அண்மையில் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணமுல் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு), ராஷ்டிரிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், வி.சி.க, தேசிய மாநாட்டுக்கட்சி, ம.தி.மு.க, கேரள காங்கிரஸ், ஆர்.எஸ்.பி, ஆர்.எல்.பி, பாரத் ஆதிவாசி கட்சி, கேரள காங்கிரஸ் (எம்), பார்வார்டு பிளாக், விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, கோவா முன்னேற்றக் கட்சி ஆகிய 23 கட்சிகள் பங்கேற்ற போதிலும், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்தும் த.வெ.க பங்கேற்கவில்லை.

rahul gandhi 390பா.ஜ.கவை கொள்கை எதிரி என்று அறிவித்ததுடன் வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதாகவும் கூறிக் கொள்ளும் த.வெ.க இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்தது ஏன் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற விஜய் தனது முதல் டெல்லி பயணத்தில் சோனியா மற்றும் ராகுல் உடனான சந்திப்பை திடீரென ரத்து செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு "மக்களவையில் பிரதிநிதித்துவம் இருக்கும் கட்சிகள் மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்றதால் த.வெ.க பங்கேற்கவில்லை" என்று காங்கிரஸ் சப்பைக்கட்டு கட்டியது. ஆனால் உண்மையில் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கேரள காங்கிரஸ் (எம்), பார்வார்டு பிளாக், விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, கோவா முன்னேற்றக் கட்சி ஆகிய 4 கட்சிகளுக்கு மக்களவையில் பிரதிநிதித்துவம் இல்லை. இதன் மூலம் பா.ஜ.கவை பகைத்துக் கொண்டு இந்தியா கூட்டணியில் இடம் பெறுவதை த.வெ.க விரும்பவில்லை என்பது புலனாகிறது. பா.ஜ.கவை எதிர்ப்பதில் போதிய தெளிவும், துணிவும் இல்லாத த.வெ.கவுக்காக இந்தியா கூட்டணியை உருவாக்கிய தி.மு.கவுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்திருப்பது பற்றி இந்தியா கூட்டணிக் கட்சிகள் இக்கூட்டத்தில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தின.

"மாநிலக் கட்சிகள் வலுவாக இருக்கும் இடங்களில் அவற்றுடன் போட்டி போடுவதற்கு பதிலாக காங்கிரஸ் அவர்களை ஆதரிக்க வேண்டும்" என்று சமாஜ்வாதித் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்களும், "இரண்டு அமைச்சர் பதவிகளுக்காக, நம்பகமான கூட்டாளியான தி.மு.கவை காங்கிரஸ் கைவிட்டு விட்டது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் அவர்களும், "சமீபத்திய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கையாண்ட தேர்தல் வியூகம், இந்தியா கூட்டணியின் வலுவான தூண்களாக இருக்கும் மாநிலக் கட்சிகளைப் பலவீனப்படுத்தி உள்ளது. கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் எடுத்த தன்னிச்சையான முடிவுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், திமுக ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு உகந்தது அல்ல என்பதால் காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்தனர்.

"இந்தியா கூட்டணிக்குள் மீண்டும் தி.மு.கவைக் கொண்டுவர காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராஷ்ட்ரியா ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் அவர்களும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா அவர்களும் வலியுறுத்தினர். இவ்வாறு இக்கூட்டத்தில் தி.மு.கவை காங்கிரஸ் கையாண்ட விதம் குறித்து இந்தியா கூட்டணியின் பெரும்பாலான கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.

கேரள‌ முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை, மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்பு மனு தள்ளுபடி போன்ற எந்த ஒரு விவகாரத்திலும் பா.ஜ.கவையும், ஒன்றிய அரசையும் கண்டித்து குரல் கொடுக்கத் தயங்கும் த.வெ.கவை கண்மூடித்தனமாக காங்கிரஸ் ஆதரிப்பது இந்தியா கூட்டணி கட்சிகளின் மத்தியில் காங்கிரஸ் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாநிலக் கட்சிகளின் வலிமையை ஒடுக்க நினைக்கும் பாஜகவின் செயல் திட்டத்திற்கு காங்கிரசும் துணை போகிறதா என்கிற சந்தேகம்‌ நமக்கு எழவே செய்கிறது.

இந்திய ஒன்றியத்தின் இறையாண்மையை காத்திட, பா.ஜ.க - காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணி தேசிய அளவில் அமைந்திட வேண்டும் என்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது. சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் தலைமையில் 'தேசிய முன்னணியை' தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கியதைப் போல, இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது தேசிய அளவில் பா.ஜ.க - காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். அவரது முன்னெடுப்பில் அக்கூட்டணி‌ சாத்தியமாகும். அதன் வெற்றி சரித்திரமாகும்!

- வழக்கறிஞர் இராம.வைரமுத்து