“திராவிடம் என்ற சொல்லை நான் திட்டமிட்டுத்தான் சொல்கிறேன்”

அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஃபெட்னா நடத்திய மாநாட்டில் தமிழ்நாட்டு முதலமைச்சர் காணொளி வழியாகப் பங்கேற்று உரையாற்றும்போதுதான் மேற்கண்ட செய்தியைச் சொல்லியிருக்கிறார்.

“இங்கே யார் திராவிடன்? நான் தமிழன். எனக்கு எதற்கு திராவிட அடையாளம்? திட்டமிட்டுத் தமிழையும் தமிழனையும் அடையாளம் இல்லாமல் செய்வதற்காக வடுக வந்தேறிகளால் கட்டமைக்கப்பட்டதுதான் திராவிடம்” - இப்படி ஒரு நபர் பத்து வருஷமாகத் தமிழ்நாட்டுத் தெருக்களில் கத்திக் கொண்டு திரிகிறார்.

mk stalin 220அந்தக் காட்டுக் கத்தல் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது சுதியும், தாளமும் மாறி “ரெண்டுபேரும் எங்க ஆளுக” என்றும் “நான் சைவம் எனக்கெதுக்கு வந்தேறி மதங்கள்?” என்றும் அப்படியே சுழன்றடித்தபடி நாக்பூரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம், “நானும் திராவிடன்தான் அண்ணா, பாருங்க நானும் கருப்புதான்” என்கிறது ஓர் அண்டங்காக்கை. இதென்னடா புதிய கரைச்சலாக இருக்கிறதே என்றால், அந்தக் காக்கை மநுதர்மம் சனாதனம் ஆகியவை நமது வாழ்வியல் என்று உளறுவதும், ஜாதிப்பிரிவினைகள் வெளியிலே இருந்து வந்த மதங்களால் உண்டானதென்றும், இந்து மதத்தைக் காக்கச் சண்டமாருதம் செய்வேன் என்றும் ஆட்டுப்படையோடு புறப்பட்டு அதுவும் நாக்பூர் வழியாகவே பயணிக்கிறது.

இவை போக, ‘திராவிடமல்ல தமிழ்’ என்கிற சில சில்வண்டுகளின் கூச்சல்களும் அவற்றை வழிமொழிந்து உளறிக் கொட்டும் சில வல்லூறுகளும் கடந்த பத்தாண்டுகளில் ஓயாத ஓட்டம் ஓடி, சமூகவெளியில் மிகப்பெரிய மாறுதல்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், எல்லா திராவிட அலர்ஜி நோயாளிகளுக்கும் முதல்வர் இந்த மாநாட்டு உரையில் அதிர்ச்சி வைத்தியம் செய்திருப்பதுதான் கூடுதல் சிறப்பு.

சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம், மானுடப்பற்று, தமிழ்மொழிப்பற்று, இன உரிமைகள் , கூட்டாட்சித்தத்துவம் , மாநில சுயாட்சித் தத்துவங்கள் கொண்ட திராவிட மாடல் அரசு என்று, இந்த அரசைப் பற்றிப் பிரகடனம் செய்தார் முதல்வர்.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதைத் திராவிடக் கோட்பாடாகவும், எல்லார்க்கும் எல்லாம் கூடாது என்று நினைப்போரை எதிர்நிலையிலும் நிறுத்தி திராவிட எதிர்ப்புப் போராளிகளை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

கடவுள் - மதம் - ஜாதிப்பிரச்சனையில் கடவுளுக்கும் மதத்திற்கும் சொல்லுகிற சமாதானங்ககளைக் கூட ஜாதிக்குச் சொல்ல முடியாதென்றும் தமிழர்களைப் பிளவுபடுத்தும் முழுமுதல் ஆயுதமாக ஜாதி இருக்கிறது. ஜாதி ஒழிந்த தமிழர்களாக நாம் தமிழால் ஒன்றிணைவோம் என்றும் சொல்லியிருக்கிறார் முதல்வர்.

ஜாதியாய்க் குவிக்கப்படுவோரை மொத்தமாய்க் கூட்டி அள்ளிக்கொண்டு போய்விடலாம் என்கிற சங்பரிவார் கும்பலின் நீண்ட கால வேலைத்திட்டமும், பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியாகி, திராவிட எதிர்ப்பை, பெரியார் எதிர்ப்பை மட்டுமே குலத்தொழிலாகக் கொண்டு செயல்பட்டோர் எதிர்பார்ப்பும் முழுமையாகப் பொய்த்துப்போய் விடவில்லை என்பது ஓரளவுக்கு உண்மைதான்.

