உரிமைகளைப் பெறவேண்டுமென்றால், மக்கள் போராடித்தான் ஆக வேண்டும். போராட்டம் மக்களின் வாழ்வுரிமை.

ஆனால் போராட்டமே வாழ்கையாகிப் போனால் என்ன செய்வது?

போராட வேண்டும் என்பது மக்களின் விருப்பமில்லை. அவர்கள் வாழ்க்கையில் போராட்டத்தைத் திணித்துக் கொண்டிருக்கிறது இன்றைய எடப்பாடி அரசு.

காவிரிப் பிரச்சனை

நீட் தேர்வு

சமஸ்கிருத வார விழாவும் இந்தி திணிப்பும்

பல்கலைக்கழக முறைக்கேடுகள்

நியூட்ரினோ திட்டம்

கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தூப்பாக்கிச் சூடு

சேலம் எட்டு வழிச்சாலை

போன்ற மக்களுக்கு எதிரான நிலைபாட்டில் மத்திய, மாநில அரசுகள் முனைப்புக் காட்டுவதால் மக்கள் போராட்டக் களத்திற்கு வருகிறார்கள்.

அரசுக்கு எதிராகக் கருத்துச் சொன்னால் அல்லது பேசினால் கைது நடவடிக்கை என்பது ஜனநாயகம் அல்ல. அது சர்வாதிகாரத்தின் உச்சம்.

சட்டமன்றத்தில் தூத்துக்குடி பற்றிப் பேச அனுமதி மறுக்கிறார் பேரவைத் தலைவர்.

ஆளுநரின் மாநில உரிமை மீறலைத் தட்டிக் கேட்கத் திராணியற்ற அரசாக இருக்கிறது தமிழக எடப்பாடி அரசு.

முதல்வரானாலும் சரி, பிற அமைச்சர்கள் ஆனாலும் சரி ஆளுநருக்குப் பக்கபலமாகப் பேசுவது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார்கள்.

ஸ்டெர்லைட், நியூட்ரினோ, சேலம் எட்டு வழிச் சாலைகள் போன்றவற்றில் கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமாக மத்திய அரசு போகிறது, தமிழக அரசின் துணையோடு.

பா.ஜ.க.வுக்குத் தமிழக மக்கள் சாதகமாக இல்லை என்ற காரணத்தால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு ஆடிய ஆட்டம், நடித்த நாடகம் சொல்லும் தரமன்று.

அதனால் தமிழக டெல்ட்டா மாவட்டங்கள் காய்ந்து கருகிக்கொண்டிருக்கின்றன.

இவைகளைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் ‘இம்’ என்றால் கைது, ‘ஏன்’ என்றால் சிறை போன்ற நடவடிக்கைகள் நேர்மையான அரசுக்கு அழகல்ல.

மக்கள் போராட்டம் புரட்சியாக வெடிக்கும்போழுது எத்தனையோ அரசுகள் காணமால் போயிருக்கின்றன, என்பது உலக வரலாறு.

இன்னும் ஓர் ஆண்டுதான் இருக்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசையும், மாநில அ.தி.மு.க. அரசையும் தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டார்கள்.

மக்கள் விரும்புவது போராட்டத்தையன்று, அமைதியை!

புயலுக்குப் பின் அமைதி என்பது இயற்கையின் நியதியல்லவா!

Pin It