார். இதன் விளைவாக கல்வியில் இடஒதுக் கீடு அளிப்பதற்கான விதி 15(4) என்பது 1.6.1951 அன்று அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. பெரி யாரின் போராட்டத்தால்தான் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியல்குல, பழங்குடி வகுப்பினருக்குக் கல்வியில் இடஒதுக்கீட்டு உரிமை கிடைத்தது.
அரசு வேலைகளில் இடஒதுக்கீடு அளிப்பதற்கான விதி 16(4) என்பது மேதை அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றி ருந்தது. இதன்படி 1950 முதல் பட்டியல் குலத்தினருக் கும் பழங்குடியினருக்கும் வேலையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. அரசமைப்புச் சட்ட விதி 340-இன்படி, 1953-இல் காகாகலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்தபடி, அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட் டோருக்குப் பிரதமர் நேரு இடஒதுக்கீடு அளிக்க மறுத்து விட்டார். மேலும் சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்று 1961இல் பிரதமர் நேரு மாநில முதலமைச்சர்களுக்கு மடல் எழுதினார். பார்ப்பனரான நேருவும், பார்ப்பன உயர் அதிகார வர்க்கமும் இடஒதுக்கீட்டின் மூலம் பிற்படுத்தப்பட்ட வர்கள் முன்னேறுவதை வஞ்சகமாகத் தடுத்தனர்.
நடுவண் அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விதி 16(4)இல் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டு உரிமையைச் செயல்படுத்திட வழிகாண வேண்டும் என்ற குறிக்கோளுடன், தோழர் வே.ஆனைமுத்துவும் தோழர்களும் 29.4.1978 தில்லிக்குச் சென்றனர். பீகார் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் இராம் அவதேஷ்சிங் மற்றும் பலருடன் மேற்கொண்ட முயற்சிகளாலும், போராட்டங்களாலும் பி.பி. மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசு வேலைகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற மண்டல் குழுவின் அறிக்கை 1980இல் அளிக்கப்பட்ட போதிலும், பார்ப்பன-மேல்சாதி ஆதிக்கவர்க்கம் அது செயல்பாட்டுக்கு வராமல் தடுத்து வந்தது.
பிரதமர் வி.பி. சிங் ஆட்சியில் 13.8.1990 அன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசு வேலைகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேல்சாதியினரும் பா.ச.க.வினரும் இதை எதிர்த்து வடஇந்தியா முழுவதும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ச.க. வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தது. பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. 1991இல் பிரதமராக வந்த பார்ப்பனரான பி.வி. நரசிம்மராவ், 25.9.1991 அன்று இடஒதுக்கீட்டுப் பிரிவில் இடம்பெறாத மேல்சாதியினருள் உள்ள ஏழைகளுக்கு பத்து விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் அரசாணையை வெளியிட்டார். இதை எதிர்த்தும் வழக்குத் தொடுக்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்டவர் இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு இந்திரா சஹானி மற்றும் பிறர் எதிர் ஒன்றிய அரசு வழக்கு எனப்பட்டது. இது மண்டல் வழக்கு என்றும் கூறப்பட்டது. இந்த வழக்கைத் தலைமை நீதிபதி எம்.எச்.கனியா தலைமையில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் 16.11.1992 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இத்தீர்ப்பில் அரசமைப்புச் சட்டம் பிரிவு 16(4)இன் கீழ் சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்தது செல்லும் என்று கூறப்பட்டது. அதேசமயம் மேல்சாதியினரில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்றும் இத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை முடமாக்கும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருள் பொருளாதாரத்தில் வளர்ந்த பிரிவினருக்கு (Creamy Layer) இடஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்று நீதிபதிகள் கூறினர். இதனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருள் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் இடஒதுக்கீட்டின் மூலம் முன்னேற வாய்ப்பு கிடைக்கும் என்று நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.
மற்றுமோர் கேடான தீர்ப்பையும் நீதிபதிகள் வழங் கினர். பிரிவு 16(4) பதவி உயர்வில் இடஒதுக்கீடு செய்வதை அனுமதிக்கவில்லை; அதனால் பதவி உயர்வில் இனி இடஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்று தீர்ப்பளித்தனர். பட்டியல் குலத்தினருக்கும், பழங்குடியினருக்கும் 1963 முதல் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. எனவே பதவி உயர்வில் இடஒதுக்கீடு தரக் கூடாது என்கிற தீர்ப்பை எதிர்த்துப் பட்டியல் குலத்தினர் போராட்டங்கள் நடத்தினர்.