தமிழ்நாட்டு அரசியலில் திராவிடம் என்பதும் பெரியார் என்பதும் வெறும் பெயர்கள் அன்று. அவைதான் இந்த மண்ணின் அரசியல் அடையாளம். அயோத்தி கரசேவைக்கு ஆள் அனுப்பிய ஜெயலலிதாவே ஆனாலும் தேர்தல் வெற்றிக்குப் பின் பெரியார் சிலைக்குத்தான் மாலை போட முடியுமே தவிர இராஜாஜி சிலைக்கு அன்று.

அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் கடந்தப் பத்தாண்டுகளாக பெரியாரின் சிலைகள் அவமதிக்கப்பட்டதன் பின்னணியில் இந்த திராவிட எதிர்ப்புச் சூத்திரதாரிகளே இருந்தார்கள் என்பதும் இன்னமும் தமிழ்நாட்டைச் சங்பரிவார் கும்பலுக்குக் காட்டிக்கொடுக்கும் வானரக் கூட்டமாக இவர்களே இருக்கிறார்கள் என்பதும் அம்பலமாகி வருகிற இந்த நேரத்தில்,

தமிழ்நாட்டை ஆரிய இருள் கவ்விப்பிடிக்கத் தடையாக இருக்கிற திராவிடச் சூரியனைத் தமிழ்த் திரை கொண்டு மறைக்க முயற்சிக்கிறார்கள் இவர்கள். இந்தக் கும்பலின் தமிழ்க்கோசம் வெளுத்துப்போன பகல் வேசம் என்பதோடு இவர்களை நம்பிப்போன இளைஞர்களும் உண்மை உணர்ந்து இந்த மாயவலையை அறுத்துக்கொண்டு வெளியேறி வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

இப்போதுதான் நாம் முன்பைவிட திராவிட முழக்கத்தை ஓங்கி முழங்க வேண்டிய தேவை அதிகம் ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல்வர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தன்னைத் ‘திராவிடக் கூட்டம்’ என்று பிரகடனப்படுத்திக் கொண்டதும், ஒன்றிய அரசு என்றதும், இந்த ஆட்சியைத் திராவிட மாடல் ஆட்சி என்றதும் ஏதோ எதேச்சையாக நடந்ததோ அலங்காரத்திற்காக சொல்லப்பட்டதோ அல்ல என்பதும்,

எந்தப் பெயரைக் கேட்டால் உன் எதிரி நடுநடுங்குவானோ அந்தப் பெயரே உன் இனத்தின் விடுதலைக்கான அடையாளம் என்பார்களே அப்படித்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘திராவிட மாடல்’ என்பதைச் சொல்லியிருக்கிறார். சொல்லில் மட்டுன்று எது திராவிட மாடல் என்பதைச் செயலிலும் காட்டி வருகிறார்.

 தமிழை, தமிழரை, தமிழ்நாட்டை அதன் தனித்தன்மை மாறாமல், தரம் குறையாமல், தகுதி குறையாமல் வரலாற்றின் பக்கங்களில் உயர்த்தி நிறுத்த திராவிடம் என்கிற அடையாளமே அடிப்படையாக இருந்தது; இருக்கிறது.

 தமிழை சமஸ்கிருதப் பிடியிலிருந்து மீட்க, தமிழ்நாட்டை வடநாட்டின் சுரண்டலில் இருந்து காக்க, தமிழனைச் சுயமரியாதைக்காரனாய் வாழவைக்க திராவிடமே போர் நடத்திக் களம் வென்று இன்றளவும் காத்து நிற்கிறது.

 இப்போதும் தமிழ்நாட்டைச் சூழத்துடிக்கும் ஆரியப்பார்ப்பன சூழ்ச்சிக்குத் தடையாக, சூழ்ச்சியை எதிர்கொள்ள, சூதுமதியாளர்களை விரட்டியடிக்க பெரியாரின் கைத்தடிதான் பேராயுதமாக இருக்கிறது. அதன் அடையாளம்தான் திராவிடம்!

 எனவேதான் திராவிடம், திராவிடர் என்பதை முதல்வர் தொடர்ந்து சொல்கிறார்; அதுவும் தெரிந்தே சொல்கிறார்; துணிந்து சொல்கிறார்; தொடர்ந்து சொல்கிறார். நாமும் சொல்வோம்! ஓங்கிச் சொல்வோம்! நாம் திராவிடக் கூட்டம்! ஆம்! ஆரியத்தின் அடிமைத் தளையுடைக்கும் மானத் தமிழர்களாகிய நாங்கள் திராவிடக் கூட்டத்தினர்தான்!

- காசு.நாகராசன்

Pin It