ஆங்கில மூலம்: இரா.ம. கார்த்திக், உதவிப் பேராசிரியர், CSSSC

தமிழாக்கம்: விலாசினி ரமணி

‘நீட்’ தேர்வின் பிரச்சனைகள் நிறைய விமர்சகர்களால் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டுவிட்டன. ஒரு வருடம் முன்பு வங்க சிந்தனையாளர் மற்றும் செயற்பாட்டாளருமான கார்கா சேட்டர்ஜி, மாநிலங்களின் முதலீட்டில், மத்திய உயர்கல்வி பாடத்திட்டத்தின் (C.B.S.E) வழி, மேட்டுக்குடிகளுக்கும் அவர்களால் நிரம்பியிருக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் ‘நீட்’ எவ்வாறு பலம் சேர்க்க துணைபுரிகிறது என்று எழுதியிருந்தார்.

tn medical college students

மருத்துவர் எழிலன் நாகநாதன், தமிழ் பகுத்தறிவாளர் மற்றும் செயற்பாட்டாளர், இரண்டு மாநில குடிமைகள் (dual nativity) எவ்வாறு தமிழ் மாணவர்களின் (OBCs,MBCs,SC/STs) நலனுக்கு எதிராக ஏமாற்றிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை சமீபத்தில் வெளிப்படுத்தினார். சமூக வலைதளங்களிலும், இதர வெளிகளிலும் இவ்விருவருடன் இணைந்து எண்ணற்ற மற்ற செயற்பாட்டாளர்களும் ‘நீட்’டின் பிரச்சனைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பதினாறு வயதேயான ஒரு ஏழை தினக்கூலியின் மகளான அனிதா என்பவர், பனிரெண்டாவது முழுத்தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றும் தற்கொலை செய்துகொள்கிறார். உண்மையில் அவர் உயிருடன் இருந்திருந்தால் ஒரு புகழ்பெற்ற மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க சேர்ந்திருக்கக்கூடும். சில அறிக்கைகளின் படி, அது நடந்திருந்தால் குழுமூர் கிராமம் அரியலூர் ஊராட்சியிலிருந்து அனிதாதான் தன் சமூகத்தின் முதல் மருத்துவராகியிருப்பார்.

பெரும்பான்மை தமிழ்நாட்டு மாணவர்களின் பயிற்றுமொழியான தமிழ்வழிக் கல்வியில்தான் அனிதாவும் பயின்றார். மேற்குறிப்பிட்ட கட்டுரையில் கார்கா குறிப்பிடுவதுபோல், “மஹராஷ்டிர மாநிலத்தில் மாநில பாடத்திட்டத்தின்கீழ் பனிரெண்டாவது படிப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே மொத்த இந்தியாவிலும் படிக்கும் சி.பி.எஸ்.இ மாணவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.” இதே சமமின்மைதான் தமிழ்நாட்டிலும்; சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயில்வோரின் எண்ணிக்கை மாநில பாடத்திட்டத்தில் பயில்வோரைவிட மிக மிகக் குறைவு. ‘நீட்’டினால் ஏற்படும் மிக முக்கிய அநீதி என்று சொன்னால் அது சி.பி.எஸ்.இ.யில் பயிலும் சொற்ப மாணவர்களுக்கு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களை பின்னுக்குத்தள்ளி மருத்துவக் கல்லூரிகளில் சுலபமாக இடம்பெறச் செய்வதுதான். அப்படி மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெறும் இவர்கள் ஒவ்வொருவரும் அனிதாவின் மரணத்தால் நன்மையடைந்தவர்கள் என்று சொன்னால் மிகையாகாது.

தமிழ் மாநில பாடத்திட்டம் என்று கூறுவதாலேயே அனைத்து பள்ளிகளும் தமிழ்வழிக் கல்வி போதிப்பவை என்றாகாது. அதே நேரம் சி.பி.எஸ்.இ பள்ளிகளைவிடவும் இக்கல்விமுறை மாணவர்களுக்கு தாங்கள் சார்ந்த இடம் குறித்த ஒரு அணுக்கத்தை ஏற்படுத்தித்தருகிறது எனலாம். ஒரு கணிசமான எண்ணிக்கையிலான பள்ளிகள் தனியார் பள்ளிகளாக இருந்தாலும் அவை பெரிய வசதிகளற்று சிறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பிற்தங்கிய சமுதாய மாணவர்களுக்கு கல்வியைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அதற்கு நேரெதிராக, சி.பி.எஸ்.இ பள்ளிகளோ சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்குள்ளோ அவைகளின் அருகாமையிலோ இங்கிருக்கும் அல்லது வடக்கிலிருந்து வரும் வசதி படைத்த மாணவர்களுக்காகவே இயங்குகின்றன.