இந்திரா காந்தி பிரதமரானது முதல் தலித்துகளும் பழங்குடியினரும் பெருமளவில் காங்கிரசுக் கட்சிக்கு வாக்களித்து வந்தனர். எனவே இவர்களின் வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அரசியல் நோக்கத்துடன் 1995இல் 77ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் பட்டியல் குலத்தினருக்கும் பழங்குடியினருக்கும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பதற்கான பிரிவு 16(4A) சேர்க்கப்பட்டது. அதேபோல் பிரிவு 16(4)இன்படி நேரடி யான பணியமர்த்தல், பிரிவு 16(4A)இன்படி பதவி உயர்வு அளித்தல் ஆகியவற்றில் ஏற்படும் பின்னடைவுப் பணி இடங்களில் (Backlog) இடஒதுக்கீடு அளிப்பதற் காக பிரிவு 16(4B) நிறைவேற்றப்பட்டது. அப்போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் அதன் அரசியல் தலை வர்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு பெறத் தவறிவிட்டனர்.
பட்டியல் குலத்தினர், பழங்குடியினர் ஆகியோர்க்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டப் பிரிவு கள் 16(4A), 16(4B) ஆகியவற்றை எதிர்த்து எம். நாகராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பணியில் நுழையும் போது மட்டுமே இடஒதுக்கீடு சலுகை தரலாம்; பதவி உயர்வு என்கிற இரண்டாம் நிலையில் இடஒதுக்கீடு வழங்கினால் நிர்வாகத்திறன் பாதிக்கப்படும் என்று வாதிடப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஒய்.கே. சபஹர்வால், நீதிபதிகள் கே.ஜி. பாலகிருட்டிணன், எஸ்.எச். கபாடியா, சி.கே. தாக்கூர், பி.கே. பாலசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டது. 2006இல் தீர்ப்பளிக்கப் பட்டது.
இத்தீர்ப்பில், “பட்டியல் குலத்தவர், பழங்குடியினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அவ்வாறு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அரசுகள் கருதி னால், குறிப்பிட்ட பிரிவினர் பின்தங்கிய நிலையில் தான் உள்ளனர் என்பதைத் திட்டவட்டமான சான்று களின் அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும்; அரசு வேலைகளில் போதிய பிரதிநிதித்துவம் பெறவில்லை என்கிற புள்ளி விவரங்கள் தரப்பட வேண்டும்; அரசமைப்புச் சட்டப் பிரிவு 335-இல் அறிவுறுத்தியுள்ள வாறு அவர்களின் பதவி உயர்வால் நிர்வாகத் திறன் பாதிக்கப்படாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்கிற மூன்று நிபந்தனைகளின் பேரில் பதவி உயர்வு அளிக்கலாம்” என்று கூறப்பட்டது. இத்தீர்ப்பு அரச மைப்புச் சட்டப் பிரிவு 16(4A), 16(4B) ஆகிய வற்றின் அடிப்படை நோக்கத்தையே தகர்ப்பதாக இருந்தது.
2006இல் வழங்கப்பட்ட தீர்ப்பால் மாநில அரசுகளில் பட்டியல் குலத்தினருக்கும், பழங்குடியினருக்கும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பதில் பல சிக்கல்கள் ஏற் பட்டன. உயர்நீதிமன்றங்கள் வெவ்வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கின. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி ஆட்சியில் பட்டியல் குலத்தினருக்கும் பழங்குடிகளுக்கும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றம் பதவி உயர்வில் அளிக்கப் பட்ட இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்ததைச் சுட்டிக்காட்டி முன்பு வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் சமாஜ்வாதிக் கட்சியின் ஆட்சியில் இரத்துச் செய்யப்பட்டன. பஞ்சாப்-மும்பை உயர்நீதிமன்றங்கள் இதில் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கின. தில்லி உயர்நீதிமன்றம் பதவி உயர்வில் இடஒதுக்கீடு செல்லாது என்று கூறியது.
