vijay 372'தமிழ்நாடு இப்போது விஷத்தைக் குடித்துவிட்டது. அதைக் காப்பாற்றத் தாயும் ஆனவராக விளங்கும் ஸ்டாலினால் தான் முடியும்' என்று ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுகிசிவம் அவர்கள் ஓர் அரங்கக் கூட்டத்தில் பேசியிருந்தார். அதே கூட்டத்தில் ஆலகால விஷத்தைத் தொண்டையின் நடுவில் தடுத்தாட்கொண்டார் சிவனாகிய நிலகண்டன் என்றும் சொன்னார். இன்றைய தமிழ் மக்களின் நிலையும் அதுதான், மெல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை, தவிக்கிறார்கள்.

'நாம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், ஆட்சி நிலைக்குமா' நீடிக்குமா என்ற பயம் பற்றிக் கொண்டுள்ளது முதல்வராக இருக்கும் ஜோசப் விஜய்க்கு.

அதனால்தான் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பார்களே, அப்படி அதிமுகவில் ஆள் பிடிக்கும் வேலையில், அதாவது குதிரை பேரம் என்று சொல்கிறார்களே அந்த பேரத்தில் இருக்கிறார் அவர். காரணம் அமைச்சரவைக்குப் பெரும்பான்மைக் கோடாகிய 118 தொகுதிகளையாவது பெற வேண்டும் என்று அவர்களை விசில் ஊத வைக்கப் பார்க்கிறார்.

கூட்டணி கட்சிகள் இருக்கின்றனவே என்று கேட்கலாம். அவர்களுக்கு எங்கே இருக்கிறது கூட்டணி? அக்கூட்டணியின் பெயர்தான் என்னவாம்?

தான் எழுதிய மூதுரையில் பிற்கால ஒளவையார் சொல்வது போல 'அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள்' போன்ற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகள், இ.யூ.முஸ்லிம் லீக், மதிமுக கட்சிகள் எப்படிக் கூட்டணிக் கணக்கில் சேரும்?

உண்மையைச் சொன்னால் விஜய், இவர்கள் யாரையும் நம்பியதாகத் தெரியவில்லை. எரியும் அடுப்பில் கொள்ளிகளை எப்போது பிடுங்கி விடுவார்களோ என்ற அச்சம் அவருக்கு இருக்கிறது.

இவர் குதிரை பேரம் தான் செய்கிறார் என்று இவரின் அரசியல் பங்காளி வைகோவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டாரே!

 இரண்டு விஜயபாஸ்கர்கள் உள்பட தவெகவில் சேர்ந்து 'தவெக அழுக்கு மிஷினில்' துடைத்துக் கொண்டவர்கள், எதிர்வரும் இடைத்தேர்தலில் வேட்பாளர்களாக விசிலை எடுத்துக் கொண்டு வரட்டும் பார்க்கலாம் என்று காலியான தொகுதிகளில் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.

அவர்கள் ஊதப் போகும் விசில் ஓசையில், அறுநீர்ப் பறவைகள் என்ன செய்யும்? விஜய் என்ன செய்வார்?

இந்த நேரம் பார்த்து "சட்டி சுட்டதடா...கை விட்டதடா" டிஎம்எஸ் பாட்டு கேட்கிறது பாருங்கள்!

- கருஞ்சட்டைத் தமிழர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.