சர்வாதிகாரத்தையும், பாசிசத்தையும் வீழ்த்துவது அத்தனை எளிதன்று, கடினம் தான்! ஆனாலும் அவற்றைக் காலம் வீழ்த்தியே தீரும்!  வரலாறு முழுவதும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது!

கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவில் அப்படிப்பட்ட ஓர் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது.  அவர்களின் அடிப்படை வேலைத் திட்டங்களாக,  வரலாற்றைத் திரித்தல்,  மதவாதத்தை அரியணை ஏற்றுதல், சமூக நீதியைக் குலைத்தல், மாநிலங்களை அடிமைகளாக நடத்துதல், இந்தியாவின் பன்மைத்துவத்தை அழித்தல் ஆகியன  இருக்கின்றன! 

இந்த வேலைத் திட்டங்களை அவர்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. 

பாடப்புத்தகங்களில் ஏற்கனவே பல வரலாற்றுத் திரிபுகள் அரங்கேறி விட்டன. மதவாதம் நாடெங்கும் தலைவிரித்து ஆடுகிறது. முன்னேறிய சாதியினருக்கும் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.  காஷ்மீர் கலைக்கப்பட்டு விட்டது. ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்னும் கூச்சல் ஒரேயடியாகக் கேட்கத் தொடங்கி இருக்கிறது! 

இத்தருணத்தில்தான் இப்போது எதிர்க்கட்சிகள் விழித்துக் கொண்டிருக்கின்றன. சின்னச் சின்ன வேறுபாடுகள்,  அந்தந்த மாநிலங்களில் சில மோதல் போக்குகள், கொள்கைகளில் கூட ஒரு சில வேறுபாடுகள் எல்லாம் இருந்தாலும், இனி இந்த நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டுமானால், பாசிச பாஜக ஆட்சியை அகற்றுவது ஒன்றே வழி என்னும் புரிதலோடு, இந்தியாவில் உள்ள குறிப்பிடத்தக்க வலிமையான  16 கட்சிகள் இன்று பாட்னாவில் ஒன்று கூடி இருக்கிறார்கள். 

தங்களுக்குள் இருக்கும் சின்னச் சின்ன வேறுபாடுகளை எல்லாம் மறந்து, ஒரே அணியில் நின்று பாஜகவை வீழ்த்துவதே தங்கள் நோக்கம் என்று வெளிப்படையாக அனைவரும் அறிவித்திருக்கிறார்கள் பொது எதிரி யார் என்னும் புரிதலோடு, அந்தக் கூட்டத்தின் முடிவுகள் வெளிப்பட்டு இருக்கின்றன. மீண்டும் ஜூலை 10 அல்லது 12 சிம்லாவில் கூடுவது என்றும் முடிவெடுத்து இருக்கிறார்கள்.

முன் முயற்சி எடுத்து அந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!  அதற்கு முழு ஒத்துழைப்பு தந்த அனைத்துக் கட்சியினரையும், குறிப்பாக, நம் தி.மு.கழகம் மற்றும் அதன் தலைவரையும் நாம் பாராட்டி மகிழ்கின்றோம்!

வரலாற்றுக் கடமை நம் முன்னால் காத்திருக்கிறது. ‘ஒரு பெருவெடிப்பின் முதல் ஓசை’ பாடலிபுத்திரத்தில் கேட்டிருக்கிறது. 

இது வெறும் கட்சிகளின் கடமை மட்டுமின்றி, ஜனநாயகத்தைக் காப்பாற்ற நினைக்கும் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும் என்பதை உணர்ந்து, மக்களே அணி திரள்வோம்! பாசிசத்திற்கு விடை தருவோம்!!

- சுப.வீரபாண்டியன்

Pin It