எனவே இந்திய அரசும், மாநில அரசுகளும் மற்றவர்களும் 2006இல் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர், பல கட்டங்களைக் கடந்து 2017ஆம் ஆண்டில் இந்த விண்ணப்பங்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது. நடுவண் அரசின் சார்பில் வாதிட்ட தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணு கோபால், “2006இல் அளிக்கப்பட்ட தீர்ப்பை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்; இத்தீர்ப்பில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் செயல் படுத்த முடியாதவை” என்று கூறினார்.
இந்த வழக்கைத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன், குரியன் ஜோசப், எஸ்.கே.கவுல், இந்துமல்கோத்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கின் தீர்ப்பை மற்ற நீதிபதிகளின் சார்பில் நீதிபதி ரோஹின்டன் நாரிமன் 26.9.2018 அன்று படித்தார். 58 பக்கங்கள் கொண்ட இத்தீர்ப்பில், “இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டியதில்லை; 2006ஆம் ஆண்டில் நாகராஜ் வழக்கின் தீர்ப்பில் பட்டியல் குலத்தினருக்கும், பழங்குடியினருக்கும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும்போது அரசுகள் அவர்களின் பின்தங்கிய நிலையைப் புள்ளிவிவரங்களுடன் உறுதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை இனி பின்பற்ற வேண்டியதில்லை, ஏனெனில் 1992இல் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வின் இந்திரா சஹானி (மண்டல் வழக்கு) வழக்கின் தீர்ப்பில், பட்டியல் குலத்தினரும் பழங்குடியினரும் கல்வியிலும் சமுதாய நிலையிலும் பின்தங்கியவர்கள் என்பது அய்யத்திற்கு அப்பாற்பட்டது என்று தெளிவு படுத்தப்பட்டுவிட்டது” என்று கூறப்பட்டுள்ளது.
நீதிபதி நாரிமன் படித்த தீர்ப்பில், பட்டியல் குலத்தி னருக்கும் பழங்குடியினருக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் பிரிவுகள் 16(4A) மற்றும் 16(4B) ஆகியவை செல்லும் என்று கூறப்பட்டுள்ள போதிலும், இவர்களில் வளர்ந்த பிரிவினருக்குப் (Creamy Layer) பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்கிற கேடான தீர்ப்பையும் வழங்கியுள்ளது. அரசுப் பணியில் நுழைகின்ற முதல் கட்டத்தில் வளர்ந்த பிரிவினர் என்கிற அளவுகோல் இல்லை என்றும், பதவி உயர்வில் இது கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் இத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26.9.2018 அன்று வழங்கப்பட்ட 58 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், இடஒதுக்கீட்டிலிருந்து வளர்ந்த பிரிவினரை ஏன் நீக்க வேண்டும் என்பதை நியாயப் படுத்த நீதிபதிகள் அதிக பக்கங்களை ஒதுக்கி வரிந்து கட்டிக் கொண்டு விளக்க முற்பட்டுள்ளனர்.
நாகராஜ் வழக்கில் 2006இல் வழங்கப்பட்ட தீர்ப்பில் பட்டியல் குலத்தினருக்கும் பழங்குடியினருக்கும் பதவி உயர்வில் வளர்ந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதை நீதிபதிகள் தம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் 16.11.1992 அன்று மண்டல் வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில் - 5 தனித்தனியான தீர்ப்புகள் வழங்கப்பட்ட போதி லும்-எட்டு நீதிபதிகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வளர்ந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்று கூறியுள்ளனர் என்பதை விரிவான மேற்கோள்களுடன் பக்கம் 19 முதல் 24 வரையில் எடுத்துக்காட்டியுள்ளனர்.
