2017 ஆம் ஆண்டு மோடி - எடப்பாடி கூட்டணியின் சதியால் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் நுழைக்கப் பட்டபோது நீட்டுக்கு எதிரான தமிழ்நாட்டின் போராட்டம் என்பது தமிழ்நாட்டிற்காக மட்டுமல்லாது, இந்தியா முழுமைக்குமான எதிர்ப்பாகவே இருந்தது.

திராவிடமாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் ஆய்வுக்குழு அறிக்கை நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக சமூகநீதிக்கு எதிரான சூழ்ச்சித் திட்டம் என்றே அம்பலப்படுத்தியது.

இந்தியா முழுவதும் இன்றைக்கு அம்பலப்பட்டு, அசிங்கப்பட்டு நிற்கிற நீட் சூழ்ச்சித் தேர்வை மோடியரசு இனியும் காலதாமதமின்றி, மானவெட்கம் பாராமல் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

பலியாகிக் கொண்டிருக்கிற எங்கள் பிள்ளைகளின் உயிரிழப்புகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நீட் தேர்வுக்கு எதிரான தனித் தீர்மானத்திற்குக் குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும், என்கிற முழக்கங்களோடு தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் 'திராவிட மாணவர் பேரவை' யின் மூலமாகப் போர்முழக்கம் செய்வதென திராவிட இயக்கத் தமிழர் பேரவை திருச்சியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தலைமையில் திருச்சிப் பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றியிருக்கிறது.

அதன்படி, கல்விக்கண் கொடுத்த காமராசரின் பிறந்தநாளன்று , தமிழ்காக்கும் உரிமைப் போரில் தண்டவாளத்தில் படுத்துத் தலைகொடுக்கவும் துணிந்த தலைவர் கலைஞர் அவர்களின் கல்லக்குடிப் போராட்டம் நடந்த அதே ஜூலை 15 அன்று, சென்னை, கோவை, மதுரை, திருவாரூர் ஆகிய நான்கு நகரங்களிலும் நீட்டுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.

மாணவர்கள், இளைஞர்கள் பெருந்திரளாய்ப் பங்கேற்று நீட் ஒழிப்புப் போராட்டத்தை வெல்லச் செய்வோம்!

 "கட்டுத் தொலைந்ததென்று கொட்டு முரசே!" என்ற புரட்சிக் கவிஞரின் வரிகளுக்கு உயிர் கொடுப்போம்!!

- காசு.நாகராசன்