இங்கு தோராயமாக 600 சி.பி.எஸ்.இ பள்ளிகளும் 2,500 அரசுப் பள்ளிகளும் உயர்கல்வி வழங்கி வருகின்றன (இதில் தனியார் நடத்தும் மாநில பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் பள்ளிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை). அதிலும், 600 என்பது மொத்த சி.பி.எஸ்.இ பள்ளிகள்; அவற்றுள் உயர்கல்வி வழங்கும் பள்ளிகளின் எண்ணிக்கை நிச்சயம் இன்னும் குறைவுதான்.  

தமிழ்நாடு, மாணவ சேர்க்கை விகிதாச்சாரம் (GER) அதிக அளவு கொண்ட மாநிலங்களில் ஒன்று; தேசிய அளவைவிட இது இருமடங்கு. மாணவிகளின் சேர்க்கை விகிதம் 42.7%; தேசிய அளவில் இது வெறும் 22.7% சதவீதம் மட்டுமே. 2012 கணக்கின்படி, தொடக்கக்கல்வி சேரும் மாணவர்கள் நூறு சதவீதம் அதை முடிக்கிறார்கள், மற்றும் தொடக்கக்கல்வி முடிப்பவர்களில் 45% கல்லூரிகளில் இடம்பெறுகிறார்கள். தங்களது சமூக முதலீட்டின் பயனால் சி.பி.எஸ்.இ-யில் உயர்கல்வி பெற்ற ஒவ்வொரு மாணவரும் கல்லூரிக்குள் செல்லமுடிகிறது என்பதும், தமிழ்நாட்டில் கல்லூரிகளில் சேர (மருத்துவக் கல்லூரிகள் உட்பட) விண்ணப்பிக்கும் பெரும்பான்மை மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தின்கீழ் பயின்றவர்கள் என்பதும் கல்விச் செயற்பாட்டாளர்களின் ஒருமிக்கக் கருத்து. இதனால் இயல்பாகவே போட்டி மிகக் கடினமானதொன்றாக ஆகிறது; அசாதாரண மதிப்பெண்கள் பெறுவோர் மட்டுமே மருத்துவம் படிக்க இயலும்.

‘நீட்’டிற்கு முன்னால், தமிழ்நாட்டில் அரசாங்கக் கல்லூரிகளில் தோராயமாக இருக்கும் 2500 மருத்துவ படிப்பிற்கான இடங்களில், 69% BC, MBC, SC/ST மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் மிகக் குறைந்த வித்தியாசம் கொண்டவையே. உதாரணத்திற்கு, பிரபலமான சென்னை மருத்துவக் கல்லூரியில் (Madras Medical College) சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள், 2014 கணக்கின்படி, பொதுப்பிரிவு : 199.5, பிற்படுத்தப்பட்டோர் : 199.25, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் : 198.75, மற்றும் தாழ்த்தப்பட்டோர் : 196.75. இத்தகவல் ஒன்றே போதும் இம்மாணவர்களுக்கு “தகுதி இல்லை” என்ற குற்றச்சாட்டை ஒதுக்குவதற்கு. இத்தகைய இடஒதுக்கீட்டு முறை நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் அதே வேளையில் கல்வித்தரத்திலும் சமரசம் கொண்டிருக்கவில்லை.

‘நீட்’டின் அறிமுகம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமாகவிருப்பதால் இத்தரம் தாழ்த்தப்பட்டுள்ளது. ‘நீட்’டினால் தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய மருத்துவக் கல்லூரிகளில் பெரும்பான்மையான இடங்கள் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன என்று இவ்வறிக்கை தெரிவிக்கிறது. களத்தில் இயங்கும் செயற்பாட்டாளர்கள் கூற்றுப்படி தோராயமாக ‘நீட்’டின் உபயத்தால் மருத்துவம் சேரும் மாணவர்களில் 35% சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயின்றவர்கள். இதனால் மீதமுள்ள பெரும்பான்மை இடங்கள் மாநில பாடத்திட்டம் பயின்றோருக்கு சென்றதாகத் தோன்றலாம்.

