சட்டப்பேரவை குழுத் தலைவராக சசிகலா ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார். இது கண்டிப்பாக நடக்கும் என்று ஏற்கவே அனைவருக்கும் தெரியும். சசிகலாவை முதலமைச்சராக வர வேண்டாம் என்று நம்மால் எப்படி சொல்ல முடியும்? அதை சொல்லும் வாய்ப்பை இந்த ஜனநாயகம் நமக்கு வழங்கி இருக்கின்றதா? தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டும் தான் நமக்கு உள்ளது. அதைத் தாண்டி வேறு என்ன உரிமைகளை இந்த ஜனநாயகம் நமக்கு வழங்கியுள்ளது, ஒரு வெங்காயமும் கிடையாது. நீங்கள் வேண்டும் என்றால் பெருமைபட்டுக் கொள்ளலாம், நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோம், நமக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற உரிமைகள் உள்ளது , எனவே நாம் மிக மேம்பட்ட ஜனநாயக அமைப்பில் வாழ்கின்றோம் என கருவிக்கொள்ளலாம். ஆனால் அது எல்லாம் ஆடைகள் இன்றி அம்மணமாக உங்களிடம் கொடுக்கப்பட்ட வெறும் ஆடம்பரங்கள். இதோ, இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்களே அதற்குப் பெயர் தான் உண்மையான ஜனநாயகம்.
உங்களால் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது, வேண்டும் என்றால் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு, கொஞ்ச நேரம் ஊளையிடலாம். அதற்கு மேல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆயிரக்கணக்கான முஸ்லீம்களைப் படுகொலை செய்யக் காரணமான மோடியை நம்மால் பிரதமராக தேர்ந்தெடுக்க முடியும் என்றால், ஒரு சாராய வியாபாரியை, ஊழல் பேர்வழியை ஏன் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்க முடியாது? சீரழிந்துபோன அரசியலில் கிடைத்தவரை லாபம் என்ற கண்ணோட்டத்தை அரசியல்வாதிகள் மட்டுமின்றி, வாக்காளர்களும் தனது கொள்கையாக ஏற்றுக்கொண்டுவிட்ட ஒரு சமூக அமைப்பில் சசிகலாவின் முதலமைச்சர் பிரவேசம் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான். இந்தக் கண்றாவிகளை எல்லாம் இனி மக்கள் மனமுவந்து இயல்பாகவே ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்குத் தங்களை தயார்படுத்திக் கொள்வார்கள் என நாம் உறுதியாக நம்பலாம்.
ஜெயலலிதாவின் ஐந்து வருட ஆட்சியில் அவர் அடித்த கொட்டங்கள் ஒன்றா, இரண்டா? ஆனால் அதை எல்லாம் நாம் மனதில் வைத்தா ஓட்டு போட்டோம்? கவர்ச்சித் திட்டங்களும், குவாட்டரும், கோழி பிரியாணியும், பணமும்தான் ஆட்சியாளர்களைத் தேர்தெடுப்பதற்கான அளவுகோலாக நம்மிடம் உள்ளது. அட, நமக்கு வேற என்னதாங்க வழி இருக்கு, ஒன்று பேயைத் தேர்ந்தெடுக்க வேண்டும், இல்லை என்றால் பிசாசைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வேறு மாற்று என்று யாராவது இருக்கின்றார்களா? என நீங்கள் கேட்கலாம். நாம் எப்போதுமே அதற்கான முயற்சியில் ஈடுபட்டதில்லை என்பதுதான் உண்மை. நாம் நம்முடைய பிழைப்புவாதத்திற்கு ஒத்துவரும் கட்சிகளைத்தானே எப்போதுமே தேர்ந்தெடுத்து வந்துள்ளோம். தேர்தல் அரசியலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கழிசடைகளைத் தவிர வேறெதுவும் தென்படுவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கொள்கைவாதிகள் காணப்பட்டாலும், அவர்களும் இந்த மானங்கெட்ட ஜனநாயகத்தை