அதன்பின் இத்தீர்ப்பில், “இடஒதுக்கீட்டின் முதன் மையான குறிக்கோள் பின்தங்கிய வகுப்புக் குடிமக் களை இடஒதுக்கீட்டின் மூலம் முன்னேற்றச் செய்து, மற்ற குடிமக்களுடன் சரிநிகர் சமமாக நடக்கச் செய்வதே ஆகும். பின்தங்கிய வகுப்புக் குடிமக்களில் வளர்ந்த பிரிவினராக இருப்பவர்களே அரசு வேலைகளைத் தொடர்ந்து கைப்பற்றித் தமக்கு மட்டுமே உரியதாக்கிக் கொண்டால், பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பெறமுடியாமல் போகிறது. அதனால் அவர்கள் பின்தங்கிய நிலையிலேயே நீடிக்க வேண்டியிருக்கும், இந்த நீதிமன்றம் பட்டியல் குலத்தினருக்கும், பழங்குடியினருக்கும் பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீட்டில் வளர்ந்த பிரிவினர் கோட்பாட்டைப் பின் பற்ற வேண்டும் என்று கூறுவதால், அரசமைப்புச் சட்டம் பிரிவு 341 மற்றும் 342 ஆகியவற்றில் - குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பட்டியல்களில் - தலையிடுவதாகாது. வளர்ந்த பிரிவினர் என்கிற நிலையை அடைந்துவிட்டவர்கள் அல்லது உட்சாதியினர் பின்தங்கிய நிலையிலிருந்து அல்லது தீண்டாமையிலிருந்து விடுபட்டு விட்டபோதிலும் பட்டியல் குலத்தினர் அல்லது பழங் குடியினர் பட்டியலில் நீடிப்பார்கள். எங்களுடைய நோக்கம் அரசமைப்புச் சட்டப் பிரிவு 14 மற்றும் 16 ஆகியவற்றின் படி சமத்துவமான வாய்ப்பை நிலைநாட்டுவதற்காக வளர்ந்த பிரிவினரை இடஒதுக்கீட்டிலிருந்து நீக்குவதே ஆகும்” என்று கூறப்பட்டுள்ளது. பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பதை மாநிலங்கள் தங்கள் விரும்புகின்ற அளவில் செயல்படுத்தலாம் என்கிற கேடான கருத்தும் இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
50 விழுக்காட்டுக்குமேல் இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்பதற்கும், இடஒதுக்கீட்டில் வளர்ந்த பிரிவினர் என்கிற கோட்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்கும் அரசமைப்புச் சட்டத்தில் எந்தவொரு ஆதாரமும் இல்லை.
மேல்சாதியினராக உள்ள நீதிபதிகள் தங்கள் வர்க்க நலனைக் காப்பதற்காக - பார்ப்பனர் உள்ளிட்ட மேல் சாதியினரின் முற்றுரிமையாக இருந்துவரும் அரசின் உயர் அதிகாரப் பதவிகளுக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் போட்டியாளர்களாக வருவதைத் தடுக்கும் நோக் கத்துடன்தான் 16.11.1992 அன்று அளிக்கப்பட்ட மண்டல் வழக்கின் தீர்ப்பில் வளர்ந்த பிரிவினர் என்கிற கோட் பாட்டைத் திணித்தனர். இப்போது வளர்ந்த பிரிவினர் கோட்பாட்டைப் பட்டியல் குலத்தினர், பழங்குடியினரின் பதவி உயர்வில் புகுத்தியுள்ளனர்.
வளர்ந்த பிரிவினரை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கிட வேண்டும் என்கிற கோட்பாட்டை உச்சநீதிமன்ற நீதிபதி சின்னப்ப ரெட்டி-கே.சி. வசந்தகுமார் வழக்கில் கேள்விக்கு உட்படுத்தினார். “ஒதுக்கீடு செய்யப்படாத இடங்களும் பதவிகளும் சமுதாயத்தின் மேல் மட்டத்தில் (மேல் சாதியினர்) வசதி படைத்தவர்களால் அபகரித்துக் கொள் ளப்படவில்லையா? ஒதுக்கீடு செய்யப்படாத இடங்களை யும் பதவிகளையும் சமுதாயத்தில் மேல் மட்டத்திலுள்ள வசதி படைத்தவர்கள் அபகரித்துக் கொள்வதைத் தவறு என்று சொல்லாத போது, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் இடங்களையும் பதவி களையும் அபகரித்துக் கொள்வது மட்டும் எப்படித் தவறாகும்?” என்று நீதிபதி சின்னப்ப ரெட்டி வினவி னார். மேலும் “இடஒதுக்கீடு பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் மேல் தட்டினர் தகுதி-திறமைப் பற்றிப் பேசுகின்றனர். பொதுப் பிரிவில் பணியில் சேர்ந்ததா லேயே இடஒதுக்கீட்டின் கீழ் பணியில் சேர்ந்தவர்களை விட தாங்கள் திறமை யானவர்கள் என்று மேல்சாதி யினர் தவறாகக் கருதிக் கொள்கின்றனர்” என்று கருத்துரைத்தார்.