ஆனால் இந்த அறிக்கையை இன்னும் சற்று ஆழ்ந்து நோக்கினால்தான் எவ்வாறு மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களைவிட சி.பி.எஸ்.இ மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் சுலபமாக தேர்ச்சி பெறுகின்றனர் என்பது விளங்கும். அதாவது, ‘நீட்’ தேர்வெழுதும் சி.பி.எஸ்.இ மாணவர்கள் மிகச் சிலரே என்றாலும் அவர்களின் தேர்வு விகிதம் மிக அதிகம். ‘நீட்’ தேர்வு பனிரெண்டாம் வகுப்பு ஆண்டுத் தேர்வின் மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாதது, ‘நீட்’ தேர்வின் கேள்வி அமைப்பு, சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குப் பழக்கமான பன்முகத் தெரிவு வினாக்கள், மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கேள்விகளின் தெளிவின்மை இவையெல்லாமும்தான் மாணவி அனிதாவிற்கு எதிராக சதிசெய்தவை. இவையெல்லாமும் ஒரு அரோக்கியமான போட்டி சூழலை உருவாக்காமல் மாணவர்களுக்கிடையில் பாகுபாட்டை வளர்க்கின்றன.

எனக்கும் ஒரு ஆறு வருடங்கள் சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடத்தில் படிக்கும் துர்பாக்கியம் ஏற்பட்டது. என் வாழ்க்கையின் மிக மோசமான தினங்கள் அவை என்று கூறலாம். தமிழ் நிலத்தில் கட்டப்பட்ட ஒரு பள்ளியாக இருந்தாலும் அது இயங்கியது என்னவோ ஒரு காலனீய நிறுவனம் போலத்தான். அது ஓர் ஆங்கில வழி பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடம் ஆதலால் தமிழில் பேசுவது முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. மீறுபவர்களுக்கு அடி விழும் அளவிற்கு தண்டனை இருக்கும். ஆனால், அங்கு ஹிந்தி பேசுவது வளர்த்தெடுக்கப்பட்டது. பள்ளிக்கூடத்தில் பிரபலம் என்றால் பாலிவுட்டின் அனைத்து பாடல்களும் தெரிந்தவர்கள் என்று அர்த்தம். தமிழ் மொழி பரிகசிக்கப்பட்டது. தமிழை இரண்டாம் அல்லது மூன்றாம் மொழியாக தேர்வுசெய்தவர்கள் இளக்காரமாகப் பார்க்கப்பட்டார்கள்.

இதைப்போன்ற கல்வி ‘நிறுவனங்க’ளுக்கு ‘நீட்’ ஒரு வரப்பிரசாதம். எந்தவொரு சமூகப் பிரக்ஞையுமின்றி அவை உற்பத்திசெய்பவை வெறும் எந்திரங்களைத்தான்.

அதிர்ஷ்டவசமாக, அத்தகைய பள்ளியிலிருந்து வெளியேறி வேறொரு பள்ளியில் சேர்ந்து, என்னால் மருத்துவம், பொறியியல் அல்லாத வாழ்க்கைக்குத் தேவையான வேறு படிப்பை தெரிவு செய்ய முடிந்தது. ஆனால், கிராமப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது வெறும் நடுத்தர வர்க்கத்தின் கனவு மட்டுமே அல்ல. பல சமயங்களில் இச்சமூகத்திற்கு தங்களை ஒப்புக்கொடுக்கும் அர்ப்பணிப்பாகவும் அது இருக்கும். அனிதாவின் ஊரான அரியலூரில் மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற, மாநிலத்தின் பரவலான இடஒதுக்கீட்டினால் பயனடைந்த இதே தமிழ் மாணவர்கள்தான்.