போற்றிப் புகழும் புண்ணாக்குகளாகவே இருக்கின்றார்கள். யாருக்கும் வெட்கமும் இல்லை, மானமும் இல்லை. தேர்தலில் நிற்க ஒரு சீட்டு கொடுத்தால் கட்டி இருக்கும் வேட்டியையே காணிக்கையாக கழற்றித் தரும் பக்தர்கள் தான் ஜனநாயகத்தில் பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்து இருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து திமுக, பாமக போன்ற கட்சிகளைத் தவிர வேறு யாருக்கும் மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. CPI எப்போதுமே அதிமுகவின் அடிமை என்பது எல்லோருக்கும் தெரியும். சசிகலா, அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை மனமார ஆதரித்தவர்கள். சசிகலாவிற்குப் பின்னால் தெரியும் ஒளிவட்டத்தை முதலில் கண்டுபிடித்தது தா.பாண்டியன் தான். ஆனால் CPM, சசிகலாவை முதலில் ஆதரிக்கவில்லை. துணைவேந்தர்கள் சசிகலாவை சந்தித்ததையே பொறுத்துக் கொள்ளாமல் அதைக் கடுமையாக எதிர்த்தவர் ஜி. ராமகிருஷ்ணன். ஆனால் DYFI மீதான அதிமுக அரசின் கொலைவெறித் தாக்குதலும், எங்கே முத்தரசன் முந்திக்கொண்டுபோய் அதிகமான சீட்டுக்களை வாங்கி விடுவாரோ என்ற பயமும் ஒருங்கே சேர்ந்து, ஜி.ராமகிருஷ்ணை இன்று ஊழல் பேர்வழியான சசிகலாவை ஆதரிக்க வைத்துள்ளது.
உண்மையிலேயே முத்தரசனும், ஜி.ராமகிருஷ்ணனும் நேர்மையானவர்கள் என்றால் சசிகலாவை ஆதரித்த அதே வாயால் சசிகலாவின் மீது நீதிமன்றங்களில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கு, அமலாக்கபிரிவு வழக்கு போன்றவற்றைப் பற்றி வாய் திறக்க வேண்டும். ஒரு பக்கம் மணற்கொள்ளைக்கு எதிராகப் போராடுவது, மறுபக்கம் தமிழகம் முழுவதும் மணற்கொள்ளையில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்த மன்னார்குடி கும்பலை ஆதரிப்பது. என்னங்க தோழர்களே... உங்க அரசியல் சாணக்கியத்தனம்!. சசிகலா தலைமையில் தமிழ்நாட்டில் அடுத்து ஒரு மாபெரும் புரட்சியை கம்யூனிஸ்ட்கள் கூடிய விரைவில் நிகழ்த்துவார்கள் என நாம் எதிர்ப்பார்க்கலாம்.
அரியலூர் நந்தினிக்கு நீதி கேட்டுப் போராடச் சென்ற அண்ணன் திருமா அப்படியே சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை வரவேற்றுள்ளார். ஏற்கனவே சசிகலாவை முதல் ஆளாகப் போய் பார்த்து, துண்டு போட்டு வந்ததன் தொடர்ச்சியாக இதை நாம் பார்க்க வேண்டும். ஊழல் எதிர்ப்பில் CPI மற்றும் CPM நிலைப்பாடு என்னவோ அதே நிலைப்பாடுதான் அண்ணன் திருமாவின் நிலைப்பாடும். மேலும் திருமா அவர்கள் பெண்ணுரிமையில் மிகுந்த பற்றுள்ளவர். அவருக்கு நந்தினி, சசிகலா, மாயாபென் கோட்னானி எல்லோரும் ஒன்றுதான். பிழைப்புவாதம் என்ற கொள்கைக்குள் பெண்ணுரிமையைப் புகுத்தி, அதை புரட்சி வடிவத்தில் விற்பனை செய்வதில் அண்ணன் கைதேர்ந்தவர்.
பொதுவாக இவர்கள் அனைவருக்கும் அண்டிப்பிழைப்பதற்கு ஒரு கட்சி எப்போதுமே தேவைப்படுகின்றது. ஒட்டுண்ணிகள் போல சார்ந்தே வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள். தனித்து இயங்கும் திராணியற்றவர்கள். அதனால் சசிகலா அல்ல, வேறு எந்த 420 ஆக இருந்தாலும் இவர்கள் ஆதரிக்கத்தான் போகின்றார்கள். இவர்கள் எல்லாம் சசிகலாவை ஆதரிக்காமல் இருந்தால் தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும்.
