அய்யோ பாவம்! நயினார் நாகேந்திரனுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறது? ஆ.ராசா என்ற மகராசன் என்னவெல்லாம் தோன்றச் செய்துவிட்டார்? அவர்கள் நினைத்தால், தமிழ் நாட்டை இரண்டாகப் பிரித்துவிடுவார்களாம். ஒன்றியத்தில் அவர்கள் ஆட்சி என்று நமக்கு நினைவூட்டுகிறார்! 05.07.2022 அன்று, இராஜபாளையத்தில் அவர்கள் நடத்திய கேலிக்குரிய போராட்டத்தின் போது அவர் இப்படி நக்கலடித்து இருக்கிறார். அவருக்கு நாம் ஒன்று சொல்ல வேண்டி உள்ளது. அய்யா, நீங்கள் பதவியில்தான் இருக்கிறீர்கள்; ஆனால், ஆட்சி மக்களுடையது. பாவம், 60 சதவிகித மக்களின் எதிர்ப்பையும் மீறி சில கணக்கு முரண்களால் தான் உங்கள் ஆட்சியைச் சகித்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள்! தூக்கி எறியப்பட நேரம் குறிக்கப்படும் உங்களுக்கு இவ்வளவு கிண்டலும் கேலியும் ஆகாது.

a raja 28203.07.2022 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மாநாட்டில், “மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி” என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க. வின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா அவர்கள், “அண்ணாவின் கொள்கையை ஏற்று இந்திய இறையாண்மைக்குக் கட்டுப்பட்டுள்ளோம். மாநில சுயாட்சியைக் கொடுத்து விடுங்கள். இல்லை என்றால் நாங்கள் பெரியாரின் தனித் தமிழ்நாடு முழக்கத்தை மீண்டும் எடுக்க வேண்டி வரும்” என்று பேசினார். ஆமாம்! பேசினார்!

எதற்காகப் பேசினார்? என்ன அவசியம் வந்தது இப்போது? இந்திய நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் இரண்டாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு! வர்த்தகத் தலைநகரமாம் மும்பையை உள்ளடக்கிய மகாராட்டிரத்துக்கு அடுத்தபடியாக எங்கள் வரிப் பணத்தில்தான் நாட்டின் வரவு செலவுக் கணக்கை நீங்கள் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். மாநிலத்தின் வரி வருவாயை எல்லாம், சரக்கு சேவை வரி என்ற பெயரில் மொத்தமாக வாங்கிக் கொண்டு, அதைத் திரும்பப் பெற போராடும் நிலைக்கு மாநிலங்களைத் தள்ளி இருக்கிறீர்கள். எங்கள் மாநிலத்தின் வளர்ச்சியும், சமூகப் பொருளாதார அலகுகளும், இந்திய நாட்டின் ஒட்டுமொத்த சராசரி அலகுகளைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்து நிற்கின்றன. இவை முற்போக்கான எம் அரசியல் கோட்பாடுகளால், எம் தலைவர்களின் விழிப்புணர்வுப் பணிகளால், எம் மக்களுடைய உழைப்பால் நாங்கள் அடைந்த உயரம்!

பொருளாதார அறிஞர்கள் ழான் டிரெஸ் மற்றும் அமர்த்தியா சென் ஆகியோர் குறிப்பிட்டதைப் போல தமிழ்நாடு மட்டும் தனிநாடாக இருந்திருந்தால் இந்தியாவைக் காட்டிலும் எவ்வளவோ முன்னேறிய நாடாக இருந்திருக்கும். வளர்ச்சி அடைந்த மாநிலம் என்பதால் ஒதுக்கீடுகளைக் குறைக்கிறீர்கள். இப்போது உங்கள் ஆட்சியில், உங்களை உள்ளே விடாத காரணத்துக்காக எங்கள் ஒதுக்கீடுகளைத் தாமதப்படுத்தவும், குறைக்கவும் தலைப்படுகிறீர்கள். வளர்ச்சித் திட்டங்களுக்குப் பணம் இல்லாமல், உங்களைக் கெஞ்சிக் கொண்டிருக்கும் இந்த நிலைமையைச் சீர் செய்ய நாங்கள் வாளாயிருக்க முடியுமா? அதனால் தான் எச்சரிக்கை விடுத்தார். என்ன தவறு?

காத்திருந்தவர்கள் போல, “ராசா பிரிவினை பேசுகிறார்; மிரட்டுகிறார்” என கூப்பாடு போடுகின்றனர் பா.ஜ.க.வினரும், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள வட இந்திய ஊடகங்களும். “என் மீது கல்லடித்தால், உன் கையை முறிப்பேன்” என்று ஒருவர் சொல்வது மிரட்டலா? தற்காப்பா? தடுப்பா? நீங்கள் கல்லடிக்காமல் இருக்க அவர் விடும் எச்சரிக்கை தானே அது? அதைத் தான் ராசா செய்திருக்கிறார். சுயாட்சியைப் பறிக்காதீர்கள். எங்கள் கீழ்ப்படிதலை நாங்கள் விடவேண்டி இருக்கும் என்றால், சுயாட்சியைப் பறிக்காதீர்கள், எங்களைச் செயல்பட விடுங்கள், எங்களுக்கு உரியதை அளித்துவிடுங்கள். அவ்வளவு தான் அதற்குப் பொருள்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவர்கள், பல மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியாவே தவிர, அது எதேச்சதிகாரம் கொண்ட ஒரு தேசம் அல்ல என்று அண்மையில் கேரளா, வயநாட்டில் கருத்துத் தெரிவித்துள்ளார். பேராயக் கட்சி மாநில சுயாட்சித் தத்துவத்தைக் காலம் கடந்தாவது உணர்ந்து வரும்போது, சுயாட்சிக்கு எதிராக பா.ஜ.க.வினர் பொறுப்பற்றுப் பேசி வருகிறார்கள். சந்திரசேகர ராவ் தெலுங்கானாவில் 117 தொகுதிகள்தான் வைத்திருக்கிறாராம். 234 தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கலாமாம். பல்லவ நாடாம்! பாண்டிய நாடாம்! சரியான கணக்குப் புலிதான் நயினார் நாகேந்திரன். உத்தரப்பிரதேசம் 403 தொகுதிகள் கொண்ட மாநிலமாயிற்றே, அதை நான்காக்கி விடுங்கள்.

 முதலில்! மாம்லுக் பிரதேசம்! துக்ளக் பிரதேசம்! கில்ஜி பிரதேசம்! லோடி பிரதேசம்! எப்படி வசதி?!

- சாரதா தேவி

Pin It