நடுவண் அரசின்கீழ் உள்ள உயர்கல்வி நிறுவனங் களில் இடஒதுக்கீட்டின்கீழ் சேருகின்ற தலித் மாணவர் களையும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களையும் இழிவாக நடத்துகின்றனர். அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலாவின் தற்கொலையும், சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கன்னைய குமார்கைது நடவடிக்கையும் மேல்சாதி மாணவர் களின் - மேல்சாதி அதிகார வர்க்கத்தின் சாதி ஆணவப் போக்கைக் காட்டுகின்றன.
1992இல் மண்டல் வழக்கின் தீர்ப்பில், பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு வளர்ந்த பிரிவினர் என்கின்ற அளவுகோலையும் பட்டியல் குலத்தினருக்கும் பழங்குடி யினருக்கும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு இல்லை என்ற நிலையையும் உண்டாக்கிய போது, பிற்படுத்தப் பட்டவர்களும் தலித்துகளும் பழங்குடியினரும் தங்களின் பொது எதிரி மேல்சாதி ஆதிக்க வகுப்பினரே என்பதை உணர்ந்து ஒன்றிணைந்து போராடத் தவறிவிட்டனர்; இதைத் தங்களின் தனிப்பிரச்சனையாக மட்டுமே பார்த்தனர்.
அதன் விளைவாக வளர்ந்த பிரிவினர் எனும் கோட்பாடு பட்டியல் வகுப்பினருக்கு இப்போது பதவி உயர்வில் புகுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணியில் சேரும் முதல் கட்டத்திலேயே இவர்களுக்கு இது விரிவு படுத்தப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. எனவே எந்த வொரு பிரிவினருக்கும் எந்த நிலையிலும் வளர்ந்த பிரிவினர் என்கிற கேடான அளவுகோல் கூடாது என்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், பட்டியல் குலத்தினரும், பழங்குடியினரும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும். “இன்னும் எவ்வளவு காலத்துக்கு இட ஒதுக்கீடு தருவது? இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்” என்று 2006இல் நாகராஜ் வழக்கின் தீர்ப்பில் நீதிபதிகள் கருத்துரைத்துள்ளனர். எனவே அடுத்தகட்ட மாக இடஒதுக்கீடு என்பதையே உச்சநீதி மன்றத்தின் துணையுடன் ஒழித்துக் கட்டுவதற்கான ஆபத்து இருப்பதை இடஒதுக்கீடு பெறும் மூன்று பிரிவினரும் உணர்ந்து, வருமுன் காப்பு நடவடிக்கை களை மேற் கொள்ள வேண்டும்.
2008ஆம் ஆண்டில் வகுப்புவாரியான மக்கள் தொகையும், அரசுப் பணியில் அவர்கள் பெற்றுள்ள இடங்களும் (விழுக்காட்டில்)
மேல் சாதியினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் குலத்தினர் மற்றும் பழங்குடியினர்
- மக்கள் 17.5ரூ 57ரூ 25.5.ரூ தொகையில்
- முதல்நிலைப் 77.2ரூ 5.4ரூ 17.4ரூ பணிகளில்
- 2ஆம் நிலைப் 75.4ரூ 4.0ரூ 20.6ரூ பணிகளில்
- 3, 5, 5ஆம் 68.1ரூ 7.1ரூ 24.8ரூ நிலைப் பணிகளில்
இந்தியாவை ஆட்சி செய்கின்ற கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நாட்டின் கொள்கைகளை வகுக்கின்ற - செயல்படுத்து கின்ற உயர் அதிகாரம் கொண்ட முதல் நிலை, இரண் டாம் நிலை பதவிகளில் இருப்பவர்கள் பல ஆண்டு களுக்கு அப்பதவியில் நீடிக்கின்றனர். அவர்களே நடப்பில் உண்மையான ஆளும் வர்க்க மாக இருக்கின்றனர்.