விமர்சகர்கள் குறிப்பிடுவதுபோல், ‘நீட்’, அனிதாவால் அடையமுடியாத சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சிந்தனைமுறைக்கு, சாதகமாக இருக்கிறது, மேட்டுக்குடி சிலர் சமூக வலைதளங்களில் அனிதாவால் சாதிக்கமுடியவில்லை என்பதுபோன்று வைக்கும் வன்மம் நிறைந்த குற்றச்சாட்டுகள் நகைப்பிற்குரியன மட்டுமல்ல, எதிர்பார்க்கப்பட்டவையும்தான். மீனின் திறனை அது மரமேறும் ‘தகுதி’யை வைத்து கணக்கிடும் அக்கிரம் ஒருபுறமிருக்கட்டும், உள்ளபடியே மற்ற மாநிலங்களைவிட மருத்துவ/சுகாதார துறையில் முன்னேறிய மாநிலங்களாகத் திகழும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் ‘நீட்’ தேர்வுமுறை எந்த மேம்பாட்டையும் வழங்கமுடியும் என்று எவ்வித ஆதாரங்களும் இதுவரை இல்லை. அனிதா போன்றோரின் இடங்களைப் பறித்துக்கொள்ளும் உயர்சாதி/வர்க்கக் குடிகள், ஹிந்தி பேசாத மாநிலங்களின் பாடத்திட்டத்தில் பயிலும் மருத்துவர்களைவிடவும் வல்லவர்கள் என்று நிரூபிக்கவும் இதுவரை எந்தவொரு தரவோ, சமூகவியலின் அடிப்படையிலான வாதமோ இல்லை.

பொருளாதார வசதியற்ற, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து, ஒற்றை பெற்றொரின் வளர்ப்பில், வளர்ச்சியடையாத கிராமத்தின் ஒரு சிறிய வீட்டில் வளர்ந்தாலும் அனிதா ஒரு புகழ்பெற்ற மருத்துவராகி அக்கிராமத்தில் இருக்கும் மற்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வழிகாட்டியாகக் காட்டக்கூடியவராக இருந்திருப்பார். உச்சநீதிமன்றம் வரை சென்று தன்னைப்போன்ற ஆயிரக்கணக்கான மாணவர்களுக்காக ‘நீட்’டிற்கு எதிராகப் போராடிய அனிதா ஒரு வெற்றியாளர். நொறுக்கப்பட்ட கனவுகளும், அங்கீகரிக்கப்படாத முயற்சிகளும் அவரை தற்கொலைக்குத் துரத்தின. ‘நீட்’ குறித்த ஆரம்பகால குழப்பங்கள், நியாயமான வாதங்கள் வைத்தபோதும் அதைப் புறந்தள்ளி ‘நீட்’டை நம்மீது திணிக்கும் பா.ஜ.க.வின் வரட்டுப் பிடிவாதமும், அதற்கு ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.கவின் எதிர்ப்பற்ற அணுகுமுறையும் அனிதாவின் மரணத்திற்குக் காரணமாகின என்பதை நாம் மறக்கக்கூடாது.

அரைநூற்றாண்டிற்கு முன்பு காங்கிரஸ் அரசாங்கம் தமிழர்கள் மீது ஒருதலைப்பட்சமாக நடத்திய இந்தி திணிப்பு இங்கு எவ்வாறு அக்கட்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கி திராவிட ஆட்சிக்கு வழிவகுத்தது என்பதை நினைவில்கொள்வோம். தமிழ்நாட்டின் சமூகநீதித் திட்டங்களைக் குலைக்க முயலும் பா.ஜ.கவின் ‘நீட்’ மற்றும் மற்ற முயற்சிகள் எங்கு கொண்டு செல்லும்? இங்கு மாணவர்கள் ஏற்கெனவே தெருவில் இறங்கிவிட்டார்கள். அனிதாவின் மரணத்தால் கிளர்ந்தெழுந்தவர்கள் அச்சிறுமியின் தியாகத்தை வீணாக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

References:

https://scroll.in/article/808025/part-i-why-the-side-effects-of-neet-are-much-more-damaging-than-the-disease-it-claims-to-cure

http://www.thehindu.com/news/cities/chennai/four-candidates-with-dual-nativity-certificates-withdraw-from-medical-counselling/article19572053.ece

http://www.icbse.com/schools/state/tamilnadu

https://tnschools.gov.in/images/stories/pdf/policy/statistics%20performance%20English%2020-04-12.pdf

http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/tn-first-in-gross-enrolment-ratio/article7096855.ece

http://www.educationinnovations.org/sites/default/files/India%20-%20State%20Education%20Report%20-%20Tamilnadu.pdf

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/aug/26/cbse-students-bags-more-seats-in-top-medical-colleges-in-tamil-nadu-1648321.html

Pin It