சரி, இவர்கள் எல்லாம் தேர்தலில் பங்கெடுப்பவர்கள், அதனால் வேறு வழி இன்றி சீட்டுக்காக எப்படி வேண்டுமானாலும் ஆடுவார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் தமிழினத் தலைவர் எதற்காக சசிகலாவை துரத்தி துரத்தி ஆதரிக்கின்றார் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் நிறைய தமிழினத் தலைவர்கள் இருப்பதால் நாம் தெளிவாக பெயர் சொல்லியே சொல்லிவிடுவோம். அதுதாங்க கி.வீரமணி அவர்கள். சசிகலாவிற்கும், திராவிட இயக்க கருத்தியலுக்கும் எள்ளளவு சம்மந்தமும் இல்லை என்றாலும், இன்னும் சொல்லப்போனால் ஜெயலலிதாவும், சசிகலாவும் சேர்ந்து தமிழ்நாட்டில் திராவிட இயக்கக் கருத்தியலையே எள்ளி நகையாடியதும், அதிமுக தொண்டர்களை பார்ப்பன கருத்தியலுக்கு பஜனை பாடும் அடிமைகளாக வளர்த்தெடுத்ததும் அவருக்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கின்றது என்று நினைக்கின்றேன். அதனால் தான் பெரியாரின் கருத்தை தமிழ்நாட்டில் குழிதோண்டி புதைப்பதற்கு சசிகலாவை விட்டால் வேறு சிறந்த ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்று மனதார அவரை ஆதரிக்கின்றார். கி.வீரமணிக்குத் தெரியாதது ஒன்றும் அல்ல, கொள்கை முக்கியமா? ஊழல் செய்து சொத்துச் சேர்ப்பது முக்கியமா? என்றால் கி.வீரமணி முதலில் சொத்துச் சேர்ப்பதற்குத் தான் முன்னுரிமை தருபவர். கொள்கையை விற்று காசாக்கும் தந்திரத்தை வீரமணியை விட வேறு யாரிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள முடியாது.
எனவே தோழர்களே, இந்தத் தேர்தல் ஜனநாயகத்தில் அதிகபட்சமாக நம்மால் இதைத்தான் எதிர்ப்பார்க்க முடியும். நாம் மோடியை ஏற்றுக் கொண்டோம், ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்டோம், அதே போல சசிகலாவையும் ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்வோம். அடுத்து உள்ளாட்சித் தேர்தலும், இடைத்தேர்தலும் வருகின்றது. சின்னம்மா உங்களை எல்லாம் மிகச் சிறப்பாக கவனிப்பார். சிக்கன் பிரியாணிக்குப் பதில் மட்டன் பிரியாணி கூட வழங்கப்படலாம். தற்போது சராசரியாக ஆயிரம் ரூபாய் என்று குடிமக்கள் ஓட்டு போடுவதற்காக வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி சின்னம்மா அவர்கள் ஜனநாயகத்திற்குச் சிறப்பு சேர்க்கலாம். சின்னம்மாவின் ஆட்சியின் கீழ் நாம் தமிழ்நாட்டில் வாழ்வதற்கு நாமெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஜனநாயகத்தின் அனைத்து பரிமாணங்களையும், அதன் மகிமைகளையும் உங்களுக்கு அவர் தன்னுடைய செயல்பாட்டால் விளங்க வைப்பார். தமிழக மக்களுக்கு ஞானம் கொடுக்க வந்த பெண் புத்தர் அவர். கூடிய விரைவில் தமிழக மக்கள் தங்கள் துன்பத்திற்கான காரணங்கள் என்னவென்று மண்டையில் உறைக்கும்படி புரியவைப்பார். பல மார்க்சிய- பெரியாரிய அமைப்புகளால் பல ஆண்டுகளாக முயன்றும் செய்ய முடியாத பணியை அம்மையார் சசிகலா அவர்கள் கூடிய விரைவில் செய்து முடிக்கப் போகின்றார். அதற்காக அவருக்கும் அவரை ஆதரித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நாம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
- செ.கார்கி