மேலே உள்ள பட்டியலில் மக்கள் தொகையில் 17.5 விழுக்காட்டினராக உள்ள மேல்சாதியினர் முதல் நிலை-இரண்டாம் நிலைப் பதவிகளில் 75 விழுக் காட்டிற்குமேல் கைப்பற்றிக் கொண்டுள்ளனர். மக்கள் தொகையில் 57 விழுக்காடாக உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வெறும் 5.4 விழுக்காடு இடங்களை மட்டுமே பெற்றுள்ளனர். இதற்கு முதன்மையான காரணம் 1950 முதல் 1994 வரையில் இவர்களுக்கு வேலையில் இடஒதுக்கீடு வழங்கப்படாததே ஆகும். மேலும் இவர்களின் மக்கள் தொகையின் விகிதாசாரத்திற்கும் மிகக் குறைவாக 27 விழுக்காடு இடஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மற்றொரு காரணமாகும். மேலும் வளர்ந்த பிரிவினர் என்கிற வகைப்பாடு இந்திய ஆட்சிப் பணி போன்ற உயர் பதவிகளில் நுழைவதற்குப் பெருந் தடையாக இருக்கிறது.
எனவே மொத்த இடஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்குள் இருக்க வேண்டும் என்கிற சூழ்ச்சியை முறியடித்து, பிற்படுத்தப்பட்டவர்களின் விகிதாசாரப்படி 57 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதுடன், வளர்ந்த பிரிவினர் என்கிற கோட்பாட்டையும் ஒழித்தால்தான் உயர் அதிகாரப் பதவிகளில் இவர்கள் படிப்படியாக நுழைய முடியும். அப்போதும் இவர்களின் விகிதாசார நிலையை எட்ட நீண்ட காலமாகும்.
பட்டியல் குலத்தினருக்கு அம்பேத்கர் இந்திய அமைச்சரவையில் அமைச்சராக இருந்த போது, 1943இல் முதன்முறையாக 8.33 விழுக்காடு வேலையில் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தார். அது 1946இல் 12.5 விழுக் காடாக உயர்த்தப்பட்டது. பழங்குடியினருக்கு 1950இல் 5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1970 முதல் பட்டியல் குலத்தினர் மக்கள் தொகையில் உள்ள விகிதா சாரப்படி 15 விழுக்காடும் பட்டியல் குலத்தினருக்கு 7.5 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
பட்டியல் குலத்தினருக்கு 1943ஆம் ஆண்டு முதற் கொண்டும், பழங்குடியினருக்கும் 1950 முதற்கொண்டும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதாலும் 1963 முதல் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதாலும் முதல்நிலைப் பணிகளில் 17.4 விழுக்காடும், 2ஆம் நிலைப் பணிகளில் 20.6 விழுக்காடும், 3, 4, 5ஆம் நிலைப் பதவிகளில் 24.8 விழுக்காடும் பெற்றுள்ளனர். 1991இல் அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தலித்து களிடம் மாபெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. எனவே இவர்களின் வளர்ச்சியை ஒடுக்குவதற்கான ஒருவழி யாகத்தான் 26.9.2018 அன்று உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டத் தீர்ப்பில் பதவி உயர்வில் வளர்ந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் பட்டியல் குலத்தினரும், பழங்குடியினரும் உயர் அதிகாரப் பதவிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும்.
* மக்கள் தொகை விகிதாசாரப்படி பிற்படுத் தப்பட்ட வகுப்பினர், பட்டியல் குலத்தினர், பழங்குடியினர் ஆகியோர்க்கு வேலையிலும் உயர் கல்வியிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
* வளர்ந்த பிரிவினர் என்கிற வகைப்பாடு எந்தப் பிரிவினருக்கும் பணியில் நுழைவு நிலையிலோ, பதவி உயர்விலோ இருத்தல் கூடாது,
* பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
இக்கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக பிற்படுத் தப்பட்ட வகுப்பினரும், பட்டியல் குலத்தினரும், பழங் குடியினரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். இந்த நிலையை அடையாவிட்டால் மேல்சாதி ஆதிக்க ஆளும் வர்க்கத்தினர் இடஒதுக்கீடு கோட்பாட்டையே படிப் படியாகச் சிதைத்து ஒழித்துவிடுவார்கள் என்பது உறுதி.