நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொற்கள் (unparliamentary words) என்று ஒரு கையேட்டை வெளியிட்டு உள்ளது.

அதில், துரோகம், ஊழல், ஒட்டுக்கேட்பு, கொரோனா பரப்புபவர், நாடகம், கபட நாடகம், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரம், கோழை, கிரிமினல், முதலைக் கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய் என்று unparliamentary words பட்டியல் நீள்கிறதாகக் கண்டனங்கள் எழத் தொடங்கி விட்டன.

இவை என்ன ‘கெட்ட’ வார்த்தைகளா? தனி மனித உரிமையை, சமூகத்தை, நாட்டைப் பாதிக்கும் தேசவிரோதச் சொற்களா?

மக்கள் சாதாரணமாகவே அன்றாடம் பயன்படுத்தும், புழக்கத்தில் இருக்கும் சொற்கள்தாமே இவை.

ஒன்றிய அரசின் கேலிக்கூத்தான இந்தச் செயலுக்குக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரைன், “ஒன்றிய அரசு தடை செய்திருக்கும் அத்தனை வார்த்தைகளையும் நாடாளுமன்றத்தில் நான் பேசுவேன். என்னைக் கைது செய்து கொள்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். இன்னொரு உறுப்பினர் “சங்கி’’ என்ற சொல்லைத்தான் இவர்கள் விட்டு வைப்பார்கள் போலிருக்கிறது என்று கேலியாகப் பேசியிருக்கிறார்.

இந்நிலையில் இது குறித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்பதால் நாடாளுமன்ற வளாகத்தில், முக்கியமாகக் காந்தியார் சிலை முன்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை விதித்திருக்கிறது நாடாளுமன்றச் செயலகம்.

இது ஜனநாயக நடைமுறைதான் என்று சொல்லும் ஓம் பிர்லா, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேச எந்தத் தடையும் விதிக்கவில்லை என்றும் பட்டும் படாமலும் பேசியிருக்கிறார்.

இது ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டு இருந்தால் போதாது. அப்படிப்பட்ட அரசாக இருக்க வேண்டும்.

இட்லர், முசோலினி, ராஜபக்சே சகோதரர்களின் சர்வாதிகாரங்களை மக்கள் தூக்கி வீசியிருக்கிறார்கள்.

இதை ஆளவந்தார்